Tuesday, 16 February 2010

மவுன்ட் ருபஸ் இல் அடியேன்

குவீன்ஸ் டவுன் குளிர் இதமாகத்தான் இருந்தது. இரவு தங்கியிருந்த பக்பாக்கர்ஸ் கட்டிலில் படுத்திருந்தபடியே இன்றைய நாளை திட்டமிட்டேன். காலை சுரங்கத்தொழில் நடைபெறும் இடத்தைப் பார்ப்பதாயும், 13 மணி போல் Cradle Mountain மலைத் தொடரில் உள்ள 1415 மீற்றர் உயரமான மவுன்ட் ருபஸ் மலை ஏறத் தொடங்கினால் மாலை எட்டு மணி போல் வந்து சேரலாம் என்று முடிவெடுத்துக் கொண்டேன்.

நேற்று ரிசப்சனில் புன்னகை செய்யவேண்டும் என்பதற்காய் புன்னகைத்து என்ன உதவி செய்யட்டும் என்று கேட்டவளிடம் சுரங்கத் தொழில் நடை பெறும் இடத்தை பார்க்க ஆசை என்றேன். அப்படியா? ஏன்று கேட்டவள் நாளை காலை டூரிஸ்ட் கந்தோரில் கேள் ஒழுங்கு செய்வார்கள் என்றாள். எத்தனை மணிக்கு என்று கேட்டதற்கு…வாயைப் பிதுக்கி மே பி எயிட் ஓ நைன் என்றாள்.

நேரம் 8 தொட்டுக் கொண்டிருந்தது. எழும்பி பல் விளக்கி, உடுப்பு மாத்தி தேத்தண்ணி குடிப்பம் என்றால்… பக் பாக்கர்ஸ்க்கு யார் தேத்தண்ணி தாறாங்கள், அதுவும் 30 டொலர் அறையில்?

தேத்தண்ணி குடிக்காட்டி ”அதுக்கு” வராதே…. ஏன்ன செய்வம்? அதுவும் 7 மணிநேர மலை ஏற்றத்தையல்லவா இன்றைக்கு செய்வதாக என் மனதுடன் ஒப்பந்தம் செய்துள்ளேன்… மற்றவர்கள் மாதிரி கண்ட இடத்தில் தண்ணியில்லாமலும் சரிவராதே…. என்று யோசித்துக் கொண்டு இருந்த போது யுகமானியில் வந்த ” தம்பி நீங்க நல்வாயிருக்கோணும்” கதை ஞாபத்தில் வந்து போனது.. (அருமையானதோர் கதை, அதுவும் என்னைப் போல் ”அதுக்கு போக” கஸ்டப்படும் ஒருவரின் கதை)

இப்படி யோசித்துக் கொண்டிருக்கும் போது கண்ணில்பட்டாள் ரும் சேர்விஸ் பெண். அவளின் புண்ணியத்தில் பிளேன் டீ குடித்து, ”அது” முடித்து டூரிஸ்ட் கந்தோரில் ஆஜரான போது நேரம் 9.30 ஐ நெருங்கிக் கொண்டிருந்தது. டூரிஸ்ட் கந்தோரில் பூட்டு தொங்கிக் கொண்டிருந்தது.

இதை பார்த்துக் கொண்டிருந்தால் நேரம் போய்விடும் என்பதால் ஏறி இருந்து வாடகைக் காரை இயக்கினேன். நவிகேசன் எடுத்து, இடம் சொல்லி, வழி காட்டு என்ற போது 100 மீற்றரில் வலது பக்கம் திரும்பு, பின் வட்டச் சந்தியில் இரண்டாவது பாதையால் வெளியேறு என்றாள் வழிகாட்டி.

காருக்கு எண்ணைய் (அதுதானப்பா பெற்றோல்) அடித்துக் கொண்டு வட்டச் சந்தியில் இரண்டாவது பாதையால் வெளியேறினேன். 87 கீ.மீ தொடர்ந்து செல் என்று கட்டளை கிடைத்தது. குடல் போல வளைந்து போகும் (எத்தனை நாளைக்கு தான் பாம்பு போல வளைந்து போகும் பாதை என்று சொல்வது) பாதையில் பயணித்துக் கொண்டிருந்த போது குயின்ஸ் டவுன் ஐ சுரங்கத் தொழில் படுத்தியிருக்கும் பாட்டை பார்க்கக் கிடைத்தது. ஊரெல்லாம் கிண்டு, கிண்டு என்று கிண்டி வைத்திருக்கிறார்கள். நாலைந்து படங்கள் எடுத்துக் கொண்டேன்.

