Monday 21 February 2011

பிரிஸ்பேனில் இன்னிசை சொற்பொழிவு


இன்று பிரிஸ்பேனில் 'கவியரசர் ஒரு புவியரசர்' என்ற தலைப்பில் இன்னிசை சொற்பொழிவு நடந்தது. தமிழகத்திலிருந்து வருகை தந்திருந்த திரு. அரங்க நெடுமாறன் இச்சொற்பொழிவை நடத்தினார்.

பிரிஸ்பேன், கார்டன் சிட்டி வணிக வளாகத்திலுள்ள நூலக அரங்கத்தில் நடந்த இந்நிகழ்ச்சிக்கு சுமார் 30 பேர் வந்திருந்தனர். பிரிஸ்பேனுக்கு இது பெரிய கூட்டம்தான்.

தமிழகத்திலுள்ள மேடைப் பேச்சுக்களை நினைவு படுத்தும்படி இருந்தது. பட்டிமன்ற பானி நகைச்சுவைகளுடன் இந்துமதம் சோதிடம் என்று தலைப்பில் பலதகவல்களை தந்தார்.

கவிஞர் கண்ணதாசனின் பாடல்களை அவ்வப்போது பாடி மேற்கோள்கள் காட்டியது சிறப்பாக இருந்தது. சொற்பொழிவை குறித்த நேரத்துக்குள் முடித்தது பாராட்டவேண்டிய ஒன்று.

கடைசியில் கேள்வி பதில் பகுதியில் சுமார் 12 வயதுடைய சிறுமி - முருகன் 2 மனைவிகள் வைத்திருப்பதால் அவர் நல்லவரா கெட்டவரா என்று பொருள்படும்படி ஒரு கேள்வி கேட்டு, சொற்பொழிவாற்றியவரை திணரடித்தது!
(பிரிஸ்பேன் நகருக்கு அடுத்துவர இருக்கும் தமிழ் அறிஞர்களே, இளைய தலைமுறையிடமிருந்து இது போன்ற கேள்விகளை எதிர்கொள்ள தயாராக வாருங்கள் ;) )

Friday 12 November 2010

சி(ச)ட்னி சாம்பார் 12 நவம்பர் 2010

(அவுஸ்திரேலிய அரசாங்கம் நடத்திய வாராந்த இந்தியக் கொண்டாட்டம் பரா மசாலாவின் கட் அவுட் ஒன்று)

நீண்ட நாளைக்குப் பின்னர் சாம்பாரும் கையுமா வந்திருக்கிறன். இதிலேயே நீண்ட நேரம் நிற்காமல் நேரா விஷயத்துக்கு வாறன்

19,350 நாட்கள் காக்க வைத்துக் கொடுத்த நூலகப்புத்தகம்


நியூசவுத்வேல்ஸ் மாநிலத்தில இருகிற நியூகாஸ்ட்ல் நகர நூலகத்தில் ஐம்பத்து மூன்று வருஷங் களுக்கு முன்னர் வாடகைக்கு எடுத்த புத்தகத்தை 19,350 நாட்கள் வெறித்தனமாக வைத்திருந்து இப்போது தான் திருப்பிக் கொடுத்திருக்கிறார் ஒரு மனுஷன். Knots, Splices and Fancy Work என்ற அந்த நூலை 1957 ஆம் ஆண்டு McLaren என்பவரே தனது 19ஆவது வயதில் நூலகத்தில் இருந்து வாடகைக்கு எடுத்திருக்கிறார். இப்பதான் அந்தப் புத்தகத்தைத் திருப்பிக் கொடுக்கவேண்டும் என்ற எண்ணம் அந்த மனுஷனுக்கு வந்திருக்கு. (இப்பவாவது வந்துச்சே என்று சந்தோஷப்படுங்கோ). புத்தகத்தின் இன்றைய கோலம் ஏறக்குறைய எண்பது வயது மூதாட்டியின் சீவப்படாத தலை போல இருந்தது வேறு விஷயம். புத்தகத்தைக் கொடுத்த கையோடு 5 ஆயிரம் டொலருக்குத் தண்டப்பணத்தையும் கொடுத்திருக்கிறார் நல்ல பிள்ளையாக, ஆனால் தண்டப்பணம் கிட்டத்தட்ட 27 ஆயிரம் டொலர் வரை போகும் என்று இவரைப் பேட்டி எடுத்த உள்ளூர்த்தொலைக்காட்சி நிருபர் ஆப்பு வைத்தது இன்னொரு சுவாரஸ்யம். எது எப்படியோ அவுஸ்திரேலிய வரலாற்றில் இதுவரை நடக்காத சாதனையை இவர் செய்து போட்டார் என்று பெருமைப்படுவோமாக.

காசு ஏற பிளேன் ஏறுவோம் வாடா

அவுஸ்திரேலிய டொலரின் மதிப்பு எந்திரன் ரஜினி கணக்காக எகிறி விட்டது. அமெரிக்க டொலர் இளைய தளபதி ரேஞ்சில் இருப்பதால் தான் இந்த நிலை, இதையெல்லாம் வச்சுக் கொண்டு அவுஸ்திரேலியப் பொருளாதாரம் ஏதோ உயரப்பறக்கிறது என்றெல்லாம் சீமான்கள் கற்பனை பண்ணக் கூடாது கண்டியளோ.
கூட வேலைபார்க்கும் சீனப்பெண் அமெரிக்க டொலரை எல்லாம் வாங்கி வச்சிருக்கிறாளாம். பின்னாளில் எடுத்துக் காட்டிப் பணத்தைக் கூட்ட உதவுமாம். சனம் எப்படியெல்லாம் சிந்திக்குது என்று பாருங்களேன். இது ஒருபுறமிருக்க வேலைத்தளங்களில் மும்முரமாக லீவு கேட்டு விண்ணப்பத்து சைக்கிள் கேப்பில் யூ எஸ் போட்டு வரலாம், காசை மிச்சம் பிடிக்கலாம் என்றும் ஒரு பெருங்கூட்டம். ஆனால் யூ எஸ், பிரிட்டன் ஆகிய நாடுகளில் இருந்து அவுசிக்குப் படையெடுக்கும் உல்லாசப்பயணிகள் எண்ணிக்கை 10 விழுக்காடுகளுக்கு மேல் சரிந்து விட்டதாகவும் செய்திகள் சொல்கின்றன. எந்த ஒரு தாக்கத்துக்கும் சமனும் எதிருமான தாக்கம் இருக்கும் தானே பாருங்கோ

