Sunday 31 October 2010

அவுஸ்திரேலிய அரசாங்கம் வழங்கவிருக்கும் தீபாவளி விருந்து Parramasala


கடந்த ஆண்டு அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் பரமற்றா உள்ளூராட்சி நிர்வாகத்தின் ஏற்பாட்டில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் மாபெரும் இசைவிருந்தொன்றை இலவசமாக வழங்கிச் சிறப்பித்திருந்ததும் இதற்கு 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்ட வரலாற்றையும் பலர் அறிந்திருப்பீர்கள். அந்த நிகழ்வை இங்கே இட்டிருக்கின்றேன் சிட்னியில் மையம் கொண்ட "இசைப்புயல்"

இந்த ஆண்டு மீண்டும் இன்னொரு பரிமாணமாக Parramasala என்னும் பன்முகக் கலைவிருந்தொன்றை மீண்டும் அவுஸ்திரேலியாவின் நியூசவுத்வேல்ஸ் மாநில அரசின் ஏற்பட்டில் வழங்கவிருக்கின்றார்கள். பெரும் எடுப்பிலான இந்த நிகழ்வை சிட்னியில் இந்திய சமூகம் பரவலாக இருக்கும் மேற்குப்பிராந்தியமான Parramatta என்ற நகரில் நடாத்தவிருக்கின்றார்கள். நியூசவுத்வேல்ஸ் மாநிலத்தின் இரண்டாவது பெரிய நகரமாக Paramatta நகரம் திகழ்வது குறிப்பிடத்தக்கது.

வரும் தீபாவளித் தினமான நவம்பர் 5 ஆம் திகதியை அடியொற்றி, நவம்பர் 4 ஆம் திகதியில் இருந்து நவம்பர் 8 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் இந்த Parramasala நிகழ்வை ஏற்பாடு செய்திருக்கின்றார்கள்.



நிகழ்வின் முத்தாய்ப்பாக கைலாஷ் கர் என்னும் வட இந்தியப் பாடகர், (அபியும் நானும் படத்தில் ஒரேயொரு ஊரிலே பாடலைப் பாடி இருந்தவர்) கலந்து சிறப்பிக்கும் மாபெரும் இசை நிகழ்வு, The Chennai Tapas என்ற தலைப்பில் காரைக்குடி மணி அவர்கள் கலக்கும் தாளவாத்தியக் கச்சேரி (கட்டணம் உண்டு), இந்தியாவின் கலைஞர்கள் அனில் ஶ்ரீநிவாசன், சிக்கல் குருசரண் வாய்ப்பாட்டு கலக்க அவுஸ்திரேலியாவின் புகழ்பூத்த நடனக் கலைஞர் ஆனந்தவல்லியின் நாட்டிய இசை விருந்து, The Guru of Chai என்னும் தலைப்பில் INDIAN INK THEATRE COMPANY (NEW ZEALAND)வழங்கும் நகைச்சுவை விருந்து, DESERT WEDDING என்னும் ராஜஸ்தானிய இசை விருந்து, பண்டிட் சித்ரேஷ் தாஸ் அமெரிக்கக் கலைஞர் ஜக் சாமுவேல்ஸ் ஸ்மித் உடன் TAP KATHAK என்னும் கதக் நடனச் சுவை, இங்கிலாந்தில் இருந்து Nitin Sawhney வழங்கவிருக்கும் இசைவிருந்து என்று இன்னும் பல படையல்களோடு அரங்கேறவிருக்கின்றது இந்த மசாலாக் கொண்டாட்டம்.

இவற்றோடு வருடாந்தம் இந்து கவுன்சில் நடத்தும் தீபாவளி விருந்து நிகழ்வும் வழக்கம் போல் நவம்பர் 6 சனிக்கிழமை Parramatta Park இல் நடக்கவிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

விதவிதமான ஆடல்கள் விதவிதமான பாடல்கள் விதவிதமான இசை, விதவிதமான உணவுகளோடு Parramasala இந்த ஆண்டின் முத்தாய்ப்பானதொரு விழாவாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

இந்த நிகழ்வுகளின் முழுமையான விபரங்களைப் பெற்றுக் கொள்ள

http://parramasala.com/events/day-by-day-festival-guide/day-by-day-festival-guide1

No comments: