Thursday 29 November 2007

இந்த வழியால் போகாதே...!


"இன்று தான் நீ இந்த வழியால் நடந்து போகும் கடைசி நாள். அடுத்த வாரம் முதல் இந்தப் பாதையால் போக முடியாது"

கடந்த வாரம் வெள்ளி இரவு அவுஸ்திரேலிய உள்ளூர் தொலைக்காட்சியின் செய்தியில் காட்டப்பட்ட ஒளித்துண்டில் வந்த காட்சியில் இடம்பெற்ற பேச்சுத் தான் அது. பிரதமரின் Kirribilli House என்ற உத்தியோக பூர்வ வாசஸ்தலத்தில் இருந்து கடந்த வாரம் வரை இருந்த அவுஸ்திரேலிய பிரதமர் ஜோன் ஹாவார்ட் காலை வேளையில் நடை பயிலச் செல்வது வழக்கம். அப்படியாக அவர் கடந்த வெள்ளி காலை நடை பயின்ற போது தான் மேற்கண்ட பேச்சை அந்த வழியில் தென்பட்ட பொதுமகன் ஜோன் ஹாவார்டை நோக்கிச் சொல்கின்றார். இதுவே இலங்கை என்றால் சொன்னவர் நாலாம் மாடியில் உப்பு, மிளகாய்த்தூள் போட்ட படி அல்லது காணாமல் போனவர் பட்டியலில் இப்போது இருப்பார்.

அவுஸ்திரேலியாவின் இருபத்தைந்தாவது பிரதமராக வந்ததோடு, 1996 ஆம் ஆண்டிலிருந்து 2007 வரை நான்கு முறை தேர்தலில் லிபரல் கட்சி சார்பில் வென்று ஆட்சிப் பீடமேறி இது நாள் வரை இருந்தவர். கடந்த வாரம் தனது தொகுதியானBennelong, தொகுதியில் தொழிற் கட்சி சார்பில் போட்டியிட்ட Maxine McKew வால் தோற்கடிக்கப்பட்டு இன்று ஜோன் ஹாவார்டின் அரசியல் வாழ்வு ஒரு முடிவுக்கு வந்திருக்கின்றது. Maxine McKew என்ற இந்தப் பெண்மணி முன்னாள் ABC தொலைக்காட்சியின் தொகுப்பாளினி என்பது குறிப்பிடத்தக்கது. எந்த விதமான நீண்ட அரசியல் பாரம்பரியமோ மக்களின் அதீத செல்வாக்கோ இல்லாமல் இருந்த இப்பெண்மணி தன்னால் பிரதமரை வீழ்த்துமளவுக்கு வாக்கு வங்கி இருக்கும் என்பதை கனவிலும் நினைத்திருக்க மாட்டார். இந்தத் தொகுதி பெருமளவு சீனர்கள் உட்பட ஆசிய நாட்டவர்கள் பலரைக் கொண்டதாக இருக்கின்றது. அவுஸ்திரேலிய அரசியலின் தலைவிதி எதிர்காலத்தில் ஆசியாவிலிருந்து இந்த நாட்டுக்கு குடிபெயர்ந்தவர்களால் தலைவிரி கோலம் கொண்டு ஆடப்போகின்றது என்பதற்கு இது சின்ன உதாரணம். இன்னும் நிறைய உதாரணங்கள் இருக்கின்றன.