கொஞ்ச நேரம் ஆணி பிடிங்கினால் போதும்


அதிர்ச்சி ஆனால் உண்மை என்ற ரீதியில் ஒரு தகவல். 1700 பேரை உட்படுத்திய ஒரு ஆய்வில் பெரும்பாலானோர் தாம் அதிகப்படியான வேலை நேரத்தில் வேலை செய்ய விரும்பவில்லை என்று சொல்லியிருக்கின்றார்கள். அதில் 80 வீதமானோர் ஓவர் டைம் என்னும் மேலதிக உழைப்பைக் கொடுப்பவர்கள் தொடந்தும் இதுமாதிரி ஓவர் டைமில் எமது டைமை வேஸ்டாக்க மாட்டோம் என்று கங்கணம் கட்டியிருக்கினம். இதைவிடக் கொடுமையான ஒரு தகவலைக் கேட்டால் உங்களுக்கு இன்னும் தலையைச் சுத்தும். கிட்டத்தட்ட இரண்டு மில்லியன் மணித்தியாலங்கள் செய்த உழைப்புக்கான ஊதியமாக எதுவுமே கொடுக்கப்படவில்லையாம். இது கிட்டத்தட்ட 72 பில்லியன் டொலர்கள் என்று கணிச்சிருக்கினம்.
முந்தின காலத்தில் தான் கையில காசு வாயில தோசை என்று டபுள் ஷிப்ட் எல்லாம் அடிப்பினம். இப்பதான் பார்ட் டைமா தோசை வித்தாவது உழைக்கலாம் தானே.

பரா மசாலா ஓவர்


நியூசவுத்வேல்ஸ் மாநில அரசாங்கமும், பரமற்றா நகர சபையும் ஆறு நாட்களாக நடத்திய பரா மசாலா ஒரு முடிவுக்கு வந்திருக்கு. இந்தியாவில் இருந்து பல்துறைக் கலைஞர்களைக் கொண்டுவந்து நிதமும் ஒரு கச்சேரி வைத்திருந்தாலும் வருண பகவானுக்குப் பொறுக்கவில்ல்லைப் போலும்.அழுது தீர்த்து விட்டார் மனுஷன். அதனால் இலவசமாகக் கொடுத்த களியாட்டங்களையே காணமுடியாமல் நொந்து நூடுல்ஸ் ஆகிவிட்டது சிட்னிச் சனம். என்னதான் இருந்தாலும் போன முறை இசைப்புயல் வந்து கலக்கிய அளவுக்கு இனியும் ஒரு நிகழ்ச்சி இருக்குமா என்று நினைத்துப் பார்க்க முடியவில்லை.

கட்அவுட் காணா அவுஸி சனத்துக்கு இந்தியப் பாரம்பரியப்பிரகாரம் கட் அவுட் எல்லாம் வைத்து அமர்க்களப்படுத்தி விட்டார்கள் வீதிகளை.

Sunday 31 October 2010

அவுஸ்திரேலிய அரசாங்கம் வழங்கவிருக்கும் தீபாவளி விருந்து Parramasala


கடந்த ஆண்டு அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் பரமற்றா உள்ளூராட்சி நிர்வாகத்தின் ஏற்பாட்டில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் மாபெரும் இசைவிருந்தொன்றை இலவசமாக வழங்கிச் சிறப்பித்திருந்ததும் இதற்கு 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்ட வரலாற்றையும் பலர் அறிந்திருப்பீர்கள். அந்த நிகழ்வை இங்கே இட்டிருக்கின்றேன் சிட்னியில் மையம் கொண்ட "இசைப்புயல்"

இந்த ஆண்டு மீண்டும் இன்னொரு பரிமாணமாக Parramasala என்னும் பன்முகக் கலைவிருந்தொன்றை மீண்டும் அவுஸ்திரேலியாவின் நியூசவுத்வேல்ஸ் மாநில அரசின் ஏற்பட்டில் வழங்கவிருக்கின்றார்கள். பெரும் எடுப்பிலான இந்த நிகழ்வை சிட்னியில் இந்திய சமூகம் பரவலாக இருக்கும் மேற்குப்பிராந்தியமான Parramatta என்ற நகரில் நடாத்தவிருக்கின்றார்கள். நியூசவுத்வேல்ஸ் மாநிலத்தின் இரண்டாவது பெரிய நகரமாக Paramatta நகரம் திகழ்வது குறிப்பிடத்தக்கது.

வரும் தீபாவளித் தினமான நவம்பர் 5 ஆம் திகதியை அடியொற்றி, நவம்பர் 4 ஆம் திகதியில் இருந்து நவம்பர் 8 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் இந்த Parramasala நிகழ்வை ஏற்பாடு செய்திருக்கின்றார்கள்.



