Tuesday, 16 February 2010

மவுன்ட் ருபஸ் இல் அடியேன்

குவீன்ஸ் டவுன் குளிர் இதமாகத்தான் இருந்தது. இரவு தங்கியிருந்த பக்பாக்கர்ஸ் கட்டிலில் படுத்திருந்தபடியே இன்றைய நாளை திட்டமிட்டேன். காலை சுரங்கத்தொழில் நடைபெறும் இடத்தைப் பார்ப்பதாயும், 13 மணி போல் Cradle Mountain மலைத் தொடரில் உள்ள 1415 மீற்றர் உயரமான மவுன்ட் ருபஸ் மலை ஏறத் தொடங்கினால் மாலை எட்டு மணி போல் வந்து சேரலாம் என்று முடிவெடுத்துக் கொண்டேன்.

நேற்று ரிசப்சனில் புன்னகை செய்யவேண்டும் என்பதற்காய் புன்னகைத்து என்ன உதவி செய்யட்டும் என்று கேட்டவளிடம் சுரங்கத் தொழில் நடை பெறும் இடத்தை பார்க்க ஆசை என்றேன். அப்படியா? ஏன்று கேட்டவள் நாளை காலை டூரிஸ்ட் கந்தோரில் கேள் ஒழுங்கு செய்வார்கள் என்றாள். எத்தனை மணிக்கு என்று கேட்டதற்கு…வாயைப் பிதுக்கி மே பி எயிட் ஓ நைன் என்றாள்.

நேரம் 8 தொட்டுக் கொண்டிருந்தது. எழும்பி பல் விளக்கி, உடுப்பு மாத்தி தேத்தண்ணி குடிப்பம் என்றால்… பக் பாக்கர்ஸ்க்கு யார் தேத்தண்ணி தாறாங்கள், அதுவும் 30 டொலர் அறையில்?

தேத்தண்ணி குடிக்காட்டி ”அதுக்கு” வராதே…. ஏன்ன செய்வம்? அதுவும் 7 மணிநேர மலை ஏற்றத்தையல்லவா இன்றைக்கு செய்வதாக என் மனதுடன் ஒப்பந்தம் செய்துள்ளேன்… மற்றவர்கள் மாதிரி கண்ட இடத்தில் தண்ணியில்லாமலும் சரிவராதே…. என்று யோசித்துக் கொண்டு இருந்த போது யுகமானியில் வந்த ” தம்பி நீங்க நல்வாயிருக்கோணும்” கதை ஞாபத்தில் வந்து போனது.. (அருமையானதோர் கதை, அதுவும் என்னைப் போல் ”அதுக்கு போக” கஸ்டப்படும் ஒருவரின் கதை)

இப்படி யோசித்துக் கொண்டிருக்கும் போது கண்ணில்பட்டாள் ரும் சேர்விஸ் பெண். அவளின் புண்ணியத்தில் பிளேன் டீ குடித்து, ”அது” முடித்து டூரிஸ்ட் கந்தோரில் ஆஜரான போது நேரம் 9.30 ஐ நெருங்கிக் கொண்டிருந்தது. டூரிஸ்ட் கந்தோரில் பூட்டு தொங்கிக் கொண்டிருந்தது.

இதை பார்த்துக் கொண்டிருந்தால் நேரம் போய்விடும் என்பதால் ஏறி இருந்து வாடகைக் காரை இயக்கினேன். நவிகேசன் எடுத்து, இடம் சொல்லி, வழி காட்டு என்ற போது 100 மீற்றரில் வலது பக்கம் திரும்பு, பின் வட்டச் சந்தியில் இரண்டாவது பாதையால் வெளியேறு என்றாள் வழிகாட்டி.

காருக்கு எண்ணைய் (அதுதானப்பா பெற்றோல்) அடித்துக் கொண்டு வட்டச் சந்தியில் இரண்டாவது பாதையால் வெளியேறினேன். 87 கீ.மீ தொடர்ந்து செல் என்று கட்டளை கிடைத்தது. குடல் போல வளைந்து போகும் (எத்தனை நாளைக்கு தான் பாம்பு போல வளைந்து போகும் பாதை என்று சொல்வது) பாதையில் பயணித்துக் கொண்டிருந்த போது குயின்ஸ் டவுன் ஐ சுரங்கத் தொழில் படுத்தியிருக்கும் பாட்டை பார்க்கக் கிடைத்தது. ஊரெல்லாம் கிண்டு, கிண்டு என்று கிண்டி வைத்திருக்கிறார்கள். நாலைந்து படங்கள் எடுத்துக் கொண்டேன்.

குயின்ஸ் டவுன்ஜ சிட்னியுடன் ஒப்பிட்டால் அவுஸ்திரேலியாவா என்று கேட்பீர்கள். சேரிப்புறத்து வீடுகளைப் போன்றே வீடுகள் இருக்கின்றன. புதிய வீடு ஒன்றைக் கூட காணக்கிடைக்கவில்லை. சுரங்கத் தொழில் படுத்து விட்டது. புதிய தொழிற்சாலைகளோ, நிறுவனங்களோ இல்லை. இளம் சமுதாயம் வேலை தேடி நகரங்களுக்கு போயிருக்க வேண்டும் என நினைக்கிறேன். சுற்றுலாத்துறையை மட்டும் மிகச் சிறப்பாக முன்னேற்றி வைத்திருக்கிறார்கள்.

கார் வளைந்து வளைந்து போய்க் கொண்டிருந்தது. வழிகாட்டி இன்னும் 80 கி.மீ இருக்கு எனவும். இந்த வேகத்தில் போனால் 11.45 க்கு போவேன் என்று காட்டிக் கொண்டிருந்தது. வேகம் கூட்டி, குரூஸ் கொன்றோலில் 100 கி.மீ காட்டி இயற்கையை ரசித்துக் கொண்டிருந்தேன். நான் கடந்த 99 வீதமான சிறிய பெரிய நீரோட்டங்களுக்கு (தண்ணீரில்லாதவற்றிற்கும் சேர்த்து) பெயர் சூட்டியிருந்தனர். ஏன் இதற்கு இவ்வளவு முக்கித்துவம் கொடுக்கிறார்கள் என்று புரியவில்லை.