ஜோன் ஹாவார்ட் தன்னுடைய தொகுதியை இழந்ததோடு, தன் கட்சியின் தோல்வியையும் சேர்த்தே அணைத்துக் கொண்டார். நீண்டதொரு வனவாசத்துக்குப் பின் தொழில் கட்சி ஆட்சிப் பீடமேறியிருக்கின்றது. இந்த ஆட்சி மாற்றத்தின் காரணியாக ஆளுக்காள் வித விதமான காரணங்களைக் காட்டினாலும், முக்கியமான அம்சங்களாகப் பேசப்பட்டவை தொழில் கொள்வோருக்கு வசதியாக ஜோன் ஹாவார்ட் அரசினால் முன் வைக்கப்பட்ட தொழில் ரீதியான சட்டத்தீர்திருத்தங்களும் ( Australian industrial relations legislation) அதன் விளைவாக தொழிற் சங்கங்கள் கூட்டாக அரசினைத் தாக்கி மேற்கொண்டிருந்த பிரச்சாரங்களும் முக்கிய இடம் பெறும் அதே வேளை Reserve Bank ஏற்படுத்திய வட்டி விகித அதிகரிப்பு என்பதும் இன்னொரு காரணியாகப் பேசப்பட்டது.

தொழிற்கட்சிக்கு கையில் கிடைத்த கரும்பாக , லிபரல் கூட்டணி அரசின் தொழில் சீர்த்திருத்த சட்டம் கிடைக்கவும் அது கப்பென தொழில் படையின் வாக்கு வங்கியினைக் குறிவைத்து, "என்னைச் சரணடையுங்கள், யாம் காப்போம்" என ஒரு பக்கம் உறுதிமொழி வழங்கவும், இன்னொரு பக்கம் லிபரல் கட்சிப் பிரச்சாரங்களில் தொழிற்சங்கங்களின் ஊதுகுழலாக மாறிவிட்ட தொழிற்கட்சியை ஒதுக்கி விடுங்கள் என்று அலறியது.

ஜோன் ஹாவார்டின் போதாத காலம் அரசின் மத்திய நிதிக் கொள்கைகளுக்கான ரிசர்வ் வங்கியும் சமயம் பார்த்து தனது வட்டி வீதத்தை தேர்தல் காலத்துக்கு முன் அதிகரித்து விட்டது. மெல்லுபவன் வாயில் எது கிடைத்தாலும் ஓகே தானே?

ஒரு நாட்டின் வட்டி வீத மாற்றத்துக்கு பல காரணிகள் இருக்கின்றன, குறிப்பாக சந்தை சக்திகளின் செயற்பாடு, மக்களின் வாங்கும் சக்தியில் ஏற்படும் மாற்றங்கள் அத்துடன் அரசின் பொருளாதாரக் கொள்கை என்பவற்றைச் சொல்லி விடலாம். ஆனால் தொழிற்கட்சியோ " லிபரல் அரசில் தான் இப்படி தொடரும் வட்டி அதிகரிப்புக்கள்" என்று இன்னொரு பிரச்சாரத்தை முடுக்கி விட லிபரல் கூட்டணியோ " எங்கள் அரசில் இடம்பெற்ற வட்டி அதிகரிப்புக்கள் ஒவ்வொரு தடவையும் 0.25 % மட்டுமே, ஆனால் தொழில் கட்சி முன்னர் அதிகாரத்தில் இருந்தபோது 17 % வரையெல்லாம் போயிருக்கின்றது என்றும் மல்லுக்கட்டியது. ஆனால் எல்லாமே பூமராங் ஆக லிபரலின் பிரச்சாரத்துக்கு ஆப்பு வைத்தது. கொடுமை என்ன வென்றல் ரிசர்வ் வங்கி தேர்தலுக்கு இரு வாரம் முன்னர் இன்னொரு 0.25% ஐ வட்டி வீத அதிகரிப்பை ஏற்படுத்தி லிபரல் கட்சியின் வயிற்றெரிச்சலைத் தேடிக் கொண்டது.

நான் முன்னர் கூறியவாறு அரசின் பொருளாதாரக் கொள்கை மட்டுமன்றி மக்களின் வாங்கு திறன் (purchasing power), சந்தை சக்திகளின் (market forces) செயற்பாடும் முக்கிய காரணியாக இருக்கின்றது என்பதை இரு கட்சிகளுமே தெளிவாக வெளிப்படையாகக் கூறத் தவறி விட்டன.

