Sunday, 29 November 2009

சிட்னி வந்தால் "Jenolan Caves" போங்கோ

சிட்னிக்கு அலுவலக விஷயமாக வருபவர்களோ அல்லது சுற்றுலாவுக்காக வருபவர்களோ என்னிடம் அடிக்கடி கேட்கும் கேள்வி இதுதான். "சிட்னியில் சுற்றிப் பார்க்க உருப்படியான இடம் எது?, வெறும் பீச் இற்கு மட்டும் தான் போகவேண்டியிருக்கே" என்று சலிப்பார்கள். அவர்களுக்கு நான் முதலில் கைகாட்டி விடும் இடம் இந்த "Jenolan Caves".

பொதுவாகவே ஆதிவாசிகள் என்றால் இயற்கையின் சீற்றத்தில் இருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்ள குகைகளை நாடுவார்கள். அப்படியாக முன்னொரு காலத்தில் அவுஸ்திரேலியாவின் ஆதிக்குடிகளான Aborigines வாழ்விடமாக Jenolan Caves என்ற குகைகளே இருந்து வந்திருக்கின்றன. ஐரோப்பியர்களின் கண்ணில் பட்ட கங்காரு தேசம் நாளடைவில் அவர்களின் கழுகுக் கண்களில் இருந்து இந்தக் குகைகளும் தப்பி விடவில்லை. James Whalan என்ற உள்ளூர் குடியானவரின் பார்வையில் தான் இந்தக் குகைகள் முதலில் கண்டுபிடிக்கப்பட்டன. அந்த வருஷம் 1838 ஆம் ஆண்டு என்று கொள்ளப்படுகின்றது.


James Whalan மற்றும் Charles இன் முயற்சியால் இந்தப் பகுதியில் இருந்த பல குகைகள் கண்டுபிடிக்கப்பட்டு நாளடைவில் அவை முக்கியமான சுற்றுலாத் தலங்களாக மாற்றப்பட்டிருக்கின்றன. இன்று நாளாந்தம் நூற்றுக்கணக்கானோர் செல்லும் இடமாக இந்த "Jenolan Caves" மாறி விட்டது.

இந்த "Jenolan Caves" பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் தங்கி ஓய்வெடுத்து ஒவ்வொரு குகைகளாகப் பார்ப்போரும் உண்டு. ஆனால் ஏதாவது ஒரு நல்ல குகையைத் தேர்ந்தெடுத்துப் பார்த்தாலே போதுமானது. ஒவ்வொரு குகைகளைப் பார்ப்பதற்கும் தனித்தனிக் கட்டணங்கள் அறவிடப்படுகின்றன. இவை பெரியவர்களுக்கு 27 அவுஸ்திரேலிய டொலர்களில் இருந்து ஒவ்வொரு குகையின் தன்மையைப் பொறுத்து வேறுபடுகின்றது. முழுமையான விபரங்களைப் பெற்றுக் கொள்ள இங்கே செல்லுங்கள்.

ஒவ்வொரு குகைகளைப் பார்ப்பதற்கும் ஒவ்வொரு நேரங்கள் குறிக்கப்பட்டிருக்கின்றன. பேய்கள் உலாவும் குகை கூட இருக்கிறதாம். கிடுகிடுகிடுகிடு
எந்தக் குகைக்குப் பயணிக்க வேண்டும் என்று நுளைவுச் சீட்டை வாங்கியிருக்கிறீர்களோ அந்தக் குகை முகப்பிற்குச் செல்ல வேண்டும். பின்னர் அந்தக் குகையைச் சுற்றிக்காட்ட நியமிக்கப்பட்டிருக்கும் வழிகாட்டி ஒருவர் வந்தது, குறித்த குகையின் பெருமையைச் சிலாகித்துப் பேசி விட்டு எல்லோரையும் உள்ளே அழைத்துச் சென்று ஒவ்வொரு இடமாக விளக்கம் சொல்லிக் காட்டுவார். கிட்டத்தட்ட 45 நிமிட நேரம் இந்தக் குகைப் பயணம் இருக்கும். கரடு முரடான பாதையாக மேலும் கீழும் ஏறி இறங்கும் பயணமாக இருந்தாலும் களைப்பே தெரியாத அளவுக்கு உள்ளே லேசான குளிரோடு இயற்கை செதுக்கி வைத்த நவீன காலச் சிற்பங்களாய் பவளப்பாறைகள் ஒவ்வொன்றும் தென்படும் காட்சிகளைக் காணும் போது உள்ளத்தில் உவகை வந்து சேரும். சில பகுதிகளில் வண்ண வண்ண விளக்குகளை இட்டு அலங்கரித்திருக்கின்றார்கள். இந்தக் குகைகளில் ஏதாவது ஒன்றைத் தேர்ந்தெடுத்து அதற்குள் திருமணம் முடிக்க வேண்டும் என்று மல்லுக்கட்டுபவர்களுக்கும் வசதிகள் செய்து தரப்பட்டிருக்கின்றன.

