Wednesday 26 December 2007

"Bondi Beach" போனோம்

சிட்னிக்குச் சுற்றுலா வருபவர்கள், ஒபரா ஹவுசையும், டார்லிங் ஹாபரையும் தரிசித்து விட்டு, இன்னும் கொஞ்சம் ஒரு படி பக்திப்பழமாக இருந்தால் சிட்னி முருகன் ஆலயத்துக்குப் போய் அருச்சனையும் செய்வார்கள். இவற்றோடு இணையும் இன்னுமொரு சுற்றுலாத் தலம், சிட்னியின் கடற்கரைப் படுக்கைகள் ஆகும். சிட்னியின் கரையோரப் படுக்கைகளில் நல்ல கடற்கரைகள் அதிகம் இருக்கின்றன.

போர்ச் சூழல் நிலவும் இலங்கை போன்ற பகுதிகளைத் தவிர்த்து விட்டு டிசம்பர் மாதக் கோடைகாலத்தின் இதமான இளஞ்சூட்டைப் பருக விரும்பும் மேற்குலகத்தோர், அவுஸ்திரேலியாவின் Queensland மாநிலத்தில் உள்ள Gold Coast பிரதேசம் மற்றும் சிட்னியில் உள்ள கடற்கரைப் பகுதிகள், அதுவும் குறிப்பாக Bondi கடற்கரையைத் தேடி வருவார்கள். டிசம்பர் மாதம் தொடங்கி பெப்ருவரி மாத இறுதி வரை இப்படியான கடற்கரைகளை ஈ மொய்ப்பது போல கடற்கரையில் வெறும் மேலுடன் மனித உடல்கள் சூடு வாங்கிக் கொண்டிருக்கும்.

நல்ல சுத்தமான குருமண் படுக்கையும், சுத்தமான ஆழமற்ற கடற்படுக்கையும் கொண்டது Bondi கடற்கரை. இங்கே வருவதற்கு சிட்னியின் மத்திய புகையிரத நிலையமான Central Station சென்று Bondi Junction என்ற தரிப்புக்கு ஒரு ரயில் எடுக்க வேண்டும். பின் Bondi Juntion இல் இருந்து 10 - 15 நிமிட இடைவேளையில் இந்தக் கடற்கரை செல்லும் பஸ் பயணத்தை மேற்கொள்ள வேண்டும். பயணத்தினைப் பார்த்துப் பயந்து விடாதீர்கள். சிட்னியின் பெரும்பாகத்தில் இருந்து ஆகக் குறைந்தது ஒன்றரை மணி நேரத்துக்குள் இந்தக் கடற்கரையை வந்தடையலாம். மெல்பன் நண்பர்கள் இந்த கிறிஸ்மஸ் விடுமுறைக்கு வந்ததால் அவர்களோடு காரில் பயணம் செய்து இங்கு போனேன். நாலு மணி நேரக் கட்டண கார் தரிப்பு வசதிகள் கடற்கரையோரத்திலும், மற்றும் கார் தரிப்பு நிலையங்களிலும் உண்டு.

கடற்கரையோரம் நிறைய உணவகங்கள், தங்குமிடங்கள் இருந்தாலும் வாய்க்கு ருசியாக கடலுணவை புத்துணர்வோடு பெற்றுச் சாப்பிட நல்ல உணவகம் இல்லாதது பெருங்குறை. ஆனாலும் வயிற்றை நிறைத்து விடலாம்.

கடலில் நீந்தவும், உடை மாற்றவும், குளிக்கவும், கழிப்பகங்களும் கூடவே நல்ல வசதியோடும் பராமரிப்போடும் உள்ளன. கூடவே கடலில் மிதந்து களிக்கும் நீர்ச்சறுக்கல்(surfing) ஏற்பாடும் உண்டு. உலகின் முதல் கடல் மிதப்போர் பாதுகாப்பு கழகம் (world's first surf lifesaving club) ஆன Bondi Surf Bathers Life Saving Club இங்கு தான் ஆரம்பிக்கப்பட்டது. 1000 அங்கத்தவர்களையும் 260 தொண்டர்களையும் கொண்டு இயங்கும் இந்த அமைப்பு பல நல்ல சேவைகளைக் கடற்கரை நுகர்வோருக்கு வழங்குகின்றது.
ஆழக்கடலுக்குச் செல்வோரை ஒலிபெருக்கி மூலம் எச்சரித்துக் கரைக்கு வருமாறு ஆப்பு வைக்கின்றது. கூடவே எந்தெந்தப் பகுதிகள் கடல் நீராட உகந்தவை என்பதை அறிவித்தும் கொடிகள் நட்டும் காட்டுகின்றது இந்த அமைப்பு. மற்றைய கடற்கரைகளோடு ஒப்பிடும் போது சற்றே ஆழம் குறந்த கரை ஆனால் அதிக அலை அடிப்பை அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது.

கடற்கரை எங்கணும் திறந்த வெளி வெற்றுடலோடு ஆண்களும், மேலே பாதி கர்ச்சிப் கீழே பாதி கர்ச்சிப் உடன் பெண்களும் (சிலர் மேலேயும் இல்லாமல் ;)"கடலோரும் வாங்கிய காற்று" பாட்டை ஆங்கிலத்தில் ரீமிக்ஸுகிறார்கள்.