நிகழ்வின் முத்தாய்ப்பாக கைலாஷ் கர் என்னும் வட இந்தியப் பாடகர், (அபியும் நானும் படத்தில் ஒரேயொரு ஊரிலே பாடலைப் பாடி இருந்தவர்) கலந்து சிறப்பிக்கும் மாபெரும் இசை நிகழ்வு, The Chennai Tapas என்ற தலைப்பில் காரைக்குடி மணி அவர்கள் கலக்கும் தாளவாத்தியக் கச்சேரி (கட்டணம் உண்டு), இந்தியாவின் கலைஞர்கள் அனில் ஶ்ரீநிவாசன், சிக்கல் குருசரண் வாய்ப்பாட்டு கலக்க அவுஸ்திரேலியாவின் புகழ்பூத்த நடனக் கலைஞர் ஆனந்தவல்லியின் நாட்டிய இசை விருந்து, The Guru of Chai என்னும் தலைப்பில் INDIAN INK THEATRE COMPANY (NEW ZEALAND)வழங்கும் நகைச்சுவை விருந்து, DESERT WEDDING என்னும் ராஜஸ்தானிய இசை விருந்து, பண்டிட் சித்ரேஷ் தாஸ் அமெரிக்கக் கலைஞர் ஜக் சாமுவேல்ஸ் ஸ்மித் உடன் TAP KATHAK என்னும் கதக் நடனச் சுவை, இங்கிலாந்தில் இருந்து Nitin Sawhney வழங்கவிருக்கும் இசைவிருந்து என்று இன்னும் பல படையல்களோடு அரங்கேறவிருக்கின்றது இந்த மசாலாக் கொண்டாட்டம்.

இவற்றோடு வருடாந்தம் இந்து கவுன்சில் நடத்தும் தீபாவளி விருந்து நிகழ்வும் வழக்கம் போல் நவம்பர் 6 சனிக்கிழமை Parramatta Park இல் நடக்கவிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

விதவிதமான ஆடல்கள் விதவிதமான பாடல்கள் விதவிதமான இசை, விதவிதமான உணவுகளோடு Parramasala இந்த ஆண்டின் முத்தாய்ப்பானதொரு விழாவாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

இந்த நிகழ்வுகளின் முழுமையான விபரங்களைப் பெற்றுக் கொள்ள

http://parramasala.com/events/day-by-day-festival-guide/day-by-day-festival-guide1

Sunday 24 October 2010

வானத்திலிருந்து விழுந்த நான்

 சென்ற வருடம் சிட்னி போக முன்பே மனதுக்குள் விமானத்தில் இருந்து பரசூட் மூலம் குதிக்கும் ஆசை வந்திருந்தது. ஏற்கனவே நோர்வேயில் முயற்சித்தது தான். இருப்பினும் அது விமானத்தில் இருந்து குதித்ததல்ல. ஒரு மலையுச்சியில் இருந்து குதித்தேன். நான் தரையிரங்கும் இடத்தில் எனது இரண்டு இளவரசிகளும் நின்றிருந்தார்கள்... பெருமையுடன்.
இறங்கியதும் சிட்டாய் வந்து கட்டிக்கொண்டார்கள்.....

சிட்னியில் விமானம் மூலம் பாயலாம் என்று அறிந்திருந்தேன். எனினும் வருவதற்கு ஒரு கிழமைக்கு முன்பு தான் இதைப்பற்றி சிந்திக்க நேரம் கிடைத்தது. இணையத்தில் தேடி ஒரு இடத்தைக் கண்டுபிடித்து அடுத்த நாள் பாய்வதற்கான ஒழுங்குகளையும் செய்து கொண்டேன்.

அண்ணண் இண்டைக்கு மண்டையப்போட்டாலும் என்று நினைத்தாளோ என்னவோ, தங்கை தானும் வருகிறேன் என்று மச்சானின் காரை அவரை வெருட்டி எடுத்துக்கொண்டு என்னையும் ஏற்றிக் கொண்டு வெளிக்கிட்டாள்.

கிட்டத்தட்ட 1,5 மணிநேரம் கார் ஓட்டம். நிம்மதியாய் நித்திரை கொள்ளலாம் என்றால் இண்டைக்குத் தான் அண்ணணுடன் கடைசியாகக் கதைக்கிறேன் என்ற மாதிரி வழி நெடுகிலும் கடித்துக் கொண்டு வந்தாள்.

இடத்தை நெருங்க வானத்தில் பல நிறங்களில் பரசூட்கள் தெரிந்தன. ஆடி ஆடி  மெதுவாய் இறங்கின. ஒருவரும் தொம் என்று என்று விழுந்து பயமுறுத்தவில்லை.

காரை நிறுத்தியதும் கவுண்டருக்கு போய் எனது ஆசையை பூர்த்தி செய்யும் நடவடிக்கைகளில் இறங்கினேன். நான் செத்தால் அவர்கள் பொறுப்பல்ல என்ற தொனியில் பல பக்கங்கள் கொண்ட ஒப்பந்தம் ஒன்றிலும், எனக்கு அந்த இந்த வருத்தங்கள் இல்லை என்ற தொனியிலும் இருந்த ஒப்பந்தங்களை வாசிக்காமலே கையெழுத்துப் போட்டேன்.

சுளையாக 250 அவுஸ்திரேலிய டாலர்களை வாங்கிக் கொண்டாள். புகைப்படமும், வீடியோவும் எடுத்துத் தருவதற்காக இன்னும் கொஞ்சம் டாலர்களை உருவிக்கொண்ட பின், இன்னும் சற்று நேரத்தில் எனது வாழ்க்கையையே நிர்நயிக்கப்போகும் பயிற்சியாளரை அறிமுகப்படுத்தினாள். அருகில் தங்கை மெளன அஞ்சலிக்கு நிற்பது போல வலு அமைதியாக நின்றிருந்தாள்.

அவரும் கனக்க கதைத்தார். எல்லாத்துக்கும் வீட்ட தலையாட்டுவது போல தலையாட்டினேன். ஆனால் அவரின் கதை வீட்டைப் போன்று இங்கும் ஒரு காதால் உள்ளே போய் மற்றயதால் வெளியே போனது.

எனது கண்கள் அங்கு வந்து ஆட்களை ஏற்றிச் செல்லும் விமானத்தில் இருந்தது. திடீர் என்று போனில் வந்தார் எனதருமை மச்சான். கவனம் .. கவனம் என்று எனது கவனத்தை திருப்பப் பார்த்தார். நான் அவரின் பேச்சில் கவனமில்லாமல் இருப்பதை அறிந்ததும் மீண்டும் கவனம் சொல்லி வைத்தார்.

