Friday, 9 March 2007

சிட்னி ஹாபர்பிரிட்ஜில் நடக்கலாம், வாங்க


அவுஸ்திரேலியாவின் குறிப்பிடத்தக்க கேந்திரங்களில் ஒன்று ஹாபர் பிரிட்ஜ் எனப்படும் சிட்னி மேம்பாலம். அவுஸ்திரேலியா வர விரும்பாதவர்கள் இந்தியன் படத்தில் வரும் "ரெலிபோன் மணி போல்" பாடலை மீண்டும் பார்க்கவும்.அதில் வரும் மேம்பாலம் தான் இது. உலகின் மிகப்பெரிய (உலகின் மிக நீளமானது அல்ல)மேம்பாலமாகக் கருதப்படும் இது நீர் மட்டத்திலிருந்து 134 மீற்றர் மேலே உள்ளது.1932 ஆம ஆண்டு கட்டப்பட்ட இந்த ஹாபர் பிரிட்ச் இந்த ஆண்டுடன் தனது 75 ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடுகின்றது. இந்த மேம்பாலம் உள்ளூர் வாசிகளால் Coathanger கோர்ட்டுக் கொழுவி (இது வேற கொழுவி) என்று அழைக்கப்படுகின்றது.


1815 ஆம் ஆண்டு பிரான்சிஸ் கிறீன்வே என்பவரால் திட்டமிடப்பட்டு சிட்னித் துறைமுகத்தின் வட, தென்முனைகளுக்கான தொடுப்பாக இது கொள்கை அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஆனாலும் 1900 ஆம் ஆண்டு வரை வரைபட மாதிரிகளுக்காகக் காலம் செலவழிந்தது. பின்னர் முதலாம் உலக யுத்தத்தைத் தொடந்து முனைப்போடு இப்பணியில் இறங்கி பொதுவான ஒரு நிர்மாண மாதிரிப்படத்தை Dr J J C Bradfield மற்றும் NSW Department of Public Works சார்ந்த நிபுணர்கள் தயாரித்தனர்.பின்னர் உலகளாவிய ரீதியில் இதை நிர்மாணிப்பதற்கான கேள்வி விண்ணப்பங்களை நியூ சவுத்வேல்ஸ் மாநில அரசினால் கோரப்பட்டு 1922 ஆம் ஆண்டு Dorman Long and Co of Middlesbrough என்ற ஒப்பந்தக்காரர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

1924 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட மேம்பாலம் கட்டும் பணிகள் 1400 தொழிலாளர்களுடன் 8 ஆண்டுகள் காலத்தில் 4.2 மில்லியன் பவுண்ட் செலவில் நிர்மாணிக்கப்பட்டது. 6 மில்லியன் ஆணிகளும் 53000 தொன் உருக்கும் இதற்குப் பயன்படுத்தப்பட்டனவாம். தற்போது 8 வாகனச் சாலைகள் 2 ரயில் தடங்கள் கொண்டு அமைந்திருக்கின்றன. ஆரம்பத்தில் ட்றாம் வண்டிக்கான வழித்தடமொன்றும் இருந்தது பின்னர் 1950 இச்சேவை நிறுத்தப்பட்டது.

1932 ஆம் ஆண்டு மார்ச் 19 ஆம் திகதி நியூ சவுத் வேல்ஸ் முதல்வர் John T. Lang இனால் இது உத்தியோகபூர்வமாகத் திறக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் அவர் ரிப்பன் வெட்டவில்லை, அது ஒரு வேடிக்கையான சம்பவம் Captain Francis De Groot என்பவர் இதை அரசியலாக்கி ரிப்பன் வெட்டும் உரிமை அரச குடும்பத்துக்கு மட்டுமே உண்டு என்று கண்டனம் தெரிவித்ததே அதற்குக் காரணம்.



சிட்னி நகருக்கும் புறநகர்ப்பகுதிகளுக்குமான போக்குவரத்துக்கான பிரதான மேம்பாலமாக இது இருந்தாலும்வருடாவருடம் உள்ளூர் வாசிகள் மற்றும் சுற்றுலாப்பயணிகள் Bridge climb எனப்படும் பாலம் ஏறும் வழக்கத்தையும் வைத்திருக்கின்றார்கள். தகுந்த பயிற்சிகளுடன் பாலத்தின் மேற்பரப்பில் உலாவி வரலாம், கட்டணம் உண்டு, நானும் போயிருக்கிறேன் (அது பெரிய கதை)இந்த பாலமேறுதல் பற்றி இன்னொரு பதிவில் நானோ அல்லது இன்னொரு கங்காருவோ சொல்லுவோம்.

சரி விஷயத்துக்கு வருவோம்.
வரும் ஞாயிற்றுக்கிழமை 18, மார்ச் அன்று இந்த மேம்பாலம் கட்டிய 75 ஆம் ஆண்டு நிறைவை நினைவு கூர்ந்து ஹாபர் மேம்பால நடை (bridge walk) ஒன்று சிறப்பாக ஒழுங்கு செய்யப்பட்டிருக்கின்றது, அன்று புழக்கத்திலிருக்கும் போக்குவரத்துக்கள்இந்த மேம்பாலத்தில் நிறுத்தப்பட்டு காலை 10 மணியிலிருந்து மாலை 5 மணிக்குட்பட்ட வசதியான நேரத்தில் காலாற நடந்து வரலாம்.