மற்றை இடங்களைப் போல இந்த வழியில் (Lyell HW - A10) வீதியில் இறந்து கிடக்கும் மிருகங்கள் மிகக் குறைவாகவே இருந்தன. டஸ்மானியாவில் இருந்த 5 நாட்களிலும் கிட்டத்தட்ட 1500 கி.மீ கார் ஓடியிருந்தேன். ஆகக் குறைந்தது 150 இறந்த கங்காருக்களை வீதியோரத்தில் கண்டிருப்பேன். கங்காருக்களை விட டஸ்மானியா டெவில், முயல், முள்ளம் பன்றி போன்றதொரு சிறிய பன்றி, குருவிகள் என ”வீதி” பலியெடுத்திருந்த மிருகங்கள், பறவைகளின் எண்ணிக்கை மிக அதிகம். அடிபட்டு கிடக்கும் மிருகங்களை தன்னை மறந்திருந்து ருசிக்கும் போது கடந்து போகும் வாகனங்களில் அடிபடும் பறவைகளும் அதிகம் (பசி வந்தால் பத்தும் பறக்கும் என்பார்களே.. அது இந்த குருவிகளுக்கும் பொருந்தும் போல)

திடீர் என சாத்தான் மனம்.. இன்று மலை ஏறாது Hobart போய் பார் என்றது. 10 – 15 நிமிடங்கள் ஒரே போராட்டமாய் இருந்தது. கால நிலையும் மழை, காற்றாய் இருந்தது. அனுபவப்படி நோர்வேயில் மலையேற முதல் காலநிலை மழை, காற்றாய் இருந்தால் மலையுச்சியில் கடுங் குளிர் காற்று வீசும். சாத்தான் மனம் இதையும் ஒரு சாட்டாக வைத்து Hobart போ என்றது. இருப்பினும் எனக்கு மலையுச்சிகளின் மீதுள்ள காதலினால் சாத்தானின் வேதத்தை கேட்க மறுத்தேன்.

Franklin – Gorden தேசிய வனப்பகுதியினூடாக போய் கொண்டிருக்கும் போது ஆங்காங்கே வீதி செப்பனிடல் வேலை நடந்துகொண்டிருந்தது. ஆங்காங்கே காரை நிறுத்தி படங்கள் எடுத்துக் கொண்டேன். வழி நெடுகிலும் மிக குறைந்த வாகன நடமாட்டமே காணப்பட்டது. ஒரு குளக்கரை மிக ரம்யமாக இருந்தது.

1 கி.மீ இடது பக்கம் திரும்பு என்றது வழிகாட்டி இயந்திரத்தினுள் இருந்த பெண் குரல். வேகம் குறைத்து இடது புறம் திரும்பினேன். Lake St. Clair என்னை வரவேற்பதாக பெரியதோரு அறிவுப்புப்பலகை சொல்லியது. தலை வணங்கி வரவேற்பை ஏற்றுக் கொண்டேன்.



காரை நிறுத்தி National Park Entry Pass ஐ கண்ணாடியில் தெரியும்படி வைத்தேன். (டஸ்மானியாவில் National Park பார்க்க வேண்டும் எனின் கார்க்கும் மனிதர்களுக்கும் சேர்த்து Entry Pass எடுக்க வேண்டும். நான் ஏற்கனவே முழு டஸ்மானியா பாஸ் எடுத்திருந்தேன். (முழு டஸ்மானியா பாஸ் எடுத்தால் விலை குறைவு)

முதுகுப் பையில் உணவு, நீர், மழையுடைகள், டோர்ச், IPod, நனைந்தால் மாற்ற என உடைகள் எடுத்து வைத்துக் கொண்டு வானத்தைப் பார்த்தேன்…. கடவுள் என்னைப் பார்த்து Sorry buddy , இன்று மழையும் காற்றும் தான் என்று சொல்லிக் கொண்டிருந்தார்.

Visitor Centor க்குள் புகுந்து ”Cradle Mountain – Tasmania, Australia” . Mount Rufus பற்றிய விபரங்களை பெற்றுக் கொண்டேன். நான் திட்டமிட்டிருந்த மவுன்ட் ருபஸ் சுற்றுப்பயணத்தின் இறுதிப்பகுதியை மண்சரிவு, நீரோட்டம் காரணமாக தற்காலிகமாக தடை செய்திருந்தார்கள். போகும் வழியாலேயே திரும்ப வருவது எனக்கு பிடிக்காத வேலை. ஏன்றாலும் ஏற்றுக் கொள்ள வேண்டியிருந்தது.

வெளியில் அடித்த குளிர் காற்றின் வேகம் கண்டதும் அனுபவம் விழித்துக் கொண்டு தலையையும், காதையும் மறைக்கும் தொப்பியை வாங்கு என்றது. அதிக விலைகொடுத்து ஒரு தொப்பி வாங்கினேன். தொப்பியின் அருமை மலையுச்சியை நெருங்கும் போது புரிந்தது. அந்த தொப்பியில்லாமல் உச்சியை தொட்டிருக்க முடியாது.

தொப்பி வாங்கிய இடத்தில் ஜக்கட் இல் ஒட்ட ”Cradle Mountain – Tasmania, Australia”
என்று எழுதிய ஒரு ஸ்டிக்கரும் வாங்கிக் கொண்டேன். Visitor Center ஐ மிகவும் அழகாகவும், திட்டதிட்டமிட்டும் உருகாக்கியிருக்கியிருப்பது மட்டுமல்ல. Cradle Mountain பற்றிய சகல விபரமும் தருகிறார்கள். எங்கு, எந்த வழியால் போகலாம், எவ்வளவு நேரமெடுக்கும். எவ்வளவு தூரம் என்று சுற்றுலாப்பயணிகளுக்கு தேவையான சகல தகவல்கள் மட்டுமல்ல, மிருகங்கள். பாம்பு பற்றிய அறிவித்தல்களும், காலநிலை அறிவுறுதல்களும் கிடைக்கின்றன.