சிட்னிக்குப் போய்ப் பார், Bondi Beach இல் ஒண்டியாய் குளித்துப் பார் ;-)

( மெல்பன் நண்பர்களோடு எடுத்த கவர்ச்சிப் படங்கள் தணிக்கை செய்யப்பட்டு ;-) மேலதிக படங்கள் கீழே

10 comments:

வசந்தன்(Vasanthan) said...

//கூடவே கடலில் மிதந்து கழிக்கும் (surfing) ஏற்பாடும் //

அண்ணை,
அது 'களிக்கும்' எண்டு வந்திருக்க வேணும்.
கழிப்பிடங்களைப்பற்றி முதல் வசனத்தில கதைச்சுப்போட்டு அதோட சேத்து இந்த வசனத்தையும் எழுதினியள் பாருங்கோ....
மனுசர் கரையில கிடக்கிற கழிப்பிடத்தில இடமில்லாமல் கடலில மிதந்துகொண்டும் கழிக்கிறாங்கள் (எங்கட ஊர்வழிய செய்யிற மாதிரி) எண்டெல்லே சனம் நினைக்கப்போகுது.
உங்கட நாட்டைப்பற்றி என்ன நினைப்பினம்?

கானா பிரபா said...

அண்ணா வணக்கம்

தப்பு தான் திருத்தீட்டேன் ;-)

ஆனா கழிக்கிறதுக்கு இடம் முக்கியமா? அவசரத்துக்குக் கடல் தண்ணியும் பாதகமில்லைத்தானே;-)

CVR said...

///கடற்கரை எங்கணும் திறந்த வெளி வெற்றுடலோடு ஆண்களும், மேலே பாதி கர்ச்சிப் கீழே பாதி கர்ச்சிப் உடன் பெண்களும் (சிலர் மேலேயும் இல்லாமல் ;)"கடலோரும் வாங்கிய காற்று" பாட்டை ஆங்கிலத்தில் ரீமிக்ஸுகிறார்கள்.
/////

நீங்க அந்த இடத்துக்கு போனதுக்கான காரணம் புரிஞ்சு போச்சு அண்ணாச்சி!!!

இப்படி நம்ம தமிழ் பாட்டை ரீமிக்சுராங்களேன்னு கேட்கறதுக்கு தானே அந்த இடத்துக்கு அடிச்சு புடிச்சு போனீங்க?? ;)

வி. ஜெ. சந்திரன் said...

அழகாய் தான் இருக்கு......................................

:) என்ன எங்கட சனம் ஒண்டையும் காணம்?

கானா பிரபா said...

// CVR said...

நீங்க அந்த இடத்துக்கு போனதுக்கான காரணம் புரிஞ்சு போச்சு அண்ணாச்சி!!!//

காமிரா கவிஞரே

இராணுவ ரகசியங்களை வெளியே சொல்லக்கூட்டாது ;-)

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

பிரபா!
இங்கே குளிரில் காய்கிறம்,நீங்க கோடையில் காயுங்க.
படங்கள் நல்லா இருக்கு.
இந்த Surfing ஐ - நீர்ச் சறுக்கல் எனக் கூறக்கூடாதா??

கானா பிரபா said...

விஜே

தமிழ் ஆட்கள் இருந்தவை ஆனால் படம் பிடிச்சால் வம்பு கண்டியளோ ;)

யோகன் அண்ணா

நீர்ச்சறுக்கல் அருமையான சொற்பதம், உடன் நினைவில் வரவில்லை. இப்போ மாற்றி விட்டேன். மிக்க நன்றி.
இங்கே டிசம்பர் மாதம் என்றால் காட்டுத்தீ பரவுமளவு கொடும் வெப்பம் நிலவும். ஆனால் இந்த முறை தலைகீழாய் மழையும், இளஞ்சூட்டுக் காலநிலையும் இதமா இருக்கு.

சயந்தன் said...

மெல்பேணில கிரேட் ஓசன் பீச் ஒரு தடவை போயிருக்கிறன்.

சிட்னியில 2006 ஜனவரி முதலாம் திகதி வெப்பம் நினைவிருக்கோ..

அண்டைக்கு முழுநாளும் பீச்சில (Beach இங்கிலிசில போடாட்டி வசந்தன் வந்து வேறை அர்த்தங்கள் கற்பிப்பார்) தான் இருந்தம். பெயர்தான் நினைவில வரேல்ல. :(

கானா பிரபா said...

வாங்கோ சயந்தன்

கண்டு கனகாலம்,
உங்கட கூட்டாளிமார் தான் மெல்பனில் இருந்து வந்திருக்கினம். ஜனவர் 1, 2006 சிட்னியில் வெப்பமோ? எனக்கு என்ன சொல்றீங்களெண்டு விளங்கேல்லை :(
கிறேற் ஓசன் பீச்சில தான் காதலர் தினம் பாட்டு "என்ன விலை அழகே" எடுத்தாவை. எனவே அது சரித்திரப் புகழ் பெற்றது ;-)

எஸ் சக்திவேல் said...

ஆங், நீங்கள் கல்யாணம் கட்ட முதல் போனநீங்களோ அல்லது கட்டினாப்பிறகு போனநீங்களோ? (எல்லாம் ஒரு பொது அறிவுக்குத்தான் கேட்கிறேன் :-) )