குயின்ஸ் டவுன்ஜ சிட்னியுடன் ஒப்பிட்டால் அவுஸ்திரேலியாவா என்று கேட்பீர்கள். சேரிப்புறத்து வீடுகளைப் போன்றே வீடுகள் இருக்கின்றன. புதிய வீடு ஒன்றைக் கூட காணக்கிடைக்கவில்லை. சுரங்கத் தொழில் படுத்து விட்டது. புதிய தொழிற்சாலைகளோ, நிறுவனங்களோ இல்லை. இளம் சமுதாயம் வேலை தேடி நகரங்களுக்கு போயிருக்க வேண்டும் என நினைக்கிறேன். சுற்றுலாத்துறையை மட்டும் மிகச் சிறப்பாக முன்னேற்றி வைத்திருக்கிறார்கள்.

கார் வளைந்து வளைந்து போய்க் கொண்டிருந்தது. வழிகாட்டி இன்னும் 80 கி.மீ இருக்கு எனவும். இந்த வேகத்தில் போனால் 11.45 க்கு போவேன் என்று காட்டிக் கொண்டிருந்தது. வேகம் கூட்டி, குரூஸ் கொன்றோலில் 100 கி.மீ காட்டி இயற்கையை ரசித்துக் கொண்டிருந்தேன். நான் கடந்த 99 வீதமான சிறிய பெரிய நீரோட்டங்களுக்கு (தண்ணீரில்லாதவற்றிற்கும் சேர்த்து) பெயர் சூட்டியிருந்தனர். ஏன் இதற்கு இவ்வளவு முக்கித்துவம் கொடுக்கிறார்கள் என்று புரியவில்லை.மற்றை இடங்களைப் போல இந்த வழியில் (Lyell HW - A10) வீதியில் இறந்து கிடக்கும் மிருகங்கள் மிகக் குறைவாகவே இருந்தன. டஸ்மானியாவில் இருந்த 5 நாட்களிலும் கிட்டத்தட்ட 1500 கி.மீ கார் ஓடியிருந்தேன். ஆகக் குறைந்தது 150 இறந்த கங்காருக்களை வீதியோரத்தில் கண்டிருப்பேன். கங்காருக்களை விட டஸ்மானியா டெவில், முயல், முள்ளம் பன்றி போன்றதொரு சிறிய பன்றி, குருவிகள் என ”வீதி” பலியெடுத்திருந்த மிருகங்கள், பறவைகளின் எண்ணிக்கை மிக அதிகம். அடிபட்டு கிடக்கும் மிருகங்களை தன்னை மறந்திருந்து ருசிக்கும் போது கடந்து போகும் வாகனங்களில் அடிபடும் பறவைகளும் அதிகம் (பசி வந்தால் பத்தும் பறக்கும் என்பார்களே.. அது இந்த குருவிகளுக்கும் பொருந்தும் போல)

திடீர் என சாத்தான் மனம்.. இன்று மலை ஏறாது Hobart போய் பார் என்றது. 10 – 15 நிமிடங்கள் ஒரே போராட்டமாய் இருந்தது. கால நிலையும் மழை, காற்றாய் இருந்தது. அனுபவப்படி நோர்வேயில் மலையேற முதல் காலநிலை மழை, காற்றாய் இருந்தால் மலையுச்சியில் கடுங் குளிர் காற்று வீசும். சாத்தான் மனம் இதையும் ஒரு சாட்டாக வைத்து Hobart போ என்றது. இருப்பினும் எனக்கு மலையுச்சிகளின் மீதுள்ள காதலினால் சாத்தானின் வேதத்தை கேட்க மறுத்தேன்.

Franklin – Gorden தேசிய வனப்பகுதியினூடாக போய் கொண்டிருக்கும் போது ஆங்காங்கே வீதி செப்பனிடல் வேலை நடந்துகொண்டிருந்தது. ஆங்காங்கே காரை நிறுத்தி படங்கள் எடுத்துக் கொண்டேன். வழி நெடுகிலும் மிக குறைந்த வாகன நடமாட்டமே காணப்பட்டது. ஒரு குளக்கரை மிக ரம்யமாக இருந்தது.