Visitor Center கந்தோருக்குள் ஒரு இலங்கை அல்லது இந்தியப் பெண் தெரிந்தார். ஆச்சரியமாக இருந்தது. நம்மவர்களை டொக்டர், இன்ஜினியர் என்று தானே படிப்பிப்பார்கள். டொக்டராயும், இன்ஜீனியராயும் படிக்காட்டி அவன் படிக்காதவன் என்று சொல்லுவாங்கள் எங்கடயாக்கள் என்று யாரோ சொன்னது ஞாபகத்தில் வந்து போனது. ரேஞ்சர் உடுப்பில் அந்தப் பெண்ணைப் பார்த்ததும் மகிழ்ச்சியாய் இருந்தது. எந்த ஊர் என்று உறுதி செய்து கொள்வதற்காய் உற்று உற்றுப் பார்த்தேன். ஒரு முடிவுக்கும் வரமுடியவில்லை. தமிழ்ப் பெண்ணாய் இருந்திருந்தால் நல்லம் என்று எனக்குள் நினைத்துக் கொண்டேன்.




ஒரு பிளேன் டீ வாங்கி குடித்துவிட்டு காட்டப்பட்டிருந்த பாதையால் நடக்கலானேன். என்னைச்சுற்றி யூகலிப்டஸ் மரமாகவே காட்சியளித்தது. எங்கும் மரங்கள்.. உயிருள்ள, உயிரற்ற, சிறிய, பெரிய, மிக மிகப் பெரிய மரங்கள் என்று ஒரே மரங்களாய் இருந்தது நடைபாதை முழுவதும்.



நீரோடைகளை, சிறிய குன்றுகளை, சதுப்பு சநிலங்களை கடந்து ஏறத்தாழ 3மணி நேரத்தின்பின் மலையின் உச்சி தெரிய ஆரம்பித்தது. ஓரிடத்தில் என்னைச் சுற்றியிருந்த மரங்கள் எல்லாம் இறந்தும், காய்ந்தும் தங்கள் முதுமையை அறிவித்துக் கொண்டிருந்தது. அந்த இடத்தில் மட்டும் அப்படி இருந்ததற்கான காரணம் புரியவில்லை. மேலும் மேலும் நடந்து கொண்டிருந்தேன் நேரம் போக போக பயங்கரமான காற்றும் வா வா என்று வரவேற்றது.

வாங்கிய தொப்பியை மாட்டிக் கொண்டு நடக்கலானேன். குளிர் காற்று ஊசிபோல் குத்திக்கொண்டிருந்தது. கையுறை கொண்டு வராததன் பலனை அனுபவிக்கலானேன். முதலில் நுனி விரல் விறைத்தது, பிறகு விரல் முழுவதும் விறைத்தது. தாங்க முடியாமல் பையில் வந்திருந்த shopping bag ஐ எடுத்து கையில் சுற்றிக்கொண்டேன். காற்றின் அகோரத்தை பை தாங்கிக் கொண்டதால் கொஞ்சம் ஆறுதலாய் இருந்தது. மலை உச்சி நெருக்கத்தில் தெரியத் தொடங்கியது. ஆனாலும் இன்னும் தூரம் கொஞ்சம் இருப்பது புரிந்தது. உடம்பும், கையும், காலும் குளிரின் அகோரத்தால் திரும்பிப் போ, திரும்பிப் போ என்று கத்திக்கொண்டிருக்க, உச்சியை தொட நினைத்த மனம் மட்டும் இல்லை, இல்லை இன்னும் கொஞ்ச தூரம் தானே என்று சமாதானம் சொல்லிற்று.



திடீர் என காற்றின் அகோரம் அதிகரித்தது. நிற்க முடியாதளவுக்கு காற்றின் வேகம் அதிகரித்த போது அருகிலிருந்த ஒரு பாறையின் மறைவில் சற்று இளைப்பாறலானேன். கொண்டு வந்திருந்த பாண் துண்டுகளை தண்ணீருடன் விழுங்கி முடித்தவுடன் சற்று சக்தி திரும்பியது போலிருந்தது. காற்றோ பயங்கர சத்தத்துடன் உக்கிரம் குறையாமல் வீசிக்கொண்டிருக்க மனமோ எப்ப‌டி 500 மீற்றர் தூ‌ரத்தில் உள்ள உச்சியை எப்படி தொடுவது என்று போசித்துக் கொண்டிருந்தது. நிமிர்ந்து நின்றால் காற்று என்னை பின்னுக்கு தள்ளியது. பல்லைக்கடித்துக் கொண்டு சற்று முன்னேறி இன்னொரு கல்லின் பின்னால் நின்று காற்றின் அகோரத்தை தவிர்த்துக் கொண்டேன். இப்படியே 300 மீற்றர் தூரம் மெது மெதுவாய் முன்னேறினேன். உச்சி கைக்கெட்டிய தூரத்தில் இருந்தது. இனி காற்றின் அகோரத்தை தாங்க கற்கள் இல்லை. வெறும் வெட்ட வெளியாய் இருந்தது. மெது மெது வாய் காற்றை எதிர்த்துக்கொண்டு ஏறத்தாழ 20 நிமிடத்தின் பின் உச்சியில் இருந்த கற்குவியலில் கை வைத்த போது பட்ட துன்பமெல்லாம் காற்றாய் கரைந்திருந்தது அதே வேளை கைகள் உணர்ச்சியின்றி மரமாய் விறைத்திருந்தன.


முகில் மூட்டங்கள் முழு மலையையும் மறைக்கத் தொடங்கியது. மலையைச் சுற்றியிருந்த எதுவும் தெரியவில்லை. எனது பங்காக கற்குவியலின் மீது ஒரு கல்லை எடுத்து வைத்துவிட்டு மெதுவாய் இறங்கத் தொடங்கினேன். (ஒவ்வொரு மலையுச்சியிலும் கற்களை உயரமாய் அடுக்கி வைத்திருப்பார்கள். உச்சிக்கு போகும் எல்லோரும் தங்கள் பங்கிற்காக ஒரு கல்லை எடுத்து வைப்பது வழக்கம்) காற்றின் வேகம் முதுகைத் தாக்கித் தொடங்கியிருந்தது. காற்றின் வேகத்தில் அடிபட்டுப் போகாமல் கவனமாய் இறங்கத் தொடங்கினேன்.