சுற்றுலா முடித்து வெளியில் வந்தால் பசி எடுக்கிறதா, அங்கேயே நல்ல உணவகமும் உண்டு. கூடவே "Jenolan Caves" இற்கு வந்து போனதன் ஞாபகமாக வாங்கி வைக்க ஞாபகச் சின்னங்களை விற்கும் கடையும் உண்டு.

Blue Mountains என்ற இன்னொரு முக்கிய சுற்றுலா மையத்துக்கு அருகைமையிலேயே இந்த இடம் இருப்பது இன்னொரு வசதியான அம்சமாகும். நாளாந்தம் சுற்றுலாப் பயணிகளை இந்த இடங்களுக்கு ஏற்றிச் செல்லும் Sydney Explorer பஸ் வசதியும் செய்யப்பட்டிருக்கின்றது. இந்த இடத்திற்கு நேரடியான புகையிரதச் சேவை கிடையாது. சொந்த வாகனத்தில் வருபவர்களும் தாராளமாகப் பயணிக்கலாம். குறுகலான பாதையாக மலையைச் சுற்றுச் சுற்றி மேல் முகட்டுக்கு வருவதற்குள் ஒவ்வாமையால் வாந்தி/சத்தி வருபவர்களும் உண்டு. இன்னொரு விஷயம், இந்த இடத்துக்கு சொந்த வாகனத்தில் பயணிக்கும் போது வாகனத்தில் தாராளமாக எரிபொருள் உள்ளதா எனச் சரி பார்த்த பின்னரே பயணப்படுங்கள். காரணம், இந்த இடத்துக்குப் பயணிக்கும் கிட்டத்தட்ட 45 நிமிட சுற்று வட்டாரத்தில் எரிபொருள் நிரப்பு நிலையங்களைக் காணக்கிடைப்பதே அபூர்வம். ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணு என்று மலையின் இடையில் இருந்த ஒரு எரிபொருள் நிரப்பு நிலையமும் போன தடவை போனபோது இழுத்து மூடப்பட்டிருந்தது.
ஒகே, சிட்னி வந்தால் "Jenolan Caves" போங்கோ, போயிட்டு வந்து அனுபவத்தைச் சொல்லுங்கோ

6 comments:

பின்னோக்கி said...

பாதுகாக்க வேண்டிய இடத்தை நன்றாக பராமரிக்கிறார்கள். மகிழ்ச்சியாக இருக்கிறது. நல்ல தகவல். நன்றி.

கானா பிரபா said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே

விசரன் said...

Tasmania போய் வந்து நேரமிருந்தால் போவம்....

யாருக்கும் Blue Mountain போகும் எண்ணம் யாருக்கும் இருந்தால் கொசு திரத்தி (ஓட்டி) மருந்து வாங்கி பூசிக் கொண்டு போங்கோ... அது கொசு இல்ல.. பேய்.

கானா பிரபா said...

ஐயா

சிட்னியில் இருந்து Tasmania போய் பிறகு இதைப் பார்க்க வாறீங்களா, பெரும் பணக்காரர் ஐயா நீங்கள் ;)

ஆயில்யன் said...

பாஸ் இப்பத்தான் ஓமான் போயிட்டு இதே மாதிரி ஒரு பெரிய - உருகி ஊற்றிய நிலையில் மலை பாறைகள்- கேவ்ஸ் பார்த்துட்டு வந்திருக்கோம்ல!

கானா பிரபா said...

வாங்க பாஸ், சிட்னிக்கும் ஒரு எட்டு வரலாம் இல்லையா