Friday, 4 December 2009

சிட்னியின் சிறீமாவே வருக, நல்லாட்சி தருக!

அவுஸ்திரேலிய மாநிலங்களை Premier என்று சொல்லப்படும் முதலமைச்சர்களால் ஆளப்படுவது வழக்கம். தற்போது மத்திய ஆட்சிக்கட்டிலில் இருக்கும் தொழிற் கட்சி (Labour) மேற்கு அவுஸ்திரேலியா தவிர்ந்த மற்றைய ஐந்து அவுஸ்திரேலிய மாநிலங்களின் ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் கட்சியும் இந்த தொழிற் கட்சியே என்பது கூடுதல் தகவல். அதில் குறிப்பாக அவுஸ்திரேலியாவில் சனத்தொகை பரம்பல் அதிகம் உள்ள மாநிலமான நியூசவுத் வேல்ஸ் மாநிலத்தின் ஆட்சியை கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாகக் கோரப்பிடியில் வைத்திருக்கிறது இந்த தொழிற்கட்சி. அப்ப சிட்னி எங்கேய்யா என்று கூ காட்டுபவர்களுக்காக, சிட்னி தான் நியூசவுத்வேல்ஸ் மாநிலத் தலைநகராக இருக்கின்றது.

1995 ஆம் ஆண்டில் பொப் கார் (Bob CARR) என்பவர் தொடக்கி வச்சாலும் வச்சார். 14 வருஷங்களாகத் தொடர்ந்து கேட்க நாதியில்லாத தனிக்காட்டு ராஜாவாக தொழிற்கட்சியே இருந்து வருகின்றது. ஆசிய நாட்டவர்களின் பரம்பல் அதிகமாக இருக்கும் இடங்களில் எல்லாம் தொழிற் கட்சி தான் எம்.ஜி.ஆர் ரேஞ்சில் இருக்கும். ஏனென்றால் முக்கிய எதிர்க்கட்சியான லிபரலுக்கு வெள்ளைத் தோல் மோகம் இருப்பதாக ஏனோ ஒரு உணர்வை அவர்களும் காட்டிக் கொள்வார்கள், பொது ஜனமும் அப்படியே எடுத்துக் கொள்வார்கள். பொப் கார் பன்னிரண்டு வருஷங்கள் தொடர்ந்து நியூசவுத் வேல்ஸ் மாநில முதல்வராக இருந்து, அலுத்துப் போய் இனி வேண்டாம் இந்தப் பதவி என்று தானாகவே இராஜிமா செய்ய (இவ்வளவுக்கும் அவருக்கு வயசு 84 கூட இருக்காது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்)முன்வந்தார். அதற்கு அவர் சொன்ன ஜீஜீபி காரணம் என்ன தெரியுமா, முதல்வராக இருந்தால் குடும்பத்தோடு நேரத்தைச் செலவழிக்க வழியில்லை, இதெல்லாம் ஒரு காரணமா அவனவன் கொடநாடுக்கு ரெஸ்ட் எடுத்துக் கொண்டு ஒரு பக்கமும், இன்னொருபக்கம் சினிமா விருது நிகழ்ச்சிகளை பெப்சி, கோக் என்று நாளாந்தம் ஒவ்வொரு அமைப்புக்களுக்காகவும் நடத்திக் கொண்டு எல்லாம் அரசியல் செய்யலாமே என்று நீங்கள் கேட்பது புரியுதய்யா.

பொப் கார் விட்ட முதல்வர் பதவியை அடித்துப் பிடித்துக் யம்மா யாம்மா என்று கையில் ஏந்தினார் மொரிஸ் எம்மா Morris IEMMA. அவர் முதல் நாள் முதல்வராக வந்த சம்பிரதாய பேச்சிலேயே எனக்கு குடும்பம் முக்கியம், வார இறுதி நாட்களில் எல்லாம் வேலை செய்யமாட்டேன் என்று அதிரடியாக அறிவித்து மூன்று வருஷம் ஆட்சியில் இருந்தார். இடையில் ஒரு தேர்தலைச் சந்தித்தும் அதிலும் வெற்றியீட்டி நானெல்லாம் ஓ.பன்னீர்ச் செல்வம் இல்லைப்பா என்று நிரூபித்தார். ஆனாலும் சனி மாற்றம் இவரை விட்டால் தானே. மின்சார இலாகாவை தனியார் மயப்படுத்த வேண்டும் என்ற இவரது தீர்மானத்துக்கு கட்சிக்குள்ளேயே ஏகப்பட்ட குத்துப்பாடு. தொடர்ந்த இவரது அமைச்சரை மாற்றங்களையும் அதிருப்தியோடு கவனித்தது கட்சி. கடைசியில் நமக்கு நாமே ஆப்பு என்று இராஜினாமா செய்து விட்டார் கூடவே இவரது அமைச்சர்கள் சிலரும் அரசியலில் இருந்து ஒதுங்கிக் கொண்டார்கள்.