முகில் முட்டம் சற்று கீழே இறங்கியவுடன் காற்றுடன் கரைந்து போயிற்று. மலைக்கு ஏறும் இறங்கும் வழிகளை மிகவும் சிறப்பான முறைகளை அடையாளப்படுத்திருப்பதால் ஏறும் போதோ அல்லது இறங்கும் போதோ பாதைமாறாமல் செல்ல முடிந்தது. ஏறத்தாழ 7 மணி போல் மீண்டும் Visitor Center க்கு வந்த போது முழு உடம்பும் களைத்துப் போயிருந்தது. ஆனால் மனம் மட்டும் குதூகலித்துக் கொண்டிருந்தது. கால் தசைகளை கொஞ்சம் stretch பண்ணிக் கொண்டேன் இல்லா விட்டால் நாளை காலை எழும்பமுடியாது என்பதை அனுபவத்தில் அறிந்திருக்கிறேன்.


மெதுவாய் இருட்டத் தொடங்கியிருந்தது. களைப்புடன் பசியும் சேர்ந்து உணவும் ஓய்வும் வேண்டும் என கத்த ஆரம்பிக்க, வயிற்றுக்கு புல் போடும் வழியைத் தேடத் தொடங்கினேன். Visitor Center ஐ பூட்டிவிட்டு போயிருந்தார்கள். மெதுவாய் Mail road வந்து சேர்ந்தேன். மிகவும் அழகிய மரத்திலான ஒரு ‌ஹோட்டல் தென்பட என்னையறியாமலே கார் அங்கு போய் நிற்க காலையில் Visitor Center கண்ட இந்திய பெண்ணும் மற்றும் பல ரேஞ்சர்கள் வெளில் இருந்து பியர் குடித்துக் கொண்டிருந்தார்கள். அந்த இந்தியப் பெண்ணும் பியர் குடித்துக் கொண்டிருந்ததை மனம் ஏதோ ஏற்றுக் கொள்ள வில்லை.


உள்ளே போய் தங்க இடம் கேட்டேன். மன்னித்துக் கொள் ஒரு அறையும் இல்லை என்றாள் புன்னகையுடன். சாப்பாடாவது கிடைக்குமா என்றதற்கு மெனு காட்டை காட்டினாள். உருளைக்கிழங்கும், குளத்தில் பிடித்த trout மீனையும், மரக்கறியும் ஓடர் பண்ணி விட்டு வெளியில் வந்து ரேஞசர்களிடம் தங்க இடமுண்டா என்று விசாரித்தேன். அருகில் இல்லை 40 கி.மீ தூரம் காட்டுப் பாதையால் போனால் ஒரு ஹோட்டல் வரும் என்றார்கள். ஆனால் அந்த பாதையில் 30 கி.மீ தூரம் ஒடுங்கிய கிரவல் பாதை எனவும், அதிகம் மிருகங்கள் உலாவும் இடம் என்றும் கூறினார்கள். அதைக் கேட்டவுடன் எனக்குள் ஆர்வம் அதிகமாக சாப்பிட்டு விட்ட பிறகு அங்கு போக தீர்மானித்தேன். வழியில் ஏதும் பிரச்சனை எனின் காரிலேயே இரவுப் பொழுதை கடத்தலாம் என்றும் திட்டமிட்டுக் கொண்டேன்.

சும்மா சொல்லக் ‌கூடாது குளத்தில் பிடித்த trout மீனையும், மரக்கறியும் அபாரமான சுவையுடன் சமைத்திருந்தார்கள். உடம்பு அசதியில் மீன் முள்ளைத் தவிர எதையும் மிச்சம் விடாமல் ‌வயிற்றுக்கள் கொட்டிக் கொண்டேன். மேலதிகமாய் கறுப்பு கோப்பியும், apple pie, ice cream உம் வரவழைத்துக் கொண்டு குளிருக்காய் எரித்திருந்த ‌நெருப்பில் குளிர் காய்ந்து கொண்டே ருசித்து முடித்த போது நேரம் 8.30ஜ நெருங்கிக் கொண்டிருந்தது.

நவிகேசனை தட்டிவிட்டேன். அது தன்பாட்டில் வழியைக் காட்ட, மெதுவாய் ரேஞ்சர் சொன்ன கிரவல் பாதைக்குள் திருப்பினேன். ரேஞ்சர் சொன்னது போல கங்காருக்களும், டஸ்மானாயா டெவிலும் வழியை ஏதோ தங்கள் குத்தகைக்கு எடுத்த மாதிரி குறுக்கம் நெடுக்குமாய் பாய்ந்து கொண்டிருந்தன. திடீர் என ஒரு ‌ஜீப் மிக வேகமாய் கடந்து போயிற்று. அந்த ஜீப் என்னை கடந்ததும் வழியில் ‌ஒரு கங்காரு இரத்த வெள்ளத்தில் தனது இறுதி மூச்சை விட்டுக் கொண்டிருந்தது. அந்த ஜீப்காரன் கொஞ்சம் மெதுவாய் போயிருந்தால் அவுஸ்திரேலியாவுக்கு ஒரு கங்காரு மிச்சமாயிருந்திருக்கும்.

வழி நெடுகிலும் மிருகங்கள் முயல், கங்காரு, டஸ்மானியா டெவில் இன்னும் பெயர் தெரியாத விலங்குகள் என ஒரே மிருகங்களாய் இருந்தது. கிறவல் ரோட் என்பதால் கார் டயர் பஞ்சராகும் சந்தர்ப்பமும் அதிகம். எனவே 15 - 20 கி.மீ வேகத்திலேயே போய்க் கொண்டிருந்தேன். ஏறத்தாழ இரண்டு மணிநேரத்தின் பின் ரேஞ்சர் சொன்ன ஹோட்டல் வந்தது. புன்னகைத்தவளிடம் தங்க இடம் கேட்டு, விலை பேசி அறைக்குள் வந்த போது நேரம் 11 இருக்கும். சுடுததண்ணியில் அலுப்பு தீர முழுகி கட்டிலில் விழுந்தேன்.... கடந்து போன இனிமையான நாள் என்னை தாலாட்டி தூங்கவைத்துக் கொண்டிருந்தது.

டஸ்மானியாவை தவறவிட்டு விடாதீர்கள்...