1 கி.மீ இடது பக்கம் திரும்பு என்றது வழிகாட்டி இயந்திரத்தினுள் இருந்த பெண் குரல். வேகம் குறைத்து இடது புறம் திரும்பினேன். Lake St. Clair என்னை வரவேற்பதாக பெரியதோரு அறிவுப்புப்பலகை சொல்லியது. தலை வணங்கி வரவேற்பை ஏற்றுக் கொண்டேன்.காரை நிறுத்தி National Park Entry Pass ஐ கண்ணாடியில் தெரியும்படி வைத்தேன். (டஸ்மானியாவில் National Park பார்க்க வேண்டும் எனின் கார்க்கும் மனிதர்களுக்கும் சேர்த்து Entry Pass எடுக்க வேண்டும். நான் ஏற்கனவே முழு டஸ்மானியா பாஸ் எடுத்திருந்தேன். (முழு டஸ்மானியா பாஸ் எடுத்தால் விலை குறைவு)

முதுகுப் பையில் உணவு, நீர், மழையுடைகள், டோர்ச், IPod, நனைந்தால் மாற்ற என உடைகள் எடுத்து வைத்துக் கொண்டு வானத்தைப் பார்த்தேன்…. கடவுள் என்னைப் பார்த்து Sorry buddy , இன்று மழையும் காற்றும் தான் என்று சொல்லிக் கொண்டிருந்தார்.

Visitor Centor க்குள் புகுந்து ”Cradle Mountain – Tasmania, Australia” . Mount Rufus பற்றிய விபரங்களை பெற்றுக் கொண்டேன். நான் திட்டமிட்டிருந்த மவுன்ட் ருபஸ் சுற்றுப்பயணத்தின் இறுதிப்பகுதியை மண்சரிவு, நீரோட்டம் காரணமாக தற்காலிகமாக தடை செய்திருந்தார்கள். போகும் வழியாலேயே திரும்ப வருவது எனக்கு பிடிக்காத வேலை. ஏன்றாலும் ஏற்றுக் கொள்ள வேண்டியிருந்தது.

வெளியில் அடித்த குளிர் காற்றின் வேகம் கண்டதும் அனுபவம் விழித்துக் கொண்டு தலையையும், காதையும் மறைக்கும் தொப்பியை வாங்கு என்றது. அதிக விலைகொடுத்து ஒரு தொப்பி வாங்கினேன். தொப்பியின் அருமை மலையுச்சியை நெருங்கும் போது புரிந்தது. அந்த தொப்பியில்லாமல் உச்சியை தொட்டிருக்க முடியாது.

தொப்பி வாங்கிய இடத்தில் ஜக்கட் இல் ஒட்ட ”Cradle Mountain – Tasmania, Australia”
என்று எழுதிய ஒரு ஸ்டிக்கரும் வாங்கிக் கொண்டேன். Visitor Center ஐ மிகவும் அழகாகவும், திட்டதிட்டமிட்டும் உருகாக்கியிருக்கியிருப்பது மட்டுமல்ல. Cradle Mountain பற்றிய சகல விபரமும் தருகிறார்கள். எங்கு, எந்த வழியால் போகலாம், எவ்வளவு நேரமெடுக்கும். எவ்வளவு தூரம் என்று சுற்றுலாப்பயணிகளுக்கு தேவையான சகல தகவல்கள் மட்டுமல்ல, மிருகங்கள். பாம்பு பற்றிய அறிவித்தல்களும், காலநிலை அறிவுறுதல்களும் கிடைக்கின்றன.

