சென்ற வருடம் சிட்னி போக முன்பே மனதுக்குள் விமானத்தில் இருந்து பரசூட் மூலம் குதிக்கும் ஆசை வந்திருந்தது. ஏற்கனவே நோர்வேயில் முயற்சித்தது தான். இருப்பினும் அது விமானத்தில் இருந்து குதித்ததல்ல. ஒரு மலையுச்சியில் இருந்து குதித்தேன். நான் தரையிரங்கும் இடத்தில் எனது இரண்டு இளவரசிகளும் நின்றிருந்தார்கள்... பெருமையுடன்.
இறங்கியதும் சிட்டாய் வந்து கட்டிக்கொண்டார்கள்.....
சிட்னியில் விமானம் மூலம் பாயலாம் என்று அறிந்திருந்தேன். எனினும் வருவதற்கு ஒரு கிழமைக்கு முன்பு தான் இதைப்பற்றி சிந்திக்க நேரம் கிடைத்தது. இணையத்தில் தேடி ஒரு இடத்தைக் கண்டுபிடித்து அடுத்த நாள் பாய்வதற்கான ஒழுங்குகளையும் செய்து கொண்டேன்.
அண்ணண் இண்டைக்கு மண்டையப்போட்டாலும் என்று நினைத்தாளோ என்னவோ, தங்கை தானும் வருகிறேன் என்று மச்சானின் காரை அவரை வெருட்டி எடுத்துக்கொண்டு என்னையும் ஏற்றிக் கொண்டு வெளிக்கிட்டாள்.
கிட்டத்தட்ட 1,5 மணிநேரம் கார் ஓட்டம். நிம்மதியாய் நித்திரை கொள்ளலாம் என்றால் இண்டைக்குத் தான் அண்ணணுடன் கடைசியாகக் கதைக்கிறேன் என்ற மாதிரி வழி நெடுகிலும் கடித்துக் கொண்டு வந்தாள்.
இடத்தை நெருங்க வானத்தில் பல நிறங்களில் பரசூட்கள் தெரிந்தன. ஆடி ஆடி மெதுவாய் இறங்கின. ஒருவரும் தொம் என்று என்று விழுந்து பயமுறுத்தவில்லை.
காரை நிறுத்தியதும் கவுண்டருக்கு போய் எனது ஆசையை பூர்த்தி செய்யும் நடவடிக்கைகளில் இறங்கினேன். நான் செத்தால் அவர்கள் பொறுப்பல்ல என்ற தொனியில் பல பக்கங்கள் கொண்ட ஒப்பந்தம் ஒன்றிலும், எனக்கு அந்த இந்த வருத்தங்கள் இல்லை என்ற தொனியிலும் இருந்த ஒப்பந்தங்களை வாசிக்காமலே கையெழுத்துப் போட்டேன்.
சுளையாக 250 அவுஸ்திரேலிய டாலர்களை வாங்கிக் கொண்டாள். புகைப்படமும், வீடியோவும் எடுத்துத் தருவதற்காக இன்னும் கொஞ்சம் டாலர்களை உருவிக்கொண்ட பின், இன்னும் சற்று நேரத்தில் எனது வாழ்க்கையையே நிர்நயிக்கப்போகும் பயிற்சியாளரை அறிமுகப்படுத்தினாள். அருகில் தங்கை மெளன அஞ்சலிக்கு நிற்பது போல வலு அமைதியாக நின்றிருந்தாள்.
அவரும் கனக்க கதைத்தார். எல்லாத்துக்கும் வீட்ட தலையாட்டுவது போல தலையாட்டினேன். ஆனால் அவரின் கதை வீட்டைப் போன்று இங்கும் ஒரு காதால் உள்ளே போய் மற்றயதால் வெளியே போனது.
எனது கண்கள் அங்கு வந்து ஆட்களை ஏற்றிச் செல்லும் விமானத்தில் இருந்தது. திடீர் என்று போனில் வந்தார் எனதருமை மச்சான். கவனம் .. கவனம் என்று எனது கவனத்தை திருப்பப் பார்த்தார். நான் அவரின் பேச்சில் கவனமில்லாமல் இருப்பதை அறிந்ததும் மீண்டும் கவனம் சொல்லி வைத்தார்.
எனக்கு உடுப்பு தரப்பட்டது. போட்டுக் கொண்டேன். ஒரு வித பட்டிபோன்றதொன்றைத் தந்த போது ஏன் இது என்றேன். இது தான் உன்னை என்னுடன் இணைத்து வைத்திருக்கும் பட்டி என்றார். உடனே அதை கவனமாகப் பார்த்து பூட்டிக் கொண்டேன். எனக்குப் பின்புறம் வந்து நின்று அந்த பட்டியை மேலும் இறுக்கினார் ஆசிரியர். எனக்கு ரெண்டு காலுக்கும் நடுவில் பயங்கரமாய் வலித்தது. நெளிந்தேன். அவர் அதை கண்டுகொள்ளாத மாதிரி இருந்தது.
சில பயிட்சிகள் தரப்பட்டன. விமானத்தில் இருந்து பாய்ந்த பின் கை, கால்களை எப்படி வைத்திருப்பது என்றும் விளக்கினார்.