எனக்கு உடுப்பு தரப்பட்டது. போட்டுக் கொண்டேன். ஒரு வித பட்டிபோன்றதொன்றைத் தந்த போது ஏன் இது என்றேன். இது தான் உன்னை என்னுடன் இணைத்து வைத்திருக்கும் பட்டி என்றார். உடனே அதை கவனமாகப் பார்த்து பூட்டிக் கொண்டேன். எனக்குப் பின்புறம் வந்து நின்று அந்த பட்டியை மேலும் இறுக்கினார் ஆசிரியர். எனக்கு ரெண்டு காலுக்கும் நடுவில் பயங்கரமாய் வலித்தது. நெளிந்தேன். அவர் அதை கண்டுகொள்ளாத மாதிரி இருந்தது.

சில பயிட்சிகள் தரப்பட்டன. விமானத்தில் இருந்து பாய்ந்த பின் கை, கால்களை எப்படி வைத்திருப்பது என்றும் விளக்கினார்.

வானத்திரிலுந்து பலர் குதித்து கீழே ஆடிக்கொண்டு வந்தனர். தேவர்களும், தேவைதைகளும் முகில்க‌ளுக்குள்ளால் வரும் அந்தக் காலத்து படங்கள் போலிருந்தது, அது. அவர்களுக்குள் ”எமன்” தெரிகிறாரா என்று பார்த்தேன்.. இல்லை போலிருந்தது.

எனது விமானம் வந்து நின்றது. தங்கை கட்டிப்பிடித்து முத்தமிட்டு அனுப்பினாள். அம்மாட்ட கேட்டதாகச் சொல் என்றேன் நக்கலாய். கட்டாயம் என்றாள் ஈவுஇரக்கமின்றி.

அது ஒரு குட்டி விடமானம். அதில் ஏறினேன். சீட்களை களட்டி விட்டிருந்தார்கள். வண்டிலில் ஆட்களை ஏற்றுவது போல 15 பேரை ஏற்றினார்கள். எல்லோரும் குந்திக் கொண்டதும் காதடைக்கும் சத்தத்துடன் புறப்பட்டது விமானம்.

எனது பயிட்சியாளர் என்னைப் பார்த்து ”ஓகே”யா? என்பது போல சாடையில் கேட்டார். ஓம் என்றேன். விமானம் மேலெழும்பிக்கொண்டிருந்தது. எனது இதயத்துடிப்பைப் போல.

யன்னலால் எட்டிப் பார்த்தேன் எல்லாம் சிறிதாய் தெரிந்தன. அவை சற்று நேரத்தில் புள்ளிகளாய் மாறின. விமானம் 10000 அடி உயரத்தை அடைந்ததும் ஆயத்தமாகுமாறு உத்தரவிட்டார் பயிட்சியாளர். விமானத்தின் பின் கதவு திறந்தது. 12000 அடி உயரம் வந்ததும். எல்லோரும் யாய்ந்தனர். பயிட்சியாளர் என்னை தன்னுடன் இணைத்துக் கொண்டார். வாசலுக்கு வந்தோம். பயிட்சியாளர் எனக்கு பின்னால் இருந்து தயாரா என்றார். பூலோகத்தை ஒரு தரம் பார்த்தேன். எல்லாம் மிக மிக தூரத்தில் புள்ளிகளாயும் நீல நிறத்திலும் தெரிந்தன.

”ஜம்ப்” என்று சொன்னவுடன், எனது இரு இளவரசிகளையும் நினைத்துக் கொண்டே பாய்ந்தேன். என்னுடன் ஒட்டிக் கொண்டு பயிட்சியாளரும் வந்தார். பறப்பது என்றால் இது தான் என்று உணர முடிந்தது. விழும் வேகத்தில் முகத்தில் இருந்த சதைகள் எல்லாம் தள தள என்று ஆடின. பயிட்சியாளர் கமராவை தனது கையில் பூட்டி என்னைப் படம் எடுத்துக் கொண்டிருந்தார்.

James Bond ஆக நடித்த அந்தக் காலத்து கதாநாயகன் Roger Moore ஒரு படத்தில் தங்கப் பல்லு வில்லனுடன் இப்படி விமானத்தில் இருந்து பாய்ந்து சண்டை பிடித்தது ஞாபகம் வந்தது. என்னையும் James Bond ஆக நினைத்துக் கொண்டேன்.

திடீர் என்று பயிட்சியாளர் பரசூட் கயித்தை இழுக்க வானத்தை நோக்கி எம்மை இழுத்துக் கொண்டு போனது பரசூட். வயிற்றுக்கள் ஏதோ செய்வது போலிருந்தது எனக்கு. சற்று நேரத்தில் அழகாய் விரிந்து மெதுவாய் ஆடி ஆடி இறங்கத் தொடங்கியது.

எறும்புகள் ஒரு பாதையில் போவது போல மிகச் சிறிதாய் தெரிந்தன வாகனங்களும், ரோட்டுகளும். பயிட்சியாளர்  என்னை பரசூட்டை இயக்க விட்டார். நானும் சிறுபிள்ளை போல் அதை அங்கும் இங்கும் ஆட்டி இயக்கிப் பார்த்தேன். நாம் இறங்கும் இடம் தூரத்தில் தெரிந்து, மெதுவாய் அருகில் வந்தது.

பயிட்சியாளர் சொல்லித் தந்ததை மறக்காமல் கால் இரண்டையும் தூக்கிப் பிடிக்க அவர் மெதுவாக என்னை உயிருடன் பூலோகத்தில் மீண்டும் இறக்கிவிட்டார்.

தங்கை பேயைப் பார்ப்பது போல் என்னைப் பார்த்துக் கொண்டிருந்தாள். நான் பேய் இல்லை என்று உறுதி செய்து கொண்ட சற்று நேரத்தின் பின் தான் புன்னகைத்தாள்.