இன்னும் ஒரு கிழமை இருக்கிறது, வெளிநாட்டிலோ, உள்நாட்டிலோ இருப்பவர்கள் பஸ், ரயில், கார், விமானம் (கருடா ஏர்லைன்ஸ் வேண்டாம்)ஏதாவது பிடித்து வந்து சேர்ந்தால் ஒரு வலைப்பதிவாளர் மாநாடு நடாத்தி போண்டாவிற்கு பதில் Aussie meat pie இலவசம்.
நடை போட இருப்பவர்கள் ஹாபர் பிரிட்ஜ் இன் உத்தியோகபூர்வத்தளத்தில் முற்கூட்டியே பதிவு செய்யவேண்டும்.
இதோ அந்த முகவரி
http://ourbridge.com.au/

சரி நான் நடக்கப் போறன்,

வரலாற்றுக்குறிப்புக்கள் உதவி
அவுஸ்திரேலிய அரசின் கலாச்சார மற்றும் பொழுபோக்கு தகவல் தளம்

22 comments:

சயந்தன் said...

//சிட்னி ஹாபர்பிரிட்ஜில் நடக்கலாம், வாங்க"//
தனியவோ.. ?

கானா பிரபா said...

தனிய நடக்கத் தேவையில்லை, கூட்டிக்கொண்டும் வரலாம் ;-)

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

பிரபா!!
வெற்றி நடை போடுங்க??வரலாற்றுப் பாலம்...75 வயசாகிறதென்பது இப்போதே தெரியும்.

சயந்தன் said...

இதுக்கு கீழால் கப்பலில் போயிருக்கிறேன். மேலால் போனதில்லை..

செல்லி said...

வணக்கம் பிரபா
//ஒரு வலைப்பதிவாளர் மாநாடு நடாத்தி போண்டாவிற்கு பதில் Aussie meat pie இலவசம்.//
பேர்தான் Aussie meat pie உள்ளுக்கை meat எணடு கேள்விப்பட்டன். உதெல்லாம் பம்மாத்தாம்.
பரவாயில்லை, எல்லாருமா சா.மோ.சா செய்து சாப்பிடலாந்தானே!

சா=சவகாசமா
மோ=மோதகம்
ச=சமையல்

சயந்தன் பொண்ணு பாக்கப் போனதாய்ச் சொன்னவர்.
//தனியவோ?// என்கிறார். நீங்களும்
//தனிய நடக்கத் தேவையில்லை, கூட்டிக்கொண்டும் வரலாம்// என்கிறியள். அப்ப ஏதும் முற்றாக்கியாச்சுதோ?

`மழை` ஷ்ரேயா(Shreya) said...

மினக்கெட்டு எழுதியிருக்கிறீங்க பிரபா. நல்ல விவரமான பதிவு. 18 மார்ச் அன்று பின்னேரம் ஒபரா ஹவுஸில செந்தூர் (Santoor) கச்சேரியும் - 'பண்டிட் சிவகுமார் சர்மா' - இருக்கு.

சயந்தன் - இதுக்கு மேலால போன ட்ரெயினல கூடப் போகேல்லயா?

`மழை` ஷ்ரேயா(Shreya) said...

//சயந்தன் பொண்ணு பாக்கப் போனதாய்ச் சொன்னவர்.
//தனியவோ?// என்கிறார். நீங்களும்
//தனிய நடக்கத் தேவையில்லை, கூட்டிக்கொண்டும் வரலாம்// என்கிறியள். அப்ப ஏதும் முற்றாக்கியாச்சுதோ?//

செல்லி - அநியாயத்துக்கு விவரம் தெரியாம இருக்கிறிங்க. அவர் கொழுவியுமாச்சு!! :O))

சயந்தன் said...

முதன்முதலா சிட்னி வரேக்கை விமான நிலையத்தில ஏற்ற வந்தவர்.. வீடு போகும் போது உந்தப் பாலத்துக்கு கீழாலைதான் கூட்டி வந்துட்டு சிட்னி காட்டியாச்சு எண்டவர். பரமட்டாவில (பரமபிதாவின் திரிபாமே..?) கப்பல் ஏறி உந்தப் பாலத்துக்கு கீழாலை நிறையத் தரம் போயிருக்கிறன். அது ஒரு காலம்.. ம்..

கானா பிரபா said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள் யோகன் அண்ணா, செல்லி மற்றும் ஷ்ரேயா.

செல்லி, நீங்கள் சாப்பாடு செய்யும் பொறுப்பெடுத்தால் எங்களுக்கு ok.

சயந்தன், பெருமூச்சுவிடாமல் இப்ப நினைச்சாலும் இங்கை வரலாம் ;-)

செல்லி said...