இதுவரை ஜோன் ஹாவார்ட் அரசில் அவுஸ்திரேலியா ஒரு ஸ்திரமான பொருளாதார நிலையை எட்டிப்பிடிக்கவும், வேலையின்மை விகிதம் 30 வருட வீழ்ச்சியினைக் கொடுத்ததும், அரசின் பாதீடு (budget) துண்டு விழாத நிறைவான, அபிவிருத்திப் போக்கினைக் கண்டதும், என்னதான் வட்டி விகிதம் காலத்துக்குக் காலம் அதிகரித்தாலும் பாரிய அளவில் முந்திய தசாப்தங்களோடு ஒப்பிடும் போது இல்லாத அளவுக்கு 6.75% வீதத்தில் இருப்பதும் சாதனை என்று தான் சொல்லவேண்டும்.

ஜோன் ஹாவாட் தன்னுடைய பதவியை அப்போது Federal Treasurer ஆக இருந்த Peter Costello வுக்கு கொடுக்க வேண்டும் என்று கட்சிக்குள்ளும், வெளியேயும் சில வருடங்களாகவே கூக்குரல் இருந்து வந்தது. ஆனால் பெரிதாக மக்களைக் கவரும் ஆளுமை அற்ற Peter Costello மட்டும் அப்போதைய தேர்தல்களுக்கு வந்திருந்தால் லிபரல் அப்போதே ஓய்வூதியம் பெற்றிருக்கும். தொழிற்கட்சியும் சந்திலே சிந்து பாடியிருக்கும். பதிவின் ஆரம்பத்தில் சொன்ன வாக்கியம் அளவுக்கு ஒரு குடிமகனால் இந்த நாட்டுப் பிரதமர் அவமானப்படுத்தப்படும் போது "எங்களுக்கு வரும் அவமானம் எல்லாம் தூசி" என்று ஞானம் பிறக்கிறது, அனுதாபம் மேலிடுகின்றது.

இப்போது தனது சொந்தத் தொகுதியில் வென்றாலும் எதிர்க்கட்சி ஆசனத்துக்குப் போட்டியிடாமல் பின் கதிரை அமர்வுக்கு Peter Costello தன்னுடைய நிலைப்பாட்டை எடுத்திருப்பதிலிருந்து இவரது ஆன்ம பலம் புரிகின்றது.

அமெரிக்க நேசக் கூட்டணியோடு இணைந்து ஈராக், மற்றும் ஆப்கானிஸ்தான் மீதான படைக் குவிப்புக்களிலும் எதிர்ப்போக்கிலும் ஜோன் ஹாவார்ட் இருந்ததும், பக்கத்து ஆசிய பசுபிக் நாடுகளை எஜமானன் போக்கில் பார்க்க நினைத்ததும் இன்னொரு சறுக்கல். முன்னாள் மலேசிய பிரதமர் மகதிர் முன்னர் வெளிப்படையாகவே "அவுஸ்திரேலியா தன் பெரியண்ணன் நினைப்பினை மாற்ற வேண்டும் என்று அன்பு (?) கட்டளை இட்டிருந்தார்.

ஜோன் ஹவார்ட்டின் பிரதமர் அலுவலக ஊழியர்கள் லிபரல் அரசின் சாதனைகளை வேலை நேரத்தில் இருந்து விக்கிப்பீடியாவில் தட்டச்சிப் பெருமை சேர்த்ததாகவும் இன்னொரு கறை உண்டு.

தேர்தலுக்கு இரு நாள் முன் வரை கருத்துக்கணிப்புக்கள் தொழில் கட்சிக்கே சாதகமாகக் காட்ட லிபரல் தன் கொடூர ஆயுதத்தைக் கையில் எடுத்தது. ஒரு குறிப்பிட்ட தொகுதியில் அரபு முஸ்லீம்களுக்கு எதிராக துண்டுப்பிரசுரங்களைக் கொடுத்து வெள்ளையர்களின் அபிமானத்தைப் பெற முனைந்து மீடியாக்களிடம் இருந்து சரமாரியாக அடி வாங்கி "பாவியர் போகும் பாதை பள்ளமும் திட்டியும்" என்று நொந்து கொண்டது லிபரல் கட்சி.