பயிட்சியாளருக்கு நன்றி சொல்லி, வீடியோவையும் வாங்கிக் கொண்டு வெளிக்கிட்டோம். தங்கை ஏதும் கதைக்காமல் காரோடினாள். நான் வானத்தால் விழுந்த அலுப்பில் தூங்கியிருந்தேன்.

நீ என்ன வானத்தால விழுந்தவனா என்று யாரும் கேட்டால், ஓம் நான் வானத்தால விழுந்தவன் தான் என்று பதில சொல்ல யோசித்திருக்கிறேன்.



வீடியோ லிங்க்
http://www.facebook.com/video/video.php?v=1158887298742

Thursday 24 June 2010

Kevin Rudd இன் தலைவலி, அவுஸ்திரேலியாவின் முதல் தலைவியாக

அவுஸ்திரேலியாவின் அரசியல் இன்று தலைவிரி கோலமாக்கப்பட்டு அவசர அவசரமாக அள்ளி முடியப்பட்டிருக்கின்றது புதிய இரண்டு சரித்திரங்களோடு.

ஒன்று அவுஸ்திரேலியாவின் முதல் பெண் பிரதமராக Julia Gillard அம்மையார் வந்திருக்கிறார். இன்னொன்று அவுஸ்திரேலிய தொழிற்கட்சிச் சரித்திரத்திலேயே முதல் தடவையாக ஒரு தலைவர் தன் பதவிக்காலம் முடிவதற்கு முன்னரே தூக்கி வீசப்பட்டிருக்கிறார் அவர் இது நாள் வரை பிரதமராக இருந்த Kevin Rudd.

"வேண்டாத பெண்டாட்டி கை பட்டால் குற்றம் கால் பட்டால் குற்றம்" இது சரத் பொன்சேகாவுக்கு மட்டுமல்ல, நேற்று வரை எமது அவுஸ்திரேலிய தேசத்தை ஆண்டு அடங்கிப் போன கெவின் ரட்டிற்கும் பொருந்தும். கொஞ்சக்காலமாகவே மனுசருக்கு ஏழரைச் சனி எல்லாப் பக்கத்தாலும் நின்று குத்தாட்டம் போட்டது.

2007 ஆம் ஆண்டு பொதுத்தேர்தல் நடக்கும் சமயம் தான் Kevin Rudd என்ற ஒரு மனிதர் அவுஸ்திரேலியாவில் இருப்பது பலருக்குத் தெரியும் என்னும் அளவுக்குத் திடீர்த் தலைவராக்கப்பட்டவர் இவர். இவருக்கு முன்னால் இருந்த Kim Beazley மிகுந்த கல்விமானாகவும் அரசியலில் பழம் தின்றவர் என்றாலும் கொட்டை போடுவதற்கு முன்னர் யாராவது ஒருவரை அவசரமாக நியமித்து இவரின் பதவிக்கணக்கை முடித்து வீட்டுக்கு அனுப்பும் கண்ணாமூச்சி ஆட்டமும் அதுவரை நடந்து கொண்டிருந்தது. ஆக Kim Beazley என்பவர் அவ்வப்போது வந்து தொழிற்கட்சிக்கு ஒட்டு வேலைகள் செய்து விட்டுப் போகும் மனிதராக இருந்தார்.