சுற்றியவர்: சஞ்சயன்

Monday, 8 February 2010

ATBC வானொலிக் குடும்ப ஓன்றுகூடல் 2010

அவுஸ்திரேலியாவில் தமிழ்ச்சமூகத்தின் பேராதரவுடன் இயங்கி வரும் 24 மணி நேர சமூக வானொலி அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் நேற்று பெப்ரவரி 7 ஆம் திகதி தனது வருடாந்த வானொலிக் குடும்ப ஒன்று கூடலை வெகு சிறப்பாக நடாத்தியது. வருடா வருடம் கண்ணுக்கும் செவிக்கும் விருந்தாகக் கலைநிகழ்ச்சிகளும், நாவுக்கு ருசியாக அறுசுவை உணவும் கலக்க இந்த நிகழ்வு, வானொலியின் பேராதரவு தரும் நேயர்களும் 70 க்கும் மேற்பட்ட அறிவிப்பாளர்கள, நிகழ்ச்சித்தயாரிப்பாளர்கள், தொண்டர்கள் உள்ளடங்கலாக நடைபெறுவது வழக்கம். கடந்த ஆண்டு ஈழத்தின் கொடூரமான போர்ச்சூழல் காரணமாக இந்த நிகழ்வு நடைபெறாமல் இருந்தது குறிப்பிடத்தக்கது.

கடந்த பெப்ரவரி 7 ஆம் திகதி Bowman Hall, Blacktown என்ற இடத்தில் மாலை 6.05 இற்கு ஆரம்பமாகி இரவு 10 மணி வரை அரங்கு நிறைந்த இருக்கைகளோடு சிட்னியின் மிகப்பிரமாண்டமான இலங்கை இந்திய மளிகைக்கடையான உதயா சுப்பர் மார்ட் ஸ்தாபனத்தாரின் பேராதாரவோடு அரங்கு நிறைந்த இருக்கைகளோடு இனிதே நடந்தேறியது.

இந்த நிகழ்வினை தமிழ் மூத்த குடிமக்களின் பிரதிநிதியாக திரு.நிக்கலஸ் இராஜநாயகம், மற்றும் அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் ஆலோசகர் திரு. மகேசன் (வானொலி மாமா) ஆகியோர் மங்கல விளக்கேற்றி ஆரம்பித்து வைத்தார்கள். தொடர்ந்து இளையோர் சமூகத்தில் இருந்து தமிழ்தாய் வாழ்த்து, அவுஸ்திரேலிய தேசிய கீதம், அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் பண் ஆகியவை பாடிச் சிறப்பிக்கப்பட்டன.


தாயகத்தில் போரால் கொல்லப்பட்ட இன்னுயிர்களை நினைவு கூர்ந்து இரண்டு நிமிடம் மெளன அஞ்சலியோடு முக்கிய நிகழ்வுகளுக்கு நகர்ந்தது. அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் நிகழ்ச்சித் தயாரிப்பாளரும், சிட்னியின் பிரபல நடன ஆசிரியையுமான திருமதி கார்த்திகா கணேசரின் மாணவியர் புகழ் பெற்ற திரையிசை நடனங்களை ஜனரஞ்சகமாக வழங்கினர். அவை சிறப்பான நெறியாள்கையோடு கச்சிதமாகக் காண்போர் மனதைக் கவர்ந்தன.

வானொலியின் இயக்குனர்களில் ஒருவரான திரு ஈழலிங்கம் அவர்கள் சிறப்புரை ஆற்றினார்.

வானொலி நிகழ்வுகளில் முன்னோடியாக, அவுஸ்திரேலியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் முழுமையாக ஒரு மணி நேர நிகழ்ச்சியாக "துளிர்" என்ற நிகழ்ச்சியைத் தயாரித்து வழங்கும் சிறுவர்கள் இந்த நிகழ்விலே துளிர் பொது அறிவுப் போட்டி ஒன்றை நடத்திப் பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தினார்கள். இந்த நாட்டில் பிறந்து தமிழ் கற்றும் வாழும் இப்பிள்ளைகள் முழுமையான தமிழ் அறிவிப்போடு, பார்வையாளர்களில் இருந்து தேர்வு செய்யப்பட்ட சிறார்களை இரண்டு பிரிவாக வைத்து, தமிழ் இலக்கியம், சினிமா, அறிவியல், புவியியல், விளையாட்டு என்று ஒவ்வொரு துறையிலும் கேள்விகளை இருபகுதிக்கும் கேட்டு நடாத்திய இந்தப் போட்டியினை வெகுவாக ரசித்ததோடு சரியான பதில்களை அவர்கள் சொல்லும் போது வயது வேறுபாடின்றிக் கைதட்டி ஆரவாரித்தனர் பார்வையாளர் சமூகம்.

அரங்கில் நிகழ்ச்சிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது நேயர்கள் குழுமியிருந்த மேசைகளில் மிக்சர், மென்பானங்கள் போன்றவை வழங்கப்பட்டுக் கொண்டிருந்தன. இந்தப் பணியிலும் வானொலி அபிமானிகள் தாமாக வந்து இணைந்து பங்கேற்றது சிறப்பு.

அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் நிகழ்ச்சித் தயாரிப்பாளர்கள், அபிமானிகள் இணைந்த சிட்னி கானஸ்வரா இசைக்குழு பழைய, புதிய பாடல்களைப் பாடி ஆடவும் செய்து சிறப்பித்தது. வழக்கமாக இப்படியான பாடல் விருந்துகளுக்குக் கோளாறு பதிகம் படிக்கும் ஒலிவாங்கியும் கட்டுண்டு ஒத்துழைத்தது சிறப்பு. இந்த இடத்தில் நிகழ்வில் முழுமையாக வழங்கப்பட்ட சிறப்பான ஒலித்தரத்தையும் சொல்லி வைக்க வேண்டும்.