பிரபா
//சயந்தன் பொண்ணு பாக்கப் போனதாய்ச் சொன்னவர்.
//தனியவோ?// என்கிறார். நீங்களும்
//தனிய நடக்கத் தேவையில்லை, கூட்டிக்கொண்டும் வரலாம்// என்கிறியள். அப்ப ஏதும் முற்றாக்கியாச்சுதோ?//

இதை பகிடிக்காக எழுதினேன்.ஏன் இதை எழுதினேன் என இப்ப கலைப் படுகிறேன்.
சயந்தன் மன்னிக்கவும்.
இனிமே இந்தமாதிரி பகிடி எழுதமாட்டேன்
பிரபா , நீங்களும் தயவு செய்து குறைநினைக்க வேண்டாம்.

சயந்தன் said...

செல்லி.. இதில மன்னிப்பு கேட்க என்ன கிடக்கு. எல்லாம் பம்பல் தானே.

கானா பிரபா said...

செல்லி
குறை நினைக்கிறதுக்கு என்ன இருக்கு, சரி சரி சமாளிக்கவேணும் எண்டால் ஆட்டாமா புட்டு அனுப்பிவிடுங்கோ ;-)

செல்லி said...

ரொம்ப நன்றி சயந்தன் & பிரபா

அதுக்கென்ன ஆட்டாமாப் புட்டு அனுப்பிட்டாப் போச்சு.

Anonymous said...

வணக்கம்,
சிட்னி மேம்பாலத்தில் நடக்க ஆசை,ஆனால் விமான டிக்கெட் வாங்க கையில் இல்லை காசு :))).

கொழுவி என்றால் என்ன?

கானா பிரபா said...

துர்கா

சிங்கப்பூரிலிருந்து சிட்னி அதிக தொலைவில்லை தானே, காசு என்ன காசு, போகும் போது கொண்டா போகப்போகிறோம் ;-)

கொழுவி என்பது வலையுலக நாரதர். நாரதர் கலகம் நன்மையில் முடியும்.

Anonymous said...

//சிங்கப்பூரிலிருந்து சிட்னி அதிக தொலைவில்லை தானே, காசு என்ன காசு, போகும் போது கொண்டா போகப்போகிறோம் ;-)//

காசு கொண்டு போக மாட்டோம் சரி.இருந்தாலும் என் கையில் செலவு பண்ணவே காசு இல்லையே.யாரவது sponsor பண்ணுங்க.உடனே மூட்டை முடிச்சுகளோடு வந்து விடுகின்றேன்!எனக்கும் சிட்னி பார்க்க வேண்டும் என்று ஆசை. :)))

வி. ஜெ. சந்திரன் said...

படங்கள், தகவல், எல்லாம் அருமை. காலாற நடவுங்கோ...

கானா பிரபா said...

கங்காருகளே, சிங்கப்பூரிலிருந்து துர்கா வர ஏதாவது கலைநிகழ்ச்சி செய்தாவது நாம் பணம் திரட்ட வேண்டும்.

வி.ஜே, வருகைக்கும் கருத்துக்கும் நனறிகள்.

கானா பிரபா said...

ஐயோ மோசம் போயிட்டேனே, எல்லாப் பதிவும் நிரப்பப்பட்டு இரவு 7.30 மட்டும் தான் இருக்குதாம், ஹாபர் பிரிட்ஜ்ஜில் நான் நடக்கேலாது போல கிடக்கு.

Anonymous said...

//கங்காருகளே, சிங்கப்பூரிலிருந்து துர்கா வர ஏதாவது கலைநிகழ்ச்சி செய்தாவது நாம் பணம் திரட்ட வேண்டும்//

என் இனிய கங்காருகளே நீங்கள் அனைவரும் ரொம்ப நல்லவர்கள்.

//ஐயோ மோசம் போயிட்டேனே, எல்லாப் பதிவும் நிரப்பப்பட்டு இரவு 7.30 மட்டும் தான் இருக்குதாம், ஹாபர் பிரிட்ஜ்ஜில் நான் நடக்கேலாது போல கிடக்கு. //
:(

`மழை` ஷ்ரேயா(Shreya) said...

//இரவு 7.30 மட்டும் தான் இருக்குதாம்//

அதுக்கு முன்பதிவு செய்தீங்களா? இப்பத்தான் பார்த்தேன். பதிவு செய்யும் கட்டம் முடிவடைந்துவிட்டதாம். :O(

இல்லாட்டி அன்றிரவு ஒபரா ஹவுஸில பண்டிட் சிவகுமார் சர்மாவிட செந்தூர் இசை வாத்தியக் கச்சேரி இருக்கு.. அங்கே போகலாம். :O)

கானா பிரபா said...

மழை

எல்லாம் போச்சு, இரவு நிகழ்ச்சிக்கும் போகமுடியாது, துர்காவுக்கும் கொடுப்பினை இல்லை, இங்கே இருக்கும் எனக்கும் இல்லை. நீங்களாவது படம் எடுத்துப் போடுங்கோ :-(