Visitor Center கந்தோருக்குள் ஒரு இலங்கை அல்லது இந்தியப் பெண் தெரிந்தார். ஆச்சரியமாக இருந்தது. நம்மவர்களை டொக்டர், இன்ஜினியர் என்று தானே படிப்பிப்பார்கள். டொக்டராயும், இன்ஜீனியராயும் படிக்காட்டி அவன் படிக்காதவன் என்று சொல்லுவாங்கள் எங்கடயாக்கள் என்று யாரோ சொன்னது ஞாபகத்தில் வந்து போனது. ரேஞ்சர் உடுப்பில் அந்தப் பெண்ணைப் பார்த்ததும் மகிழ்ச்சியாய் இருந்தது. எந்த ஊர் என்று உறுதி செய்து கொள்வதற்காய் உற்று உற்றுப் பார்த்தேன். ஒரு முடிவுக்கும் வரமுடியவில்லை. தமிழ்ப் பெண்ணாய் இருந்திருந்தால் நல்லம் என்று எனக்குள் நினைத்துக் கொண்டேன்.
ஒரு பிளேன் டீ வாங்கி குடித்துவிட்டு காட்டப்பட்டிருந்த பாதையால் நடக்கலானேன். என்னைச்சுற்றி யூகலிப்டஸ் மரமாகவே காட்சியளித்தது. எங்கும் மரங்கள்.. உயிருள்ள, உயிரற்ற, சிறிய, பெரிய, மிக மிகப் பெரிய மரங்கள் என்று ஒரே மரங்களாய் இருந்தது நடைபாதை முழுவதும்.நீரோடைகளை, சிறிய குன்றுகளை, சதுப்பு சநிலங்களை கடந்து ஏறத்தாழ 3மணி நேரத்தின்பின் மலையின் உச்சி தெரிய ஆரம்பித்தது. ஓரிடத்தில் என்னைச் சுற்றியிருந்த மரங்கள் எல்லாம் இறந்தும், காய்ந்தும் தங்கள் முதுமையை அறிவித்துக் கொண்டிருந்தது. அந்த இடத்தில் மட்டும் அப்படி இருந்ததற்கான காரணம் புரியவில்லை. மேலும் மேலும் நடந்து கொண்டிருந்தேன் நேரம் போக போக பயங்கரமான காற்றும் வா வா என்று வரவேற்றது.

வாங்கிய தொப்பியை மாட்டிக் கொண்டு நடக்கலானேன். குளிர் காற்று ஊசிபோல் குத்திக்கொண்டிருந்தது. கையுறை கொண்டு வராததன் பலனை அனுபவிக்கலானேன். முதலில் நுனி விரல் விறைத்தது, பிறகு விரல் முழுவதும் விறைத்தது. தாங்க முடியாமல் பையில் வந்திருந்த shopping bag ஐ எடுத்து கையில் சுற்றிக்கொண்டேன். காற்றின் அகோரத்தை பை தாங்கிக் கொண்டதால் கொஞ்சம் ஆறுதலாய் இருந்தது. மலை உச்சி நெருக்கத்தில் தெரியத் தொடங்கியது. ஆனாலும் இன்னும் தூரம் கொஞ்சம் இருப்பது புரிந்தது. உடம்பும், கையும், காலும் குளிரின் அகோரத்தால் திரும்பிப் போ, திரும்பிப் போ என்று கத்திக்கொண்டிருக்க, உச்சியை தொட நினைத்த மனம் மட்டும் இல்லை, இல்லை இன்னும் கொஞ்ச தூரம் தானே என்று சமாதானம் சொல்லிற்று.திடீர் என காற்றின் அகோரம் அதிகரித்தது. நிற்க முடியாதளவுக்கு காற்றின் வேகம் அதிகரித்த போது அருகிலிருந்த ஒரு பாறையின் மறைவில் சற்று இளைப்பாறலானேன். கொண்டு வந்திருந்த பாண் துண்டுகளை தண்ணீருடன் விழுங்கி முடித்தவுடன் சற்று சக்தி திரும்பியது போலிருந்தது. காற்றோ பயங்கர சத்தத்துடன் உக்கிரம் குறையாமல் வீசிக்கொண்டிருக்க மனமோ எப்ப‌டி 500 மீற்றர் தூ‌ரத்தில் உள்ள உச்சியை எப்படி தொடுவது என்று போசித்துக் கொண்டிருந்தது. நிமிர்ந்து நின்றால் காற்று என்னை பின்னுக்கு தள்ளியது. பல்லைக்கடித்துக் கொண்டு சற்று முன்னேறி இன்னொரு கல்லின் பின்னால் நின்று காற்றின் அகோரத்தை தவிர்த்துக் கொண்டேன். இப்படியே 300 மீற்றர் தூரம் மெது மெதுவாய் முன்னேறினேன். உச்சி கைக்கெட்டிய தூரத்தில் இருந்தது. இனி காற்றின் அகோரத்தை தாங்க கற்கள் இல்லை. வெறும் வெட்ட வெளியாய் இருந்தது. மெது மெது வாய் காற்றை எதிர்த்துக்கொண்டு ஏறத்தாழ 20 நிமிடத்தின் பின் உச்சியில் இருந்த கற்குவியலில் கை வைத்த போது பட்ட துன்பமெல்லாம் காற்றாய் கரைந்திருந்தது அதே வேளை கைகள் உணர்ச்சியின்றி மரமாய் விறைத்திருந்தன.