எம்மா இராஜினாமா செய்ய பழம் நழுவி நேதன் ரீஸ் (Nathan Rees) கையில் விழுந்தது. ரீஸ் ஐ பார்த்தால் ஜேம்ஸ் பொண்ட் படங்களின் கதாநாயகன் கணாக்காய் இருப்பார். அவரின் வழைவு நெழிவான ஆங்கில உச்சரிப்பை அவரே மீண்டும் கேட்டால் கஷ்டமா இருக்கும். 15 மாதங்கள் தான் இவருக்குக் கொடுப்பினை. நியூசவுத்வேல்ஸ் மாநில வரலாற்றிலேயே தேர்தலைச் சந்திக்காக மன்மோகன் சிங் இவர் தான். ஆமாம் [பிரதமர் தேர்தலால் தேர்ந்தெடுக்கப்படாமலேயே வந்தவருக்கும் அல்ப ஆயுசு தான். கட்சிக்குள் இவருக்கு ஏகப்பட்ட எதிரிகள். ஒரு உறைக்குள்ளேயே ஏகப்பட்ட வாள்களை வச்சு என்ன செய்ய. கடந்த டிசம்பர் 3 ஆம் திகதி கட்சி கூடியது. திட்ட அமைச்சராக இருந்த Kristina Keneally 47 வாக்குகளால் ரீஸ் ஐ வீட்டுக்கு அனுப்பி விட்டார்.

இன்று முதல் எங்கட ஊருக்கு புது சிறீமா பண்டாரநாயக்கா, என்ன விளங்கவில்லையா. நியூசவுத் வேல்ஸ் மாநிலத்தின் முதல் பெண் பிரதமராக வந்திருக்கிறார் இந்த கிறிஸ்ரினா கெனெல்லி. அமெரிக்க அப்பா, அவுஸ்திரேலிய அம்மா என்ற நதிமூலம் கொண்ட இவர் அமெரிக்காவிலேயே அதிக காலம் வாழ்ந்து கழித்தவர்.

இன்று இவரது அறிமுகக் கூட்டங்களில் எல்லாம் ஏகத்தும் பவ்ய(பம்மி)மாகப் பேசி மக்கள் மனதை ஒரே நாளில் கொள்ளை அடிக்க முனைந்தார் என்பதை தொலைக்காட்சியைப் பார்த்ததும் தெரிந்து கொண்டது. இதுவரை காலமும் அரசியல்வாதியை கொஞ்சம் மிடுக்காகப் பார்த்துப் பழகிய கண்களுக்கு Human Resources Director மாதிரி பதுமையாக இவர் பேசும் ஆளுமை எவ்வளவு தூரம் எதிர்க்கட்சியோடு நிண்டு பிடிக்கப் போகிறது என்பது ஜிம் இல் இருந்து ரிவி பார்க்கிறவையில் இருந்து டோல் (அரச உதவிப்பணம்) இல் இருந்து பார்க்கிறவை வரை கேட்கும் கேள்வி. 2003 ஆம் ஆண்டில் தான் இவர் அரசியலிலேயே ஒரு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதியாக வந்தார். நாற்பது வயதில் பிரதமர் யோகம் அடிக்கும் என்று இவர் சத்தியமாக நினைத்திருக்க மாட்டார்.

கிறிஸ்ரினாவிடம் என்ன எதிர்பார்க்கிறீர்கள் என்று தொலைக்காட்சிகள் பொதுஜனங்களின் வாய்க்குள் மைக்கை நுழைத்துக் கேட்டால் "காலை வேளைகளில் ரயிலில் ஒரே கூட்டமா இருக்கு, பெருந்தெருக்களிலும் ஒரே நெரிசல்" என்று தான் சொல்லி வைத்தால் போலச் சொல்லுகிறார்கள். (இலங்கையில் இருக்கிறவை தயவு செய்து இதையெல்லாம் கேட்டு ரத்த அழுத்தம் எகிறாமப் பார்த்துக் கொள்ளுங்கோ, எங்களுக்கு சாப்பாடுக்கே வழியில்லை கார் போற வழியைக் கேட்கினமாம்)



கிறிஸ்ரினாவின் வருகையை ஆவலோடு எதிர்பார்த்துக் காத்துக் கிடக்கிறது எதிர்க்கட்சி. அடுத்த வருஷம் மாநிலப் பொதுத் தேர்தல் வரவிருக்கிறது. இவ்வளவு நாளும் தனிக்காட்டு ராசாவாக இருந்த தொழிற்கட்சியை லிபரல் விரட்டுமா அல்லது அதுக்கு முன்னரேயே கிறிஸ்ரினா போய் விடுவாரா என்று காலம் தான் பதில் சொல்லும்.

ஆரம்பம் எல்லாம் நல்லாத் தான் இருக்கு ஆனா....

4 comments:

ஆயில்யன் said...

ஆஸியின் புரட்சி தலைவி வாழ்க வாழ்க :)))

Thamiz Priyan said...

அம்மாவின் புகழ் எட்டு திக்கும் பரவ வாழ்த்துக்கள்! எம்மாவால் பதிவியில் நீடிக்க ஏலைலைன்னா நான் வர தயாரா இருக்கேன் என்பதை அவையடக்கத்துடன் தெரிவித்துக் கொள்கின்றேன். ;-))

ஜோசப் பால்ராஜ் said...

//(இவ்வளவுக்கும் அவருக்கு வயசு 84 கூட இருக்காது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்) //

ச்சா, என்ன மனுசன் இவரெல்லாம்? ஒரு குடும்பத்த பார்க்க அவருக்கு நேரம் போதலையாமா? அப்டி ஆளெல்லாம் அரசியலுக்கே லாயக்கு இல்ல . போன வரையிலும் நல்லது .

சஞ்சயன் said...

அடுத்தது சந்திரிக்கா
பிறகு ரஜபக்ச
பிறகு சரத் பொன்னையா (பொன்சேகா)