சிட்னி கலையகம் 1, சிட்னி கலையகம் 2, மெல்பேர்ண் கலையகம், ரொரொண்டோ கலையகம் என்று அரங்கின் நான்கு மூலைகளிலும் இரவு உணவு பரிமாறும் பகுதிகள் அமைக்கப்பட்டு இடியப்பத்தோடு சைவ அசைவ உணவுகளும் பரிமாறப்பட்டு பாயாசத்தோடு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

உணவு பரிமாறும் வேளையில் அறிவுக்களஞ்சியம் என்ற பொது அறிவு வினாக்கொத்து வழங்கப்பட்டு நேயர்களின் மூளைக்கு வேலை கொடுக்கப்பட்டது. பெடியள் மொபைல் இன்ர நெட்டில் விடைகளைத் தேடிக் கண்டு பிடித்து எழுதியது சுவாரஸ்யம். தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்திடல் வேண்டும் என்று சொன்னவர் யார் என்று கேட்ட கேள்விக்கு யாரோ புண்ணியவான் "பாரதிராஜா" என்று எழுதிவைத்தார் (அவ்வ்வ்வ்)

நிகழ்ச்சிகளை திரு.நவரட்ணம் ரகுராம், மற்றும் திரு செல்லையா பாஸ்கரன் ஆகியோர் தொகுத்து வழங்க அரங்க அமைப்பை திரு சிவசம்பு பிரபாகரனும் நெறிப்படுத்தினார்.
இந்த ஒன்று கூடலின் நிர்வாகத் தயாரிப்பாளராக திரு அலேசியஸ் ஜெயச்சந்திராவும் பொறுப்பேற்றதோடு ஒவ்வொரு பணியிலும் வானொலி அறிவுப்பாளர்களும் தொண்டர்களும் நியமிக்கப்பட்டுத் தம் பணியைச் செவ்வனே செய்தார்கள். மெல்பன் கலையகத்தில் இருந்து நிகழ்ச்சித் தயாரிப்பாளர் திருமதி சாந்தினி புவனேந்திரராஜா அவர்களும் வந்து சிறப்பித்தார்.

இரவு உணவு இடைவேளைக்குப் பின் அமெரிக்கன் முறையிலான தரகு விற்பனை (American Auction) என்ற புதுமையான நிகழ்வை திரு மகேஸ்வரன் பிரபாகரன் நடத்தினார். அதில் வானொலிப்பெட்டி உள்ளடங்கலாக பெரும் விலைமதிப்புள்ள பொதி ஒன்றை இளைஞர் குழு சுவீகரித்தது.

நிறைவாக ஆனால் முத்தாய்ப்பாக, ஈழத்தின் பொப்பிசைப் பிதா "சின்ன மாமியே" புகழ் நித்தி கனகரத்தினம் தன் இனிய மலரும் நினைவுகளொடு தனக்கே உரிய கிண்டலுமாகக் கலந்து கட்டி வழங்கிய பொப்பிசை விருந்து பார்வையாளர்களை ஆட வைத்து அலங்கரித்தது. இன்னும் வேண்டும் வேண்டும் என்று அரங்கமே யாசிக்க, நேரக்கட்டுப்பாடு கருதி சரியாகப் பத்து மணிக்கு இந்த ஒன்று கூடல் நிறைவேறியது.

அரங்கம் நிறைந்த கூட்டம், மனம் நிறைய வெளியேறியது.
அப்ப நீர் என்ன செஞ்சனீர் எண்டு கேட்காதேங்கோ, நான் படங்கள் சுட்டுக் கொண்டிருந்தனான் ;-)


முழு ஆல்பத்தையும் பார்வையிட இங்கே கிளிக்குங்கோ

Saturday, 30 January 2010

சிலைகளின் கதை

நியு சவுத் வேல்ஸ் கலைக்கூடத்திற்கு (Art Gallery of NSW) முன்னால் இரண்டு நீலப் பெட்டிகள். இதற்கு முன் போனபோது அங்கு அவை இருக்கவில்லை. என்ன இருக்கிறதெனப் பார்க்க ஒவ்வொர் பெட்டிக்குள்ளும் போனேன்..


முதலாம் பெட்டிக்குள் ஒரு குதிரை அழிச்சாட்டியம் செய்து கொண்டிருந்தது!! அதன் மேலிருப்பவர் கண்டு கொள்வதாயில்லை.. ஒருவேளை குதிரையின் செயலைக் கண்டு சிலையாகிப் போனதாலயோ தெரியவில்லை :O).

கட்டிலில் ஏறும் குதிரை. அதன் கிட்டே போய்ப் பார்த்தேன்... சொல்வழி கேட்கிற குதிரை மாதிரித் தெரியவில்லை.


அடுத்த பெட்டிக்குள் போனேன்.. ஒரு வரவேற்பறை அமைக்கப்பட்டிருந்தது. நடுவில் ஒரு வட்ட மேசை; அதன் மேல் ஒரு கம்பை உயர்த்திப்பிடித்த மனிதனின் மார்பளவுச் சிலை. பக்கத்திலேயே ஒரு அலமாரி. அலமாரிக்குள் என்னவென்கிறீர்கள்? குதிரையொன்றின் தலை!! கட்டிலைக் கலைத்துப் போட்டதற்குத் தண்டனையோ!? பாருங்களேன்:
என்ன இது!! எப்படிச் சாத்தியம்?

இதெல்லாம் ஜப்பானியக் கலைஞர் டாட்சு நிஷி (Tatzu Nishi) என்பவரது மனவண்ணம். ஏலவே உள்ள சிலைகளைச் சுற்றிய சூழலை மாற்றி அவற்றை புதுக் கோணத்தில் காட்டுவது இவர் திறன். கலைக்கூடத்தின் முன் உள்ள இரண்டு சிலைகளையும் 'மாற்றி அமைத்தது'ம் இவரது ஒரு ப்ரொஜெக்ட். சிலைகள் அப்படியே இருக்க, அவற்றைச் சுற்றி ஒரு வரவேற்பறையும், குதிரைத் தலையைச் சுற்றி ஒரு அலமாரியையும் மட்டுமல்லாமல், இன்னோரு குதிரை ஏற வாகாக ஒரு கட்டிலையும் கூட அமைத்திருக்கிறார்கள். கல்டோர் கலைத்திட்டத்திற்காக டாட்சு நிஷி செய்திருக்கிறார்.

பரிச்சயமான ஆனால் தலைக்கு மேலே உயர்ந்து போவதில் மிக அருகில் பார்க்கமுடியாத சிலைகள் இவை இரண்டும். சிலைகளின் வழ்மையான தோற்றம் கீழே. சிலைகளைப் பற்றி
இங்கே காணலாம்.









(சிலைகளுக்கான பட உதவி: New South Wales Art Gallery)















சிட்னியில் இருந்தால் அல்லது சிட்னிக்கு வந்தால் ஒரு முறை கிட்டப் போய்க் குதிரைகளைப் பாருங்களேன்..