முகில் மூட்டங்கள் முழு மலையையும் மறைக்கத் தொடங்கியது. மலையைச் சுற்றியிருந்த எதுவும் தெரியவில்லை. எனது பங்காக கற்குவியலின் மீது ஒரு கல்லை எடுத்து வைத்துவிட்டு மெதுவாய் இறங்கத் தொடங்கினேன். (ஒவ்வொரு மலையுச்சியிலும் கற்களை உயரமாய் அடுக்கி வைத்திருப்பார்கள். உச்சிக்கு போகும் எல்லோரும் தங்கள் பங்கிற்காக ஒரு கல்லை எடுத்து வைப்பது வழக்கம்) காற்றின் வேகம் முதுகைத் தாக்கித் தொடங்கியிருந்தது. காற்றின் வேகத்தில் அடிபட்டுப் போகாமல் கவனமாய் இறங்கத் தொடங்கினேன்.

முகில் முட்டம் சற்று கீழே இறங்கியவுடன் காற்றுடன் கரைந்து போயிற்று. மலைக்கு ஏறும் இறங்கும் வழிகளை மிகவும் சிறப்பான முறைகளை அடையாளப்படுத்திருப்பதால் ஏறும் போதோ அல்லது இறங்கும் போதோ பாதைமாறாமல் செல்ல முடிந்தது. ஏறத்தாழ 7 மணி போல் மீண்டும் Visitor Center க்கு வந்த போது முழு உடம்பும் களைத்துப் போயிருந்தது. ஆனால் மனம் மட்டும் குதூகலித்துக் கொண்டிருந்தது. கால் தசைகளை கொஞ்சம் stretch பண்ணிக் கொண்டேன் இல்லா விட்டால் நாளை காலை எழும்பமுடியாது என்பதை அனுபவத்தில் அறிந்திருக்கிறேன்.


மெதுவாய் இருட்டத் தொடங்கியிருந்தது. களைப்புடன் பசியும் சேர்ந்து உணவும் ஓய்வும் வேண்டும் என கத்த ஆரம்பிக்க, வயிற்றுக்கு புல் போடும் வழியைத் தேடத் தொடங்கினேன். Visitor Center ஐ பூட்டிவிட்டு போயிருந்தார்கள். மெதுவாய் Mail road வந்து சேர்ந்தேன். மிகவும் அழகிய மரத்திலான ஒரு ‌ஹோட்டல் தென்பட என்னையறியாமலே கார் அங்கு போய் நிற்க காலையில் Visitor Center கண்ட இந்திய பெண்ணும் மற்றும் பல ரேஞ்சர்கள் வெளில் இருந்து பியர் குடித்துக் கொண்டிருந்தார்கள். அந்த இந்தியப் பெண்ணும் பியர் குடித்துக் கொண்டிருந்ததை மனம் ஏதோ ஏற்றுக் கொள்ள வில்லை.


உள்ளே போய் தங்க இடம் கேட்டேன். மன்னித்துக் கொள் ஒரு அறையும் இல்லை என்றாள் புன்னகையுடன். சாப்பாடாவது கிடைக்குமா என்றதற்கு மெனு காட்டை காட்டினாள். உருளைக்கிழங்கும், குளத்தில் பிடித்த trout மீனையும், மரக்கறியும் ஓடர் பண்ணி விட்டு வெளியில் வந்து ரேஞசர்களிடம் தங்க இடமுண்டா என்று விசாரித்தேன். அருகில் இல்லை 40 கி.மீ தூரம் காட்டுப் பாதையால் போனால் ஒரு ஹோட்டல் வரும் என்றார்கள். ஆனால் அந்த பாதையில் 30 கி.மீ தூரம் ஒடுங்கிய கிரவல் பாதை எனவும், அதிகம் மிருகங்கள் உலாவும் இடம் என்றும் கூறினார்கள். அதைக் கேட்டவுடன் எனக்குள் ஆர்வம் அதிகமாக சாப்பிட்டு விட்ட பிறகு அங்கு போக தீர்மானித்தேன். வழியில் ஏதும் பிரச்சனை எனின் காரிலேயே இரவுப் பொழுதை கடத்தலாம் என்றும் திட்டமிட்டுக் கொண்டேன்.

