Friday, 12 November 2010

சி(ச)ட்னி சாம்பார் 12 நவம்பர் 2010

(அவுஸ்திரேலிய அரசாங்கம் நடத்திய வாராந்த இந்தியக் கொண்டாட்டம் பரா மசாலாவின் கட் அவுட் ஒன்று)

நீண்ட நாளைக்குப் பின்னர் சாம்பாரும் கையுமா வந்திருக்கிறன். இதிலேயே நீண்ட நேரம் நிற்காமல் நேரா விஷயத்துக்கு வாறன்

19,350 நாட்கள் காக்க வைத்துக் கொடுத்த நூலகப்புத்தகம்


நியூசவுத்வேல்ஸ் மாநிலத்தில இருகிற நியூகாஸ்ட்ல் நகர நூலகத்தில் ஐம்பத்து மூன்று வருஷங் களுக்கு முன்னர் வாடகைக்கு எடுத்த புத்தகத்தை 19,350 நாட்கள் வெறித்தனமாக வைத்திருந்து இப்போது தான் திருப்பிக் கொடுத்திருக்கிறார் ஒரு மனுஷன். Knots, Splices and Fancy Work என்ற அந்த நூலை 1957 ஆம் ஆண்டு McLaren என்பவரே தனது 19ஆவது வயதில் நூலகத்தில் இருந்து வாடகைக்கு எடுத்திருக்கிறார். இப்பதான் அந்தப் புத்தகத்தைத் திருப்பிக் கொடுக்கவேண்டும் என்ற எண்ணம் அந்த மனுஷனுக்கு வந்திருக்கு. (இப்பவாவது வந்துச்சே என்று சந்தோஷப்படுங்கோ). புத்தகத்தின் இன்றைய கோலம் ஏறக்குறைய எண்பது வயது மூதாட்டியின் சீவப்படாத தலை போல இருந்தது வேறு விஷயம். புத்தகத்தைக் கொடுத்த கையோடு 5 ஆயிரம் டொலருக்குத் தண்டப்பணத்தையும் கொடுத்திருக்கிறார் நல்ல பிள்ளையாக, ஆனால் தண்டப்பணம் கிட்டத்தட்ட 27 ஆயிரம் டொலர் வரை போகும் என்று இவரைப் பேட்டி எடுத்த உள்ளூர்த்தொலைக்காட்சி நிருபர் ஆப்பு வைத்தது இன்னொரு சுவாரஸ்யம். எது எப்படியோ அவுஸ்திரேலிய வரலாற்றில் இதுவரை நடக்காத சாதனையை இவர் செய்து போட்டார் என்று பெருமைப்படுவோமாக.

காசு ஏற பிளேன் ஏறுவோம் வாடா

அவுஸ்திரேலிய டொலரின் மதிப்பு எந்திரன் ரஜினி கணக்காக எகிறி விட்டது. அமெரிக்க டொலர் இளைய தளபதி ரேஞ்சில் இருப்பதால் தான் இந்த நிலை, இதையெல்லாம் வச்சுக் கொண்டு அவுஸ்திரேலியப் பொருளாதாரம் ஏதோ உயரப்பறக்கிறது என்றெல்லாம் சீமான்கள் கற்பனை பண்ணக் கூடாது கண்டியளோ.
கூட வேலைபார்க்கும் சீனப்பெண் அமெரிக்க டொலரை எல்லாம் வாங்கி வச்சிருக்கிறாளாம். பின்னாளில் எடுத்துக் காட்டிப் பணத்தைக் கூட்ட உதவுமாம். சனம் எப்படியெல்லாம் சிந்திக்குது என்று பாருங்களேன். இது ஒருபுறமிருக்க வேலைத்தளங்களில் மும்முரமாக லீவு கேட்டு விண்ணப்பத்து சைக்கிள் கேப்பில் யூ எஸ் போட்டு வரலாம், காசை மிச்சம் பிடிக்கலாம் என்றும் ஒரு பெருங்கூட்டம். ஆனால் யூ எஸ், பிரிட்டன் ஆகிய நாடுகளில் இருந்து அவுசிக்குப் படையெடுக்கும் உல்லாசப்பயணிகள் எண்ணிக்கை 10 விழுக்காடுகளுக்கு மேல் சரிந்து விட்டதாகவும் செய்திகள் சொல்கின்றன. எந்த ஒரு தாக்கத்துக்கும் சமனும் எதிருமான தாக்கம் இருக்கும் தானே பாருங்கோ