Tuesday, 26 January 2010

ஜனவரி 26, 2010 அவுஸ்திரேலிய தினக் கொண்டாட்டங்கள்

இன்று ஜனவரி 26, அவுஸ்திரேலியர்களுக்கு பொதுவான ஒரு தினமாக அவுஸ்திரேலிய தினம் கொண்டாடப்படுகின்றது. இன்றைய நாள் இந்த நாட்டில் பிரித்தானியக் குடியேற்றவாசிகள் இங்கு குடியோறிய நாளை நினைவு கூர்ந்து வருடா வருடம் கொண்டாடப்படுகின்றது. பொது விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டு அதிகாலை முதல் பொழுது சாயும் வரை பிரார்த்தனைகள், ஆட்டம் பாட்டம் கொண்டாட்டமாக இந்த நிகழ்வு கொண்டாடப்படுவது வழக்கக். இன்று காலை சிட்னியின் டார்லிங் ஹாபர் துறைமுகத்தை ஒட்டிய சதுக்கத்தில் நடைபெற்ற நிகழ்வுகளைக் காணச் சென்றிருந்தேன். 99% மான வெள்ளையர்கள் நிறைக்க ஆங்காங்கே சீன, இந்திய முகங்கள் ஒன்றிரண்டு தென்பட்டன. மற்றவர்கள் பலருக்கு வேட்டைக்காரன், 3 Idiots, சன் டிவியின் தொடர் நாடகங்களை பார்ப்பதற்கான இன்னொரு விடுமுறை நாள் என்பது குறிப்பிடத்தக்கது. வந்த நாட்டின் நிகழ்வுகளில் ஒட்டாமல் வாழும் எம்மவர் நிலை என்று மாறுமோ.

Friday, 1 January 2010

NAN TIEN TEMPLE

சிட்னியில் இருந்து சுமார் 100 மைல் தொலைவில் (ஒரு மணி நேர பயணம்)அமைந்திருக்கிறது NAN TIEN பெளத்த கோயில்.பெரும் நிலப்பரப்பில் சிறப்பான பராமரிப்போடு சகல சமயத்தவருக்குமாக ஒவ்வொரு நாளும் காலை 9 மணியில் இருந்து மாலை 5 மணி வரை திறந்திருக்கிறது இக்கோயில்.வாருங்கள் அக் கோயிலுக்குப் பயணிப்போம்.
சிட்னி நகரில் இருந்து கோயிலுக்குப் போகும் பாதை இது.

ஆலயத்துக்கு அருகாக நெருங்கும் போதே பெளத்த கோயிலுக்குக் கோபுரம் போலத் தெரியும் பகோடா(pagoda) கண்ணுக்குத் தெரியத் தொடங்கும்.கிட்ட நெருங்க நெருங்க ஆர்வம் பெருக ஆரம்பிக்கும்.அவ் ஆலயத்துக்குரிய ஆலய முகப்பு இது.

சற்று உள்ளே செல்ல முகப்பில் கருணையும் சாந்தமும் பொலிய அன்போடும் புன் முறுவலோடும் அமர்ந்திருக்கும் புத்தரை தரிசிக்கலாம்.

இது தான் தூரத்திலேயே தெரியத் தொடங்கும் பகோடா.

இது அதன் கிட்டிய தோற்றம்.8 மாடிகளைக் கொண்ட பகோடாவை அடைந்ததும் புத்தரை வழிபட்டு அதன் வலக்கைப் பக்கமாகச் சிறப்பாகப் பராமரிக்கப் படும்; மட்டமாகவும் சீராகவும் வெட்டி விடப்பட்ட மதில் போல வளர்ந்திருக்கும் புல் மதில் சூழ்ந்த படிக்கட்டினால் நடந்து சென்றால் பகோடாவின் பின் புறத்தை அடையலாம். மேல் மாடிகளுக்குச் செல்ல அனுமதி இல்லை.ஆனால் ஒரு சுற்று சுற்றி வரலாம்.பளீச்சென்ற சுத்தமும் அமைதியையும் நீங்கள் எங்கும் காணலாம்.

அவற்றுக்கு அப்பால் உயரமான மேட்டு நிலத்தில் அமைந்திருக்கிறது ஆலய மணி.மேலே உள்ள படம் அதன் தோற்றத்தைக் காட்டுகிறது.மிகப் பெரும் அளவில் அமைந்திருக்கும் இம்மணியை பெரும் மூங்கில் குளாய் போன்ற ஒரு அமைப்பினை உடைய களியினால் அசைத்து மணியில் முட்டச் செய்வதன் மூலம் ஓசை எழுப்பப் படுகிறது.

ஒரு முறை நீங்கள் அதனை மணியில் தட்டச் செய்வதன் மூலம் அதன் உள்ளே கேட்கும் இனிய ரீங்காரத்தை கிட்டத் தட்ட 2, 3 நிமிடங்களுக்கு கேட்கக் கூடியதாக இருக்கிறது. அதன் இனிய ஓசை இந்து, பெளத்த தேவாலயங்களின் மணியோசையிலிருந்து வேறுபட்டதாகவும் இனிய துல்லிய ஓசையை கொண்டதாகவும் இருக்கிறது.

அது வெட்ட வெளி ஒன்றில் அமைந்திருப்பதால் அம்மணியின் ஓசை அவ்வாலயப் பரப்பெங்கும் துல்லியமாகக் கேட்கக் கூடியதாக இருக்கிறது.கீழே உள்ள படம் மணி உள்ள இடத்திலிருந்து ஆலயத்தின் பின் புறத்தைக் காட்டுகிறது.

இது ஆலயத்தின் இன்னொரு கட்டிடம்.

இது அதன் இன்னொரு தோற்றம். மிக அழகும் சுத்தமும் சாந்தமும் சிறப்பான பராமரிப்பும் கொண்ட ஒரு இடம் இது.

இது அதன் அருகாக இருக்கும் அடுத்த கட்டிடம். எல்லா இடத்திலும் புத்தரே பல்வேறு தோற்றங்களில் அமர்ந்திருக்கிறார்.உள்ளே செல்ல அனுமதி எல்லோருக்கும் இருக்கிறது.உள்ளே கட்டிடம் மூன்று பகுதிகளாகப் பிரிக்கப் பட்டிருக்கிறது. நடுவில் புத்த பகவானும் இடது கைப்புறம் உள்ள பகுதி தியான மண்டபமாகவும் வலது கைப்பக்கம் உள்ள பகுதி வேண்டுதலை நிறைவேற்றும் இடமாகவும் இருக்கிறது.