சும்மா சொல்லக் ‌கூடாது குளத்தில் பிடித்த trout மீனையும், மரக்கறியும் அபாரமான சுவையுடன் சமைத்திருந்தார்கள். உடம்பு அசதியில் மீன் முள்ளைத் தவிர எதையும் மிச்சம் விடாமல் ‌வயிற்றுக்கள் கொட்டிக் கொண்டேன். மேலதிகமாய் கறுப்பு கோப்பியும், apple pie, ice cream உம் வரவழைத்துக் கொண்டு குளிருக்காய் எரித்திருந்த ‌நெருப்பில் குளிர் காய்ந்து கொண்டே ருசித்து முடித்த போது நேரம் 8.30ஜ நெருங்கிக் கொண்டிருந்தது.

நவிகேசனை தட்டிவிட்டேன். அது தன்பாட்டில் வழியைக் காட்ட, மெதுவாய் ரேஞ்சர் சொன்ன கிரவல் பாதைக்குள் திருப்பினேன். ரேஞ்சர் சொன்னது போல கங்காருக்களும், டஸ்மானாயா டெவிலும் வழியை ஏதோ தங்கள் குத்தகைக்கு எடுத்த மாதிரி குறுக்கம் நெடுக்குமாய் பாய்ந்து கொண்டிருந்தன. திடீர் என ஒரு ‌ஜீப் மிக வேகமாய் கடந்து போயிற்று. அந்த ஜீப் என்னை கடந்ததும் வழியில் ‌ஒரு கங்காரு இரத்த வெள்ளத்தில் தனது இறுதி மூச்சை விட்டுக் கொண்டிருந்தது. அந்த ஜீப்காரன் கொஞ்சம் மெதுவாய் போயிருந்தால் அவுஸ்திரேலியாவுக்கு ஒரு கங்காரு மிச்சமாயிருந்திருக்கும்.

வழி நெடுகிலும் மிருகங்கள் முயல், கங்காரு, டஸ்மானியா டெவில் இன்னும் பெயர் தெரியாத விலங்குகள் என ஒரே மிருகங்களாய் இருந்தது. கிறவல் ரோட் என்பதால் கார் டயர் பஞ்சராகும் சந்தர்ப்பமும் அதிகம். எனவே 15 - 20 கி.மீ வேகத்திலேயே போய்க் கொண்டிருந்தேன். ஏறத்தாழ இரண்டு மணிநேரத்தின் பின் ரேஞ்சர் சொன்ன ஹோட்டல் வந்தது. புன்னகைத்தவளிடம் தங்க இடம் கேட்டு, விலை பேசி அறைக்குள் வந்த போது நேரம் 11 இருக்கும். சுடுததண்ணியில் அலுப்பு தீர முழுகி கட்டிலில் விழுந்தேன்.... கடந்து போன இனிமையான நாள் என்னை தாலாட்டி தூங்கவைத்துக் கொண்டிருந்தது.

டஸ்மானியாவை தவறவிட்டு விடாதீர்கள்...

சுற்றியவர்: சஞ்சயன்

5 comments:

கானா பிரபா said...

தஸ்மேனியாவைத் தவற விடோம், நல்ல கட்டுரை,
அண்ணை ஈஸ்டருக்கு உங்கட சிலவில போவம் என்ன மாதிரி வசதியோ?

வெள்ளிநிலா ஷர்புதீன் said...

expect more photos....

மாதேவி said...

அழகிய படங்களுடன் விரிவான கட்டுரை.

`மழை` ஷ்ரேயா(Shreya) said...

சிட்னியில 30°C அதே இரவு Mole Creek, Tas இல் 6°C. கோடையிலும் இந்தக் குளிருள்ள டஸ்மேனியாவுக்குக் கூழோட போனாத்தான் சரி. கெதியில கூழைக் காய்ச்சப் பழகுங்கோ பிரபா. :O))

சி.பி.செந்தில்குமார் said...

ஓசில டூர்.ரொம்ப ஜோர்