என்னதான் சொல்லுங்கோ, கீழைத்தேய நாடுகள் என்றாலென்ன மேலைத்தேய நாடுகள் என்றாலென்ன அரசியல்வாதியாகப் பிறப்பெடுத்தாலே எப்போது எந்த நேரம் யார் கண்(னி) வெடி வைப்பான் என்று தெரியாத பிழைப்புத் தான். அதுவும் அவுஸ்திரேலிய அரசியலில் இந்தப் பகடைக்காய் ஆட்டம் தேசிய அளவில் மட்டுமல்ல மாநில அளவிலும் நடந்து கொண்டிருக்கும் சித்து விளையாட்டு.
அவுஸ்திரேலியாவின் அதிகப்படியான அரசியல் தலைவராக இருந்த பெருமை கொண்ட John Howard தன் திறைசேரி அமைச்சர் Peter Costello ஐ அடுக்களைக்குக் கூட அண்டாமல் கண்ணும் கருத்துமாக வைத்திருந்ததோடு தன்னுடைய கடைசி நாட்களிலும் Peter Costello வை அடுத்த தலைவராக முன்மொழியாமல் இருந்தவர். அந்த வருத்திலோ என்னவோ John Howard வீம்பு பிடித்துத் தானே 2007 தேர்தலில் நிற்பேன் என்று போட்டி போட்டு மண் கவ்விய நிலையிலும் Peter Costello காலியாக இருந்த எதிர்க்கட்சி ஆசனத்துக்குப் போட்டி போடாமல் இரண்டு வருசம் சிரிச்சுச் சிரிச்சே சமாளித்துக் காலத்தைத் தள்ளீ கடைசியில் அரசியலுக்கு குட்பை சொல்லி விட்டு அவரும் போய் விட்டார். அதுவரை தனிக்காட்டு ராசாவாக ஆண்டு களித்துக் களைத்த லிபரல் கட்சி எதிர்க்கட்சியாக மாறிப் போனது அவர்களுக்கு நிரம்பவே தடுமாற்றத்தைக் கொடுத்திருக்கும். இல்லையா பின்னே. கடந்த இரண்டு வருஷம் சொச்ச நாட்களுக்குள் முன்று பேர் எதிர்க்கட்சித் தலைவராக இருந்து அழகு பார்த்தார்கள். முதலில் வந்தவர் Brendan Nelson இவரின் கஷ்டகாலம் முன்னர் தொழில்கட்சியில் இருந்தது தான். முன்னர் இவர் தொழில்கட்சியில் இருந்த போது உடல் மண்ணுக்கு உயிர் தொழில்கட்சிக்கும் என்று முழங்கிய வீடியோக்களை ஜெயா டிவி ராம்தாஸ் கருணாநிதி பக்கம் போகும் சமயம் எடுத்து விடும் வீடியோக்கள் போலக் காட்டி நாறடித்தது ஒரு பக்கம் என்றால் இன்னொரு பக்கம் இந்த மனுசர் அநியாயத்துக்கு அப்பாவியாக இருந்தார். ஆட்சியில் இருக்கும் தொழிற்கட்சியின் நடவடிக்கைகளை ஆற அமர ஒப்புக்கு இரண்டு தொலைக்காட்சிகளின் ஒலிவாங்கிகளுக்குக் கொடுத்துக் கொண்டிருந்த இவரைக் கடாசி விட்டார்கள் கட்சிக்காரர்கள். இரண்டு சொட்டுக் கண்ணீருடன் இவர் போக "அண்ணன் எப்போ சாவான் திண்ணை எப்போ காலியாகும்" என்று அதுவரை காத்திருந்த Malcolm Turnbull சிக்கெனப் பிடித்தார் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை.இவரின் பலவீனமே அதிகமாக உணர்ச்சிவசப்படுவது. அது சினிமாக்காரன் என்றால் கைதட்டி ரசிக்கும் சனம். ஆனால் இந்த மனுசன் அவதி அவதியாகச் செஞ்ச வேலைகளால் கைகொட்டிச் சிரித்தார்கள் ஊரார் சிரித்தார்கள். மீண்டும் கட்சிக்குள் குழப்பம். இந்த முறை Malcolm Turnbull க்கு ஆப்பாக வந்தவர் Tony Abbott இன்றுவரை எதிர்க்கட்சித் தலைவராக இருப்பவரும் இவரே பதவியில் போட்டி இடுவதற்கு முன்னர் சத்தியமா எனக்கு அந்த ஆசை இல்லை என்று தலையில் அடிச்சு கற்பூரம் கொழுத்தாத குறையாகச் சொன்னவர் (அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா - நன்றி: கவுண்டமணி சுவாமிகள்). தேர்தல் நடைபெற இன்னும் நாலைந்து மாதங்கள் இருக்கும் நிலையில் Tony Abbott கூட பா(ர்)ட்டிக்கு அடங்கிய சமத்துப் பையனாக இருப்பாரா என்பது போகப் போகத் தெரியும். ஏனென்றால் சூழ்நிலை அப்படி. Malcolm Turnbull கூட இனிமேல் தன் தொகுதியான Malcolm Turnbull இல் இனிமேல் போட்டி போடமாட்டேன் போய்யா என்று சலித்துக் கொண்டே சொல்லி விட்டதால் அந்தப் பக்கமிருந்து கத்தி வராது என்று நம்பலாம். இப்படியாக கடந்த 2007 ஆம் ஆண்டிலிருந்து பிரதான எதிர்க்கட்சியான லிபரல் கட்சிக்குள் குத்து வெட்டு, ஊசலாட்டம் , கரகாட்டம் எல்லாம் ஆடிக்கொண்டிருக்கும் போது மறுமுனையில் ஆட்சியில் இருக்கும் தொழிகட்சி தன் சொந்தச் செலவில் சூனியம் வைத்துக் கொண்டிருந்ததைத் தான் விதியின் விளையாட்டு என்பதா?

முன்னர் சொன்ன அரசியல் பின்புலன்களைப் பார்க்கும் போதே ஒன்று தெளிவாகத் தெரியும். கட்சிக்குள் தனி நபரின் செல்வாக்கு என்பது ஒரு எல்லைக்குள் தான். கூட்டமாக சேர்ந்தால் கும்மி விடுவார்கள் என்பது ஆட்சியில் இருப்பவருக்கும் பொருந்தும் எதிர்க்கட்சி ஆசனத்தில் இருந்து ஆட்சியைப் பார்த்துக் கொட்டாவி விடுபவருக்கும் தெரியும். கட்சியில் இருந்து ஆட்களைக் கழற்றிக் கொண்டு போய் சேவல் சின்னத்திலோ, புறாச் சின்னத்திலோ போட்டி போடுமளவுக்கும் கூட இங்கே யாருக்கும் தில் இல்லையப்பா.

மீண்டும் முதற்பந்திக்கு வருகின்றேன். 2007 ஆம் ஆண்டு தேர்தலில் John Howard என்ற பழுத்த அரசியல் சாணக்கியருக்கு ஈடு கொடுக்க எல்லா வித சித்து வேலைகளையும் பார்த்து ஓய்ந்த நிலையில் ஒரு சாந்த சொரூபியைக் களமிறக்கி மக்களின் அனுதாப அலைகளை அள்ளிக்குவிக்கலாம் என்ற தொழிற்கட்சியின் நினைப்புக்கு அளவெடுத்த சட்டையாக வந்து பொருந்தினார் Kevin Rudd. அந்த நேரம் பார்த்து தொழில் ரீதியான சட்டத்தீர்திருத்தங்களும் ( Australian industrial relations legislation) அதன் விளைவாக தொழிற் சங்கங்கள் கூட்டாக அரசினைத் தாக்கி மேற்கொண்டிருந்த பிரச்சாரங்களும் தொழிற்கட்சிக்குப் பலமான ஒரு வாக்கு வங்கியைக் கொண்டு வந்து தங்கத் தாம்பாளத்தில் கொடுக்க முனைந்தது. கூடவே மத்திய அரசியின் தொடர்ச்சியான வட்டி அதிகரிப்பு என்பதும் குடும்பஸ்தர்களை ஈட்டியாகக் குத்திய போது ஆபத்பாந்தவனாகத் தெரிந்தார் Kevin Rudd பெருவாரியான ஆதரவோடு ஆட்சியைப் பிடித்தார் இந்தப் புதுமுகம்.
"இப்போது Kevin Rudd இன் அரசாங்கத்தை Hitchcock இன் மர்மப் படத்தைப் பார்க்குமாற்போல நகம் கடித்துக் கொண்டே மூன்றாவது நாளாகக் கவனித்துக் கொண்டிருக்கின்றோம்." என்று முன்னர் இவர் ஆட்சிப் பீடம் ஏறிய போது சொல்லியிருந்தேன். அதுதான் இது நாள் வரை நடந்திருக்கிறது இவருக்கு.