வானத்திரிலுந்து பலர் குதித்து கீழே ஆடிக்கொண்டு வந்தனர். தேவர்களும், தேவைதைகளும் முகில்களுக்குள்ளால் வரும் அந்தக் காலத்து படங்கள் போலிருந்தது, அது. அவர்களுக்குள் ”எமன்” தெரிகிறாரா என்று பார்த்தேன்.. இல்லை போலிருந்தது.
எனது விமானம் வந்து நின்றது. தங்கை கட்டிப்பிடித்து முத்தமிட்டு அனுப்பினாள். அம்மாட்ட கேட்டதாகச் சொல் என்றேன் நக்கலாய். கட்டாயம் என்றாள் ஈவுஇரக்கமின்றி.
அது ஒரு குட்டி விடமானம். அதில் ஏறினேன். சீட்களை களட்டி விட்டிருந்தார்கள். வண்டிலில் ஆட்களை ஏற்றுவது போல 15 பேரை ஏற்றினார்கள். எல்லோரும் குந்திக் கொண்டதும் காதடைக்கும் சத்தத்துடன் புறப்பட்டது விமானம்.
எனது பயிட்சியாளர் என்னைப் பார்த்து ”ஓகே”யா? என்பது போல சாடையில் கேட்டார். ஓம் என்றேன். விமானம் மேலெழும்பிக்கொண்டிருந்தது. எனது இதயத்துடிப்பைப் போல.
யன்னலால் எட்டிப் பார்த்தேன் எல்லாம் சிறிதாய் தெரிந்தன. அவை சற்று நேரத்தில் புள்ளிகளாய் மாறின. விமானம் 10000 அடி உயரத்தை அடைந்ததும் ஆயத்தமாகுமாறு உத்தரவிட்டார் பயிட்சியாளர். விமானத்தின் பின் கதவு திறந்தது. 12000 அடி உயரம் வந்ததும். எல்லோரும் யாய்ந்தனர். பயிட்சியாளர் என்னை தன்னுடன் இணைத்துக் கொண்டார். வாசலுக்கு வந்தோம். பயிட்சியாளர் எனக்கு பின்னால் இருந்து தயாரா என்றார். பூலோகத்தை ஒரு தரம் பார்த்தேன். எல்லாம் மிக மிக தூரத்தில் புள்ளிகளாயும் நீல நிறத்திலும் தெரிந்தன.
”ஜம்ப்” என்று சொன்னவுடன், எனது இரு இளவரசிகளையும் நினைத்துக் கொண்டே பாய்ந்தேன். என்னுடன் ஒட்டிக் கொண்டு பயிட்சியாளரும் வந்தார். பறப்பது என்றால் இது தான் என்று உணர முடிந்தது. விழும் வேகத்தில் முகத்தில் இருந்த சதைகள் எல்லாம் தள தள என்று ஆடின. பயிட்சியாளர் கமராவை தனது கையில் பூட்டி என்னைப் படம் எடுத்துக் கொண்டிருந்தார்.
James Bond ஆக நடித்த அந்தக் காலத்து கதாநாயகன் Roger Moore ஒரு படத்தில் தங்கப் பல்லு வில்லனுடன் இப்படி விமானத்தில் இருந்து பாய்ந்து சண்டை பிடித்தது ஞாபகம் வந்தது. என்னையும் James Bond ஆக நினைத்துக் கொண்டேன்.
திடீர் என்று பயிட்சியாளர் பரசூட் கயித்தை இழுக்க வானத்தை நோக்கி எம்மை இழுத்துக் கொண்டு போனது பரசூட். வயிற்றுக்கள் ஏதோ செய்வது போலிருந்தது எனக்கு. சற்று நேரத்தில் அழகாய் விரிந்து மெதுவாய் ஆடி ஆடி இறங்கத் தொடங்கியது.
எறும்புகள் ஒரு பாதையில் போவது போல மிகச் சிறிதாய் தெரிந்தன வாகனங்களும், ரோட்டுகளும். பயிட்சியாளர் என்னை பரசூட்டை இயக்க விட்டார். நானும் சிறுபிள்ளை போல் அதை அங்கும் இங்கும் ஆட்டி இயக்கிப் பார்த்தேன். நாம் இறங்கும் இடம் தூரத்தில் தெரிந்து, மெதுவாய் அருகில் வந்தது.
பயிட்சியாளர் சொல்லித் தந்ததை மறக்காமல் கால் இரண்டையும் தூக்கிப் பிடிக்க அவர் மெதுவாக என்னை உயிருடன் பூலோகத்தில் மீண்டும் இறக்கிவிட்டார்.
தங்கை பேயைப் பார்ப்பது போல் என்னைப் பார்த்துக் கொண்டிருந்தாள். நான் பேய் இல்லை என்று உறுதி செய்து கொண்ட சற்று நேரத்தின் பின் தான் புன்னகைத்தாள்.
பயிட்சியாளருக்கு நன்றி சொல்லி, வீடியோவையும் வாங்கிக் கொண்டு வெளிக்கிட்டோம். தங்கை ஏதும் கதைக்காமல் காரோடினாள். நான் வானத்தால் விழுந்த அலுப்பில் தூங்கியிருந்தேன்.
நீ என்ன வானத்தால விழுந்தவனா என்று யாரும் கேட்டால், ஓம் நான் வானத்தால விழுந்தவன் தான் என்று பதில சொல்ல யோசித்திருக்கிறேன்.
வீடியோ லிங்க்
http://www.facebook.com/video/video.php?v=1158887298742