இப்போது Kevin Rudd தொழில் கட்சியின் சார்பில் போட்டியிட்டு அவுஸ்திரேலியப் பிரதமராகியிருக்கிறார். லிபரர் அரசின் ஓட்டைகளைக் காட்டி தன் ஓட்டை எடுத்திருந்தாலும் இந்த ஒட்டைகளை எப்படி அடைக்கப் போகின்றார் என்பது அவருக்கே தெரியாது. கொடுமையின் உச்சம் என்னவென்றால் அவரின் தேர்தல் வாக்குறுதிகளில் உதார் அல்லது உதாரணம்: அதிவேகச் செயற்பாடு கொண்ட broadband, மற்றும் ஏழை மாணவருக்கு லாப்டொப் வசதி.

Kevin Rudd ஐ விட ஆளுமையாக இருந்த ஒரு தொழிற்கட்சித் தலைவர் Kim Beazley, Oxford பல்கலைகழகத்தில் படித்து Rhodes Scholarship பெற்ற நல்ல அறிவாளி. தொழிட்கட்சி தோல்வியைச் சம்பாதித்தும், கட்சிக்குள் பாரிய தலைமைச் சிக்கலையும் கண்டபோதும் அழைத்தவன் குரலுக்கு வருவேன் என்றான் கீதையிலே கண்ணன்" என்று சொல்லுமாற் போல் அடிக்கடி கட்சித்தலைமையேற்று ஜோன் ஹாவார்ட் அரசின் குள்ள நரி அரசியலையும் சாமர்த்தியமாகச் சமாளித்து வந்தவர். கடந்த 2006 இல் தான் இவரிடமிருந்த எதிர்க்கட்சிப் பதவி Kevin Rudd இற்குப் போனது. Kim Beazley மட்டும் வந்திருந்தால் ஓரளவு நிம்மதி கிடைத்திருக்கும். ஆனால் அவருக்கோ அவர் கட்சியில் உள்ளவர்களால் வேண்டாதவன் பெண்டாட்டி கை பட்டால் குற்றம் கால் பட்டால் குற்றம் என்ற நிலை. இப்போது Kevin Rudd இன் அரசாங்கத்தை Hitchcock இன் மர்மப் படத்தைப் பார்க்குமாற்போல நகம் கடித்துக் கொண்டே மூன்றாவது நாளாகக் கவனித்துக் கொண்டிருக்கின்றோம்.

நம் தமிழர்கள் வழக்கம் போல் சந்திரிகா வந்தால் நல்லது ரணில் வந்தால் நல்லது என்ற அதே குருதிச் சுற்றோட்டத்தில் இனி லேபர் வந்திட்டுத்து இனி தமிழர்கள் வாழ்வில் சொர்க்கம் மலரும், மாதம் மும்மாரி பெய்யும் , ஈழத்தின் தமிழர் பிரதேசங்களில் மார்ஸ் சொக்ளேட்டும், கொக்கோ கோலாவும் வானத்தில் இருந்து விமானத்தில் தூவும் என்ற கணக்கில் பேசவும் அல்லது நினைக்கவும் ஆரம்பித்து விட்டார்கள். தொழில் கட்சி பிரதிநிதிகள் முன்னர் "வன்க்கம்" என்று மழலைத் தமிழ் பேசி தமிழர் ஒன்று கூடல்களை இது நாள் வரை ஆரம்பித்து வைத்த அந்த நினைப்பிலேயே இந்தத் தமிழினம் இருக்கின்றது. ஆனால் இவற்றையெல்லாம் ஞாபகத்தில் வைத்து ஏதாவது செய்ய, அரசுக் கட்டில் ஏறியிருப்பவர்களுக்கும் எத்தனை சோலியோ யார் கண்டது.

