Monday 8 February 2010

ATBC வானொலிக் குடும்ப ஓன்றுகூடல் 2010

அவுஸ்திரேலியாவில் தமிழ்ச்சமூகத்தின் பேராதரவுடன் இயங்கி வரும் 24 மணி நேர சமூக வானொலி அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் நேற்று பெப்ரவரி 7 ஆம் திகதி தனது வருடாந்த வானொலிக் குடும்ப ஒன்று கூடலை வெகு சிறப்பாக நடாத்தியது. வருடா வருடம் கண்ணுக்கும் செவிக்கும் விருந்தாகக் கலைநிகழ்ச்சிகளும், நாவுக்கு ருசியாக அறுசுவை உணவும் கலக்க இந்த நிகழ்வு, வானொலியின் பேராதரவு தரும் நேயர்களும் 70 க்கும் மேற்பட்ட அறிவிப்பாளர்கள, நிகழ்ச்சித்தயாரிப்பாளர்கள், தொண்டர்கள் உள்ளடங்கலாக நடைபெறுவது வழக்கம். கடந்த ஆண்டு ஈழத்தின் கொடூரமான போர்ச்சூழல் காரணமாக இந்த நிகழ்வு நடைபெறாமல் இருந்தது குறிப்பிடத்தக்கது.

கடந்த பெப்ரவரி 7 ஆம் திகதி Bowman Hall, Blacktown என்ற இடத்தில் மாலை 6.05 இற்கு ஆரம்பமாகி இரவு 10 மணி வரை அரங்கு நிறைந்த இருக்கைகளோடு சிட்னியின் மிகப்பிரமாண்டமான இலங்கை இந்திய மளிகைக்கடையான உதயா சுப்பர் மார்ட் ஸ்தாபனத்தாரின் பேராதாரவோடு அரங்கு நிறைந்த இருக்கைகளோடு இனிதே நடந்தேறியது.

இந்த நிகழ்வினை தமிழ் மூத்த குடிமக்களின் பிரதிநிதியாக திரு.நிக்கலஸ் இராஜநாயகம், மற்றும் அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் ஆலோசகர் திரு. மகேசன் (வானொலி மாமா) ஆகியோர் மங்கல விளக்கேற்றி ஆரம்பித்து வைத்தார்கள். தொடர்ந்து இளையோர் சமூகத்தில் இருந்து தமிழ்தாய் வாழ்த்து, அவுஸ்திரேலிய தேசிய கீதம், அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் பண் ஆகியவை பாடிச் சிறப்பிக்கப்பட்டன.


தாயகத்தில் போரால் கொல்லப்பட்ட இன்னுயிர்களை நினைவு கூர்ந்து இரண்டு நிமிடம் மெளன அஞ்சலியோடு முக்கிய நிகழ்வுகளுக்கு நகர்ந்தது. அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் நிகழ்ச்சித் தயாரிப்பாளரும், சிட்னியின் பிரபல நடன ஆசிரியையுமான திருமதி கார்த்திகா கணேசரின் மாணவியர் புகழ் பெற்ற திரையிசை நடனங்களை ஜனரஞ்சகமாக வழங்கினர். அவை சிறப்பான நெறியாள்கையோடு கச்சிதமாகக் காண்போர் மனதைக் கவர்ந்தன.

வானொலியின் இயக்குனர்களில் ஒருவரான திரு ஈழலிங்கம் அவர்கள் சிறப்புரை ஆற்றினார்.

வானொலி நிகழ்வுகளில் முன்னோடியாக, அவுஸ்திரேலியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் முழுமையாக ஒரு மணி நேர நிகழ்ச்சியாக "துளிர்" என்ற நிகழ்ச்சியைத் தயாரித்து வழங்கும் சிறுவர்கள் இந்த நிகழ்விலே துளிர் பொது அறிவுப் போட்டி ஒன்றை நடத்திப் பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தினார்கள். இந்த நாட்டில் பிறந்து தமிழ் கற்றும் வாழும் இப்பிள்ளைகள் முழுமையான தமிழ் அறிவிப்போடு, பார்வையாளர்களில் இருந்து தேர்வு செய்யப்பட்ட சிறார்களை இரண்டு பிரிவாக வைத்து, தமிழ் இலக்கியம், சினிமா, அறிவியல், புவியியல், விளையாட்டு என்று ஒவ்வொரு துறையிலும் கேள்விகளை இருபகுதிக்கும் கேட்டு நடாத்திய இந்தப் போட்டியினை வெகுவாக ரசித்ததோடு சரியான பதில்களை அவர்கள் சொல்லும் போது வயது வேறுபாடின்றிக் கைதட்டி ஆரவாரித்தனர் பார்வையாளர் சமூகம்.

அரங்கில் நிகழ்ச்சிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது நேயர்கள் குழுமியிருந்த மேசைகளில் மிக்சர், மென்பானங்கள் போன்றவை வழங்கப்பட்டுக் கொண்டிருந்தன. இந்தப் பணியிலும் வானொலி அபிமானிகள் தாமாக வந்து இணைந்து பங்கேற்றது சிறப்பு.

அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் நிகழ்ச்சித் தயாரிப்பாளர்கள், அபிமானிகள் இணைந்த சிட்னி கானஸ்வரா இசைக்குழு பழைய, புதிய பாடல்களைப் பாடி ஆடவும் செய்து சிறப்பித்தது. வழக்கமாக இப்படியான பாடல் விருந்துகளுக்குக் கோளாறு பதிகம் படிக்கும் ஒலிவாங்கியும் கட்டுண்டு ஒத்துழைத்தது சிறப்பு. இந்த இடத்தில் நிகழ்வில் முழுமையாக வழங்கப்பட்ட சிறப்பான ஒலித்தரத்தையும் சொல்லி வைக்க வேண்டும்.

