"Vegemite" சொல்லித் தந்த வியாபாரப் பாடம்
எந்த ஒரு கண்டுபிடிப்புக்கும் பின்னால் ஒரு சுவாரஸ்யமான செய்தி இருக்கும். "ஒருவாசல் மூடி மறு வாசல் வைப்பான் இறைவன்" என்று ஒரு பிரபலமான பாடலே சொல்லி வைத்திருக்கின்றது. இது எதற்கெல்லாம் பொருந்தவில்லையோ ஆனால் Vegemite என்ற உணவுப்பதார்த்தம் வந்த கதைக்குத் தாராளமாகப் பொருந்தும் வண்ணம் அதன் வரலாறு அமைகின்றது.
Marmite என்பது உலகறிந்த உணவுசேர்க்கைப் பதார்த்தமாக விளங்கிய காலத்தில் இதனை அவுஸ்திரேலிய நுகர்வோரும் பயன்படுத்தும் விதமாக இதன் மூல உற்பத்தி நடைபெறும் நியூசிலாந்து நாட்டில் இருந்து இறக்குமதி செய்து விநியோகித்து வந்தார்கள். ஆனால் முதலாம் உலகப்போர் ஆரம்பிக்கவும், கப்பல் மூலமான இறக்குமதி விநியோகம் தடைப்பட்டது. அதுவரை மார்மைட் (Marmite) சுவையில் ருசிகண்ட பூனைகளாக இருந்த நுகர்வோருக்கோ படுதிண்டாட்டமாக அமைந்து விட்டது இந்தப் பொருள் மீதான இறக்குமதி நெருக்கடி.
எப்போதுமே அந்த நேரத்தில் அமையும் சந்தர்ப்பத்தை தனக்குச் சாதகமாக அமைப்பவன் வெற்றியடைகின்றான் என்பதை Fred Walker & Company இற்கும் தாராளமாகக் கொடுத்துக் கொள்ளலாம் போல. இல்லையென்றால் இந்த மார்மைட் விவகாரத்தை ஒரு நேர்மறையான எண்ணத்தோடு சிந்தித்துச் செயற்ப்பட்ட அந்த நிறுவனத்தை என்னவென்று சொல்வது. Fred Walker என்பவர் தனது Fred Walker & Company மூலம் ஏற்றுமதி இறக்குமதி வாணிபத்தினை அவுஸ்திரேலியாவில் இருந்து ஆசிய தென் ஆபிரிக்க நாடுகளுக்கும் ஏற்படுத்திச் செயற்பட்டு வந்தவர். இந்த நிறுவனம் உணவுப் பொருட்களை மையப்படுத்தி குறிப்பாக பட்டர், சீஸ், தகரத்தில் அடைக்கப்பட்ட மாமிச உணவுப் பொருட்களோடு சம்பந்தப்பட்டதான வணிகமாக அது விளங்கியது. அக்காலகட்டத்தில் Fred Walker அவுஸ்திரேலிய இராணுவத்திலும் இணைந்து செயற்பட்டு கப்டன் பதவியில் இருந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆரம்பத்தில் மெல்பன் நகரில் இருந்து செயற்பட்டு பின்னர் சிட்னி, அடலெயிட் ஆகிய அவுஸ்திரேலியாவின் பிற நகர்களிலும் கூடவே பக்கத்து நாடான நியூசிலாந்திலும் அமைத்துக் கொண்டது Fred Walker & Company . இந்த நிறுவனம் அகலக் கால் வைக்கவும், முதலாம் உலகப் போரின் கொடூர விளைவுகளில் ஒன்றாக கப்பல் மூலமான இறக்குமதி, ஏற்றுமதி வாணிபமும் தடைப்பட்டது.
முன் சொன்ன மார்மைட் போன்ற பொருட்கள் இனி அவுஸ்திரேலியாவுக்கு வலது/இடது காலை வைக்கவே முடியாது போல என்றெண்ணிய Fred Walker வுக்கு அப்போது தோன்றிய யோசனை தான் அந்த நிறுவனத்தைக் காலாகாலமும் நினைக்க வைக்கும் அளவுக்கு அமைந்து விட்டது. உணவுத்துறையில் அன்றைய காலகட்டத்தில் பிரசித்தி பெற்ற ஆராய்ச்சியாளரனா டாக்டர் சிரில் பி. கலிஸ்ரர் ( Cyril P. Callister ) என்ற விஞ்ஞானிக்கு Fred Walker & Company மூலம் ஒரு பொறுப்பு ஒப்படைக்கப்படுகின்றது. அதுதான் இந்த மார்மைட் இற்குப் பதிலீடாக இன்னொரு பொருளை கண்டுபிடிக்க வேண்டும் என்பது. சில மாதங்கள் நீடித்த டாக்டர் சிரிலின் ஆராய்ச்சியின் விளைவாகப் பிறந்தது ஒரு பதார்த்தம். 1922 ஆம் ஆண்டில் வந்துதித்த அந்தக் கண்டிபிடிப்பை அது 'முழுமையான, பரிசுத்தமான சைவப்பதார்த்தங்களின் கலவை" என்று மட்டும் தான் டாக்டர் சிரிலால் சொல்ல முடிந்தது. வைட்டமின் B சார்ந்த Yeast extract என்ற பதார்த்தத்தின் வெளிப்பாடாகவே இந்த உணவுக் கலவை அமைந்தது.