ஒன்று மட்டும் நிச்சயம், அவுஸ்திரேலியா போன்ற அமெரிக்க ஒட்டுண்ணி அரசாங்கங்களுக்கான வெளியுறவுக் கொள்கை என்பது யார் வந்தாலும் மாறப்போவதில்லை. ஆட்சிக்கு வரும் வரை தான் ஆயிரம் உத்தரவாதங்கள், வந்து விட்டால் "அந்த வழியால் போக மாட்டார்கள்". இந்த நாட்டுக்கு எது தேவை என்பதை தாம் சார்ந்திருக்கும் நாடுகளால் தான் தீர்மானிப்பார்கள், தம்மை சார்ந்திருப்பவர்களால் அல்ல.

"அவுஸ்திரேலியா ஒரு குடியாட்சி கொண்ட நாடு, மக்களின் உரிமைக்கு மதிப்பளிக்கும் நாடு என்றால் இந்த நாட்டில் ஏன் வாக்களிப்பு கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது? வாக்களிக்க மறுப்பதும் எமது உரிமை தானே?" என்று ஒரு நண்பர் கேட்டார். வீம்புக்கு வாக்களிக்காமல் தண்டப்பணம் கட்டுவதை விட வாக்களிப்பதே மேல் என்று சொல்லி அவரைத் தேற்றினேன். தண்டப்பணச் செலவில் நாலு மலையாளப் பட டிவிடி வாங்கி விடலாம்.

பச்சையாகச் சொல்ல வேண்டும் என்றால் எனக்கு லேபர் வழியும் வேண்டாம், லிபரல் வழியும் வேண்டாம் என்று Australian Greens Party க்கு ஓட்டுப் போட்டு எனக்கு நானே திருப்திப் பட்டுக்கொண்டேன்.
(Wikipedia: The Australian Greens, commonly known as The Greens, is a Green Australian political party.The Australian Greens are part of the global "Green politics" movement. )

டிஸ்கி: மேற்கண்ட பதிவில் வரும் விமர்சனக் கருத்துக்கள் என்னுடைய சொந்தக் கண்ணோட்டத்தில் மட்டுமே வருபவை. எல்லாருடைய கருத்துக்கும் ஒத்துப் போக வேண்டும் என்ற அவசியம் இல்லை.

26 comments:

Anonymous said...

அட இப்படி ஒரு வலைப்பக்கம் வச்சிருக்கீங்களா பிரபு?

உங்க ஊர் சமாச்சாரம், இன்னும் படிக்கலை.

கானா பிரபா said...

வாங்க வெயிலான்

என்னுடைய முதல் அரசியல், சமூகம் சார்ந்த பதிவு, வாசிச்சுக் கருத்து சொல்ல முடிந்தால் நன்று.

Unknown said...

கனக்க அலட்டல் இல்லாமல் ஆணித்தரமான அருமையான கருத்துக்கள் பிரபா, தொடரட்டும் உங்கள் அவுஸ்திரலிய அரசியல் கண்ணோட்டங்கள்

Anonymous said...

பிரபா! உங்களது இந்த தளத்தை இப்போது தான் பார்க்கிறேன். இது உங்களது இன்னோர் முகமா?
Article was good.

கானா பிரபா said...

//Ramesh said...
கனக்க அலட்டல் இல்லாமல் ஆணித்தரமான அருமையான கருத்துக்கள் பிரபா, தொடரட்டும் உங்கள் அவுஸ்திரலிய அரசியல் கண்ணோட்டங்கள்//


வாங்கோ ரமேஷ்

இவ்வளவு காலம் இந்த நாட்டில இருக்கிறம், இந்த நாட்டைப் பற்றியும் சொல்லத்தானே வேணும், வாசித்துக் கருத்தளித்தமைக்கு நன்றிகள்.

வந்தியத்தேவன் said...

பிரபா அருமையான கட்டுரை. நமது நாட