கொஞ்ச நேரம் ஆணி பிடிங்கினால் போதும்


அதிர்ச்சி ஆனால் உண்மை என்ற ரீதியில் ஒரு தகவல். 1700 பேரை உட்படுத்திய ஒரு ஆய்வில் பெரும்பாலானோர் தாம் அதிகப்படியான வேலை நேரத்தில் வேலை செய்ய விரும்பவில்லை என்று சொல்லியிருக்கின்றார்கள். அதில் 80 வீதமானோர் ஓவர் டைம் என்னும் மேலதிக உழைப்பைக் கொடுப்பவர்கள் தொடந்தும் இதுமாதிரி ஓவர் டைமில் எமது டைமை வேஸ்டாக்க மாட்டோம் என்று கங்கணம் கட்டியிருக்கினம். இதைவிடக் கொடுமையான ஒரு தகவலைக் கேட்டால் உங்களுக்கு இன்னும் தலையைச் சுத்தும். கிட்டத்தட்ட இரண்டு மில்லியன் மணித்தியாலங்கள் செய்த உழைப்புக்கான ஊதியமாக எதுவுமே கொடுக்கப்படவில்லையாம். இது கிட்டத்தட்ட 72 பில்லியன் டொலர்கள் என்று கணிச்சிருக்கினம்.
முந்தின காலத்தில் தான் கையில காசு வாயில தோசை என்று டபுள் ஷிப்ட் எல்லாம் அடிப்பினம். இப்பதான் பார்ட் டைமா தோசை வித்தாவது உழைக்கலாம் தானே.

பரா மசாலா ஓவர்


நியூசவுத்வேல்ஸ் மாநில அரசாங்கமும், பரமற்றா நகர சபையும் ஆறு நாட்களாக நடத்திய பரா மசாலா ஒரு முடிவுக்கு வந்திருக்கு. இந்தியாவில் இருந்து பல்துறைக் கலைஞர்களைக் கொண்டுவந்து நிதமும் ஒரு கச்சேரி வைத்திருந்தாலும் வருண பகவானுக்குப் பொறுக்கவில்ல்லைப் போலும்.அழுது தீர்த்து விட்டார் மனுஷன். அதனால் இலவசமாகக் கொடுத்த களியாட்டங்களையே காணமுடியாமல் நொந்து நூடுல்ஸ் ஆகிவிட்டது சிட்னிச் சனம். என்னதான் இருந்தாலும் போன முறை இசைப்புயல் வந்து கலக்கிய அளவுக்கு இனியும் ஒரு நிகழ்ச்சி இருக்குமா என்று நினைத்துப் பார்க்க முடியவில்லை.

கட்அவுட் காணா அவுஸி சனத்துக்கு இந்தியப் பாரம்பரியப்பிரகாரம் கட் அவுட் எல்லாம் வைத்து அமர்க்களப்படுத்தி விட்டார்கள் வீதிகளை.

6 comments:

ஆயில்யன் said...

//சுற்றியவர்: கானா பிரபா //

இப்படி தனியா சுத்திக்கிட்டிருக்கீங்களே ஒரு வார்த்தைச்சொன்ன்னா - ஏற்பாடு செஞ்சா - நானும் அங்கே வந்தா சேர்ந்தே சுத்தலாம்ல #ஐடியா

மாதேவி said...

கட்அவுட் ,தகவல்கள் சூப்பரா இருக்குங்கோ.

கானா பிரபா said...

ஆயில்ஸ்

லாட்டரி விழுந்தா அழைக்கிறேன் உம்மையும்

சஞ்சயன் said...

இந்திய மக்களை அடிக்கிறதும், சுடுறதும் ஒரு பக்கமிருக்க மற்றுப்பக்கத்தில் இப்படி சட்னி விளையாட்டுக்களும் நடக்குது. ஏதோ நடத்துங்கோ தலிவா.

கானா பிரபா said...

வருகைக்கு நன்றி மாதேவி

விசரன் அண்ணை

இந்திய மக்களை அடிப்பது என்பது ஊடகங்கள் விரித்து விட்ட கதை ;)

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

அட.. நம்மூர் போலத் தான் எல்லாமே!