ஒரு பதிலீட்டுப் பொருளையையோ, போட்டிப் பொருளையோ கண்டு பிடிப்பதை விடச் சிக்கல் மிகுந்தது அந்தப் பொருள் நுகர்வோர் வசம் ஈர்க்கப்படுவதற்கு அமைய வேண்டிய நச் என்ற பெயர். அந்த விஷயத்திலும் Fred Walker & Company ஒரு புதுமை செய்தது. அவுஸ்திரேலியர்களிடம் "இப்படி ஒரு உணவுப் பதார்த்தம் கொண்டு வந்திருக்கிறோம், இந்தப் பொருளுக்குத் தகுந்த பெயர் சூட்டும் பரிந்துரைகளில் இறுதிச் சுற்றுக்கு வருபவர்களுக்கு 50 பவுண்டுகள் பணத்தொகை பிரித்துக் கொடுக்கப்படும்" என்று பகிரங்கப்படுத்தியது. பெயர் சூட்டும் பரிந்துரைகளில் தகுந்த பெயரை நிறுவனர் Walker இன் மகளையே தேர்ந்தெடுக்கச் சொன்னார். அப்போது தான் யாரோ ஒரு புண்ணியவன் சூட்டிய Vegemite என்ற பெயர் கவர்ந்திழுத்தது, அதையே வைத்து விட்டார்கள். பெயர் சூட்டியவர் பெயரை மட்டும் தொலைத்து விட்டார்களாம் என்பது ஒரு Vegemite போத்தலுக்குள் அடக்க வேண்டிய கொடுமை.
Vegemite என்ற பெயர் வைத்த முகூர்த்தம் அந்தப் பொருளின் விற்பனையிலும் உடனே சூடு பிடித்தது என்று சொல்ல முடியாது. அதுவரை மார்மைட் ஐ சாப்பிட்ட நாக்குகள் வெஜிமைட்டை அவ்வளவாக ஏற்காது புறந்தள்ளினர். ஒரு படம் ஓடவில்லையென்றால் அடுத்த படத்திற்கு இசையமைப்பாளரை மாத்திப் பார்க்கலாம் போன்ற காலாகாலத்து தமிழ் சினிமா ஜோதிடம் Walker இற்கும் அப்போது தோன்றியிருக்கவேண்டும் போல. வெஜிமைட் என்ற பெயரைத் தூக்கி விட்டு "Parvill" என்று வைத்துக் கொண்டார். ஆனால் பெயர் மாத்தி என்ன பலன் விற்பனை படு மந்தம் தான் என்ற நிலை.
இந்த நிலையில் Walker Kraft Walker Cheese Co என்ற நிறுவனக் கூட்டாக 1925 இல் ஆரம்பித்ததோடு Parvill" இல் "Vegemite" என்று பழைய பெயரை மாத்திக் கொண்டு மீண்டும் தொடர்ந்தார்கள்.
1935 ஆம் ஆண்டு வரை மந்தமாகத் தொடர்ந்த விற்பனையில் Walker இறந்து போன அதே ஆண்டில் தான்ஒரு பொருளின் அறிமுகத்துக்கு பரவலான விற்பனை மேம்படுத்தல் வேலைகளும் அவசியம் என்பது லேட்டாகத் தான் உறைத்தது அவர்களுக்கு. பெருமளவு விலையுயர்ந்த பரிசு மழைகளோடு மீண்டும் ஒரு கை பார்த்து விடுவோம் என்று களமிறங்கியவர்களுக்கு இம்முறை கிடைத்தது பெரும் வெற்றி. பெரும் எடுப்பிலான Walker இன் விற்பனை மேம்படுத்தல்கள் இந்த வெஜிமைட் ஐ நுகர்வோர் மத்தியில் ஈர்க்கச் செய்தது. சரி என்னதான் இதில் இருக்கிறது என்று ஆரம்பித்தவர்கள் உன்னை விட்டு விலகமாட்டேன் என்று சத்தியம் செய்யாத குறையாக வெஜிமைட் ஐப் பிடித்துக் கொண்டார்கள்.