அடிப்படைக் கல்வி வசதிகள் , சுற்றுச் சூழல் மாற்றத்தில் பாதுகாப்பு போன்றவற்றில் அதிக முனைப்புக் காட்டியிருந்த Kevin Rudd இவற்றைச் சாதித்துக் காட்ட முனைந்த போது உள்ளூரிலும் வெளியூரிலும் பல சவால்கள். மக்களுக்கும் "அரைத்த மாவை அரைப்போமா" பாட்டு மெல்ல போரடிக்க ஆரம்பித்தது. தொழிற்சங்கங்களின் ஆசியோடு வந்த தொழிற்கட்சி அரசுக்கு அடிக்கடி கறுப்புத் தபால்கள் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். கூடவே அகழ்வாய்வு (mining) பணிகளுக்கு வரிவிதிப்பில் புதிய சீர்திருத்தங்கள் என்று மெல்ல மெல்ல கெட்ட பிள்ளை ஆகிக் கொண்டிருந்தார் Kevin Rudd. இதை உறுதிப்படுத்துமாற்போல கடந்த சில வாரங்களாக வரும் கருத்துக் கணிப்புக்களிலும் தொழிற்கட்சியின் வாக்கு விகிதம் பெருமளவு சரிந்து இரட்டை கட்சிகளுக்கான விருப்பு வாக்குகள் எதிர்க்கட்சிப் பக்கம் தாவ ஆரம்பித்தன. பதவிக்கு வந்த போது சூப்பர் ஸ்டார் ரேஞ்சில் Kevin Rudd வாக்கு விகிதம் இருக்க எதிர் அணியில் இருந்தவர் பரிதாபமான விகித்தில் இருந்த நிலை மெல்ல மெல்ல மாறிக் கொண்டு வருகிறது. இந்த நிலையில் Kevin Rudd இற்குச் சவாலாக மாறினார் இது நாள் வரை துணைப்பிரதமராக இருந்த Julia Gillard, இவர் Education, Employment and Workplace Relations ஆகிய இலாகாக்களுக்கும் கூட அமைச்சுப் பதவியேற்றவர். தன்னுடைய அமைச்சுப் பொறுப்பேற்றதும் John Howard கொண்டு வந்த தொழில் சீர்திருத்தம் தொடர்பான விளக்கக் கையேடுகளை ஆவேசமாகக் கிழித்துக் குப்பையில் போட்டாரே அம்மணி அங்கேயே பார்க்க வேண்டும் இவர் வேகத்தை.

Julia Gillard அடிப்படையில் ஒரு சட்டக் கல்வி மற்றும் கலைப்பட்டதாரி. 29 செப்டெம்பர் 1961 இல் இங்கிலாந்தின் வேல்ஸ் இல் பிறந்த இவரின் தந்தை நிலக்கரிச்சுரங்கத்தில் வேலை பார்த்தவர். 1983 ஆம் ஆண்டில் அவுஸ்திரேலிய மாணவர் சங்கத்தினை நிர்வகிக்கும் தலைமைப் பொறுப்பேற்றதுடன் மெல்ல மெல்ல அரசியலுக்கும் விழுந்தார். 1996 ஆம் ஆண்டிலிருந்து விக்டோரிய மாநிலத்தின் தொழிற்கட்சிப் பணியில் ஈடுபட்டுச் செயற்பட்டவர். இவரின் Partner, Tim Mathieson ஒரு சிகை அலங்கார நிபுணர். பிள்ளைகள் இல்லை. மாநில அரசியலில் இருந்து மெல்ல மெல்லத் தன் அரசியல் காயை மத்திய அரசியலில் போட்டார். துடிப்பான நிழல் அமைச்சராக இவர் செயற்பட்ட பாங்கு 2007 பொதுத் தேர்தலில் இவரே துணைப் பிரதமராக ஆகும் அளவுக்கு விட்டிருக்கின்றது. போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

நாட்டில் ஒவ்வொரு மூலைகளில் இருந்தும் அடிவாங்கத் தயாரானது தொழிற்கட்சி. அவுஸ்திரேலியாவின் மிகப்பெரிய மாநிலமான நியூசவுத்வேல்ஸ் மாநிலத்திலும் ஒரு அதிகாரப் போட்டி வந்து Kristina Keneally என்ற பெண் பிரதமரை பொம்மையாக நிறுத்திக் காரியம் பண்ணுகிறார்கள் முன்னர் மாநிலப்பிரதமராக இருந்த Nathan Rees ஐ வேண்டாது வெறுத்து ஒதுக்கிய கட்சிக்காரர்கள். Nathan Rees இன் சாபமோ என்னமோ சமீபத்தில் Penrith என்ற இடத்தில் நடந்த இடைத்தேர்தலில் 37 வருச சரித்திரத்தில் தொழிற்கட்சி தன் கதிரையை லிபரலுக்குத் தாரை வார்த்தது ஒரு பானை சோத்துக்கு ஒரு சோறு பதம்.