சிட்னி கலையகம் 1, சிட்னி கலையகம் 2, மெல்பேர்ண் கலையகம், ரொரொண்டோ கலையகம் என்று அரங்கின் நான்கு மூலைகளிலும் இரவு உணவு பரிமாறும் பகுதிகள் அமைக்கப்பட்டு இடியப்பத்தோடு சைவ அசைவ உணவுகளும் பரிமாறப்பட்டு பாயாசத்தோடு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

உணவு பரிமாறும் வேளையில் அறிவுக்களஞ்சியம் என்ற பொது அறிவு வினாக்கொத்து வழங்கப்பட்டு நேயர்களின் மூளைக்கு வேலை கொடுக்கப்பட்டது. பெடியள் மொபைல் இன்ர நெட்டில் விடைகளைத் தேடிக் கண்டு பிடித்து எழுதியது சுவாரஸ்யம். தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்திடல் வேண்டும் என்று சொன்னவர் யார் என்று கேட்ட கேள்விக்கு யாரோ புண்ணியவான் "பாரதிராஜா" என்று எழுதிவைத்தார் (அவ்வ்வ்வ்)

நிகழ்ச்சிகளை திரு.நவரட்ணம் ரகுராம், மற்றும் திரு செல்லையா பாஸ்கரன் ஆகியோர் தொகுத்து வழங்க அரங்க அமைப்பை திரு சிவசம்பு பிரபாகரனும் நெறிப்படுத்தினார்.
இந்த ஒன்று கூடலின் நிர்வாகத் தயாரிப்பாளராக திரு அலேசியஸ் ஜெயச்சந்திராவும் பொறுப்பேற்றதோடு ஒவ்வொரு பணியிலும் வானொலி அறிவுப்பாளர்களும் தொண்டர்களும் நியமிக்கப்பட்டுத் தம் பணியைச் செவ்வனே செய்தார்கள். மெல்பன் கலையகத்தில் இருந்து நிகழ்ச்சித் தயாரிப்பாளர் திருமதி சாந்தினி புவனேந்திரராஜா அவர்களும் வந்து சிறப்பித்தார்.

இரவு உணவு இடைவேளைக்குப் பின் அமெரிக்கன் முறையிலான தரகு விற்பனை (American Auction) என்ற புதுமையான நிகழ்வை திரு மகேஸ்வரன் பிரபாகரன் நடத்தினார். அதில் வானொலிப்பெட்டி உள்ளடங்கலாக பெரும் விலைமதிப்புள்ள பொதி ஒன்றை இளைஞர் குழு சுவீகரித்தது.

நிறைவாக ஆனால் முத்தாய்ப்பாக, ஈழத்தின் பொப்பிசைப் பிதா "சின்ன மாமியே" புகழ் நித்தி கனகரத்தினம் தன் இனிய மலரும் நினைவுகளொடு தனக்கே உரிய கிண்டலுமாகக் கலந்து கட்டி வழங்கிய பொப்பிசை விருந்து பார்வையாளர்களை ஆட வைத்து அலங்கரித்தது. இன்னும் வேண்டும் வேண்டும் என்று அரங்கமே யாசிக்க, நேரக்கட்டுப்பாடு கருதி சரியாகப் பத்து மணிக்கு இந்த ஒன்று கூடல் நிறைவேறியது.

அரங்கம் நிறைந்த கூட்டம், மனம் நிறைய வெளியேறியது.
அப்ப நீர் என்ன செஞ்சனீர் எண்டு கேட்காதேங்கோ, நான் படங்கள் சுட்டுக் கொண்டிருந்தனான் ;-)


முழு ஆல்பத்தையும் பார்வையிட இங்கே கிளிக்குங்கோ

5 comments:

pudugaithendral said...

அரங்கம் நிறைந்த கூட்டம், மனம் நிறைய வெளியேறியது.
அப்ப நீர் என்ன செஞ்சனீர் எண்டு கேட்காதேங்கோ, நான் படங்கள் சுட்டுக் கொண்டிருந்தனான் ;-)//

super boss unga kadamai unarchiya paratturen. chinna boss vanthachu ini aatam than :))

சந்தனமுல்லை said...

ATBC வானொலிக் குடும்பத்திற்கு வாழ்த்துகள்! ஃபோட்டோஸ் கலக்கல்!

Thamiz Priyan said...

ATBC வானொலிக் குடும்பத்திற்கு வாழ்த்துகள்!

நேயர்களான நாங்களும் அதில் அடக்கம் தானே.. ;-)

\\\அரங்கம் நிறைந்த கூட்டம், மனம் நிறைய வெளியேறியது.
அப்ப நீர் என்ன செஞ்சனீர் எண்டு கேட்காதேங்கோ, நான் படங்கள் சுட்டுக் கொண்டிருந்தனான் ;-)//\\

இதைத் தான் கேட்கனும்னு வந்தேன்... ;-))

கானா பிரபா said...

வருகைக்கு நன்றி புதுகைஸ் ;)

மிக்க நன்றி ஆச்சி

தமிழ்ப்பிரியன்

உங்களை விடுவேனா தல ;)

ஆயில்யன் said...

//\\\அரங்கம் நிறைந்த கூட்டம், மனம் நிறைய வெளியேறியது.
அப்ப நீர் என்ன செஞ்சனீர் எண்டு கேட்காதேங்கோ, நான் படங்கள் சுட்டுக் கொண்டிருந்தனான் ;-)//\\/

ஹம்ம்ம்ம்ம் சில விசயங்களை நம்பித்தான் வாழ வேண்டியிருக்கு!

நம்பிட்டோம்!:)))