தக்க சமயத்தில் பிரித்தானிய மருத்துவர் சங்கம் இதனை அங்கீகரிக்கவும், அவுஸ்திரேலிய மருத்துவர்களும் வைட்டமின் B க்கான பரிந்துரையாகச் சொல்ல ஆரம்பித்தனர். ஆரம்பத்தில் அவுஸ்திரேலியாவுக்கு மட்டுமே என்று மட்டுப்படுத்தப்பட்ட இதன் வியாபாரம் இரண்டாம் உலக யுத்தத்தின் பின்னான கடுக்கடங்காது எல்லைகளைக் கடந்து சென்றது. இன்று சராசரியாக ஒவ்வொரு ஆண்டும் 22 மில்லியன் வெஜிமைட் போத்தல்களை காலி செய்கின்றது நுகர்வோர் உலகம்.
"We're happy little Vegemites" Vegimite இன் விளம்பரம் 60 களில் இப்படி இருக்கும், இன்றைய வெள்ளைக்காரப் பெருசுகளுக்கு இந்த விளம்பரப் பாடல் கூட அலுக்காத சங்கீதம் தான்
இப்போது அவுஸ்திரேலிய நுகர்வோர் சந்தையில் Marmite ஆ அது யார்? என்று கேட்கும் நிலை வந்து விட்டது. கூடவே வெஜிமைட் உம் தன் தசாவதாரத்தைக் காட்ட பலவிதமான சுவைகளிலும் கலவைகளிலும் அறிமுகப்படுத்தி வெற்றி நடையைத் தொடர்கின்றது. அந்த வகையில் தற்போது வந்திருக்கும் புதிய பொருள் பெயர் அப்படியே பில்கேட்ஸ் ரகம், இல்லையா பின்னே "iSnack 2.0" என்பதே அந்தப் புதுசின் பெயர். தம் பழைய பாணியில் நுகர்வோருக்கே போட்டியை வைத்து 48 ஆயிரம் பரிந்துரைகளில் இணையத்தள வடிவமைப்பாளராகத் தொழில்புரியும் Dean Robbins என்ற மேற்கு அவுஸ்திரேலிய வாசி சூட்டிய பெயர் தான் அது. iSnack 2.0 இதென்ன விசித்திரமான பெயர் , பெயரை மாற்றுங்கள் என்று கூப்பாடு போடுவோரும் இல்லாமல் இல்லை. இந்தக் கூப்பாடுகளின் எதிரொலியாக தற்போது இந்தப் அறிமுகத்துக்கு Cheesybite என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.
நிலவும் சூழ்நிலைக்கேற்ப நுகர்வோர் தேவையை கண்டுணர்தல் , தகுந்த மாற்றீடை உரிய வகையில் ஆய்வு செய்து அறிமுகப்படுத்துதல், கவர்ச்சிகரமான விற்பனை மேம்படுத்துதல், அந்தப் புதிய மாற்றீடு நுகர்வோர் சந்தையில் தன் செல்வாக்கைத் தக்க வைத்துக் கொள்ளுதல் இது தான் வெஜிமைட் போத்தலுக்குள் அடங்கியிருக்கும் வியாபாரப் பாடம்.
வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் வால்கருக்கோ (Walker)போரும் பொருள் சேர்க்கும்.
உசாத்துணை மற்றும் படங்கள்
Kraft Australia
The Australian
Sydney Morning Herald
Wikipedia
7 comments:
//எந்த ஒரு கண்டுபிடிப்புக்கும் பின்னால் ஒரு சுவாரஸ்யமான செய்தி இருக்கும்.///
எஸ்!
எஸ்!! உங்களின் இந்த கண்டுபிடிப்புக்கு பின்னாடி ஒளிஞ்சுக்கிட்டிருக்கிற சுவாரஸ்யமான செய்தி என்னா பாஸ்?
//எப்போதுமே அந்த நேரத்தில் அமையும் சந்தர்ப்பத்தை தனக்குச் சாதகமாக அமைப்பவன் வெற்றியடைகின்றான் ///
மைண்ட்ல ஃபிக்ஸ் பண்ணிக்கிறேன்
பாடம் அப்படின்னாலே படிக்க நிறைய நிறைய விசயம் தர்றீங்கோ பாஸ்!!!!
பேர் மாத்தப்போறாங்கன்னு நேத்து சொன்னாங்க சேனல் 7 ல
Cheesymite னு பேர் மாத்தியாச்சு.
வணக்கம் சின்ன அம்மிணி
பிந்திய செய்திக்கு நன்றி , அதையும் இணைத்து விடுகிறேன்
கவர்ச்சிகரமான விற்பனை மேம்படுத்துதல்,
????
ஷோபிக்கண்ணு
விற்பனை மேம்படுத்தல் என்றால் ஒரு பொருளை promote பண்ணுவதைக் குறிக்கும்
Post a Comment