இங்கிருக்கிற புத்தர் உருவச் சிலைகள் இலங்கையின் கருணையும் அன்பும் சாந்தமும் கொண்ட புத்த சிலைகளை நினைவூட்டுகின்றன.இப்பெரும் சிலைகளின் பின் புறம் பல ஆயிரக் கணக்கான சிறு சிறு புத்தர் சிலைகள் உள்ளன.எல்லா இடத்திலும் பிரார்த்தனைக்கு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

இந்துக்களின் கோயிலில் நந்தி சிலை இருப்பது போல் சந்தோசம் நிரம்பிய மரத்தில் கடந்தெடுக்கப்பட்ட படுத்திருக்கும் இப்புத்தர் சிலை மிகக் கலை நயத்தோடு முன்னால் இருக்கிறது.

இது அங்கிருந்த அருங்காட்சியகத்தில் வைக்கப் பட்டிருந்த மரத்தில் கலை நுட்பத்தோடு உருவாக்கப் பட்டிருக்கும் இன்னொரு கலைப் படைப்பு.

இது இவ்வாலயத்தின் பின் புறத் தோற்றம்.

இது ஆலயக் கட்டிடம் ஒன்றின் மூலைப் பக்கம். இங்கு இந்த இடத்தில் சிறப்பாக உடனுக்குடன் தயாரித்து வழங்கப்படும் தேநீர் சாலையும் உணவு விடுதியும் இருக்கிறது. எப்போதும் மக்களால் நிரம்பி இருக்கிறது இவ்விடம்.இடப் பற்றாக் குறையும் நீண்ட வரிசையும் எப்போதும் இங்கு இருக்கிறது. ஆனாலும் பணிவோடும் புன் முறுவலோடும் பொறுமையோடும் வேலை செய்யும் பெளத்த இளம் பெண்கள் மிக அழகாக வருபவர்களை உபசரிக்கிறார்கள்.சீன மக்களின் உபசரிப்புப் பண்பையும் பணிவையும் இங்கு காணலாம்.

உள்ளும் வெளியிலுமாக ஆசனங்கள் போடப் பட்டிருக்கின்றன. உட் புறம் இயற்கையான வகையில் மரங்களால் பொழியப்பட்ட சாதனங்களால் எளிமையாக அலங்கரிக்கப் பட்டிருக்கிறது.சீனக் கட்டிடக் கலையின் வனப்பையும் இங்கு காணலாம்.அவர்களின் கட்டிடக் கலையின் சிறப்பம்சம் கூரையின் மூலைப் பக்கம் சற்று உயர்வான தன்மையைக் கொண்டிருப்பதாகும். இங்கும் அதன் அழகைக் காணலாம்.


தாமரைக் குளமும் மூங்கில் காடும் நிழல் தரு மரங்களும் கருங்கல் இருக்கைகளும் சீமேந்தால் செய்யப்பட்ட மிகத் திருத்தமான முக அமைப்பைக் கொண்ட சிலைகளும் உள்ள இவ்விடத்தில் விரிவுரை மட்டபம், தியான மண்டபம், நூலகம்,அருங்காட்சியகம்,தங்கும் விடுதி,கேட்போர் கூடம்,உணவுக்கூடம், விற்பனை நிலையம், வரவேற்புக் கூடம் என்று சகல வசதிகளும் ரம்மியமும் நிரம்பிய இடமாக இக்கோயில் அமைந்திருக்கிறது.

சென்ற வருட முற்பகுதியில் நான் சென்றிருந்த போது அங்கிருந்த கல்வி நிலையத்தில் ஒரு சீன பெளத்தரின் புகைப்படக் கண்காட்சி நடை பெற்றுக் கொண்டிருந்தது."மனிதம்" என்ற தலைப்பில் அவரது வாழ் நாள் சேகரிப்புகள் மிகக் கலைத்துவத்தோடு பார்வைக்கு வைக்கப் பட்டிருந்தன.சகல இன மக்களிடமும் மிக அபூர்வமாக வெளிப்படும் மனிதத் தன்மையை அந்த மனிதர் தன் கமராவுக்குள் சிக்க வைத்திருந்தார். குறிப்பாக ஈழத்து ஏழைத் தமிழ் தந்தை ஒருவர் ஒரு காலை இழந்த தோற்றத்தோடு நிற்க அந்த முடமான காலை உரிமையோடும் பாசத்தோடும் ஒரு விதமான பெருமையோடும் பற்றியபடி நின்ற ஒரு சிறுவனின் உணர்வுகளை அம்மனிதர் கமராவுக்குள் சிறைப்படுத்தி இருந்த விதம் மறக்க முடியாததாக இப்போதும் இருக்கிறது.

என் தோழி ஒருவர் போன போது ஒரு இசை நிகழ்ச்சி நடை பெற்றதாகக் கூறினார்.இயற்கை, ரம்மியம், அமைதி, கலைத்துவம் இவற்றைக் காண, ரசிக்க விரும்புபவர்கள் அவர்களின் இணையப் பக்கத்தை ஒரு முறை பார்த்து விட்டுப் போனால் மேலும் பயன் பெறலாம்.

தெய்வீக வாசனையும் அமைதியும் தவளும் இவ்விடம் ரம்யமான சூழலால் மேலும் மெருகு பெறுகிறது. சுத்தமும் சிறப்பான பராமரிப்பும் மலைப்பாங்கான சூழைலில் அதன் அமைவிடமும் மேலும் அந்த இடத்துக்கு தெய்வீக அம்சத்தைத் தருகின்றன.

சிட்னியின் அவசர வாழ்க்கையில் சிக்கிக் கொண்டவர்கள் சலசலப்பையும் சத்தத்தையும் சற்றே தவிர்க்க விரும்புபவர்கள் அமைதியாக எங்கேனும் ஒரு நாளில் சென்று வர இக் கோயில் நல்ல இடம்.

ஆலய முகவரி;
Bekeley Road,
Berkeley,
N.S.W.2506. தொலைபேசி இலக்கம்;42720600

email; info@nantien.org.au
web; www.nantien.com