இப்படியாக மெல்ல மெல்ல தொழிற்கட்சியின் தேனிலவுக்காலம் அஸ்தமிக்குமோ என எண்ணும் வேளை நியூசவுத்வேல்ஸ் இற்கு Kristina Keneally வாய்த்தது போல மத்திய அரசியலில் Julia Gillard அகப்பட்டார். Julia Gillard இற்கும் Kevin Rudd க்கும் அரசல்புரசலாக இருந்த ஊடல் பகிரங்கமாக வெடித்தது. இந்த வேளை ஒரு ஆசிய நாடாக இருந்தால் Julia Gillard ஐ ஐ.நா சபை சிறப்புத் தூதுவர் தான் தேடவேண்டிய நிலை இருந்திருக்கும். ஆனால் இங்கோ நெஞ்சுரம் மிக்க அந்தப் பெண்மணி தலைமைப் போட்டிக்கு வருவீரா என்று சவால் விட்டார் Kevin Rudd ஐப் பார்த்து இது நடந்தது நேற்று இரவு. இரகசியம் பரகசியமாகி பகிரங்கமாக நேற்று இரவு 10.20 க்கு Kevin Rudd தலைமைப் போட்டியில் தான் போட்டியிடப்போவதாகச் சொன்னார். ஆனால் ஓரிரவுக்குள் அவர் மனதில் என்ன போராட்டம் நடந்ததோ தெரியவில்லை.
இரு சொட்டுக் கண்ணீருடன் " நான் அவுஸ்திரேலிய மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டேன், என்னால் முடிந்த அளவுக்கு என் பணியைச் சிறப்பாகச் செய்திருக்கின்றேன்" என்றவாறே போட்டியிடாமல் மெல்ல விலகிக் கொண்டார் இவர். திறைசேரி அமைச்சராக இருந்த Wayne Swan துணைப்பிரதமராகியிருக்கின்றார்.

இந்தக்கூத்துக்குப் பின்னால் அகழ்வாய்வுத்துறை மீது கொண்டு வரப்பட இருக்கும் super profits tax என்ற புதிய வரிக்கொள்கையும், emissions trading scheme எனப்படும் சூழல் மாசடைதலைக்கட்டுப்படுத்தல் தொடர்பாக எடுக்க முனையும் நடவடிக்கைகளும் கட்சிக்குள்ளேயே அதிருப்தியைச் சம்பாதித்தை முக்கிய காரணியாகச் சொல்லிக் கொள்கிறார்கள்.


இன்னும் ஒரு மூன்று, நான்கு மாதங்கள் பொதுத்தேர்தலுக்கு இருக்கும் நிலையில் Julia Gillard முன்னே சவால்கள் எல்லாப் பக்கமும் இருந்து வரவிருக்கின்றன. ஏற்கனவே கடந்த தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளில் கொடுக்கப்படாதவை, கொடுக்கப்பட்டுச் சொதப்பியவை என்று ஒருபக்கம் மக்களோடு மல்லுக் கட்ட வேண்டிய நிலை. இன்னொரு பக்கம் கட்சிக்குள் இருக்கும் மறைமுகமாக ஆளுமைகளோடு போட்டி போட வேண்டிய நிர்ப்பந்தம். மாநில அளவில் இதுவரை அதிகப்படியான மாநிலங்களில் செல்வாக்குச் செலுத்தி ஆட்சி அதிகாரத்தோடு இருக்கும் தொழிற்கட்சியின் செல்வாக்குச் சரிவு. இவையெல்லாம் எதிர்க்கட்சிக்காரனுக்குத் திருநெல்வேலி இருட்டுக் கடை அல்வா போல. முந்திய தேர்தலில் கடந்த ஆட்சிக்காரனைக் குற்றம் சொல்லியே வந்த நினைப்பு இந்த முறை பலிக்காதே.

அவுஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழகத்தின் அரசியல் விஞ்ஞானப்பீடப் பேராசிரியர் Norman Abjorensen இந்தக் கூத்துக்களைப் பார்த்து இப்படிச் சொல்லியிருக்கின்றார். " Labor's dumping of Rudd was a calculated gamble". அதுதான் உண்மை இன்று Kevin Rudd பலிகடா நாளை Julia Gillard. வரலாறு முக்கியம் அமைச்சரே ;-)

தொடர்பு பட்ட முந்திய இடுகை: இந்த வழியால் போகாதே...!

Sunday 28 March 2010

சிட்னி முருகன் ரதோற்சவம் 2010


சிட்னி முருகன் ஆலய வருடாந்த மகோற்சவத்தில் இன்று ரதோற்சவ நிகழ்வுகள் வெகு சிறப்பாக நடைபெற்றன. ஈழத்தில் இருந்து சர்வேஸ்வரக்குருக்கள் பிரதம குருவாக அமைந்து இந்த நிகழ்வுகளை நடத்தினார். தொடர்ந்து காட்சித் தொகுப்புக்குப் போவோம்.



அழகன் முருகன் தேரில்


தாகம் தீர்க்கத் தருவேன் மோரும், சர்பத்தும்




ஈழத்துக் கலைஞர்கள் நாகேந்திரம், சுதா சின்னராசா குழுவினர் வழங்கும் நாதஸ்வர, மேள தாளம்




தேவார, திருமுறைகளைப் பாடிப் பக்திப்பரவசமுறும் அடியார்கள்













அவுஸ்திரேலிய ஒலிபரப்பு கூட்டுத்தாபனம் ரதோற்சவத்தை நேரடியாக அஞ்சல் செய்கிறது



சுவாமிக்கு பச்சை சார்த்தப்படுகிறது

முக்கியமான மேட்டர் ஒன்றை விட்டுட்டியே பரிமளம், அட ஆமா, அன்னதான கியூ ;)


Saturday 27 March 2010

சிட்னி முருகன் சப்பறத் திருவிழா 2010

சிட்னி வைகாசிக்குன்றில் அமைந்திருக்கும் முருகன் ஆலயத்தின் மகோற்சவ நிகழ்வுகள் கடந்த சனிக்கிழமை கொடியேற்றத் திருவிழாவில் ஆரம்பித்து இன்று சப்பறத்திருவிழா நிகழ்வு வெகு சிறப்பாக நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கான அடியவர்கள் இந்த நிகழ்வு நடந்தேறியது. அதில் இருந்து சில காட்சித் தொகுப்புக்களை இங்கே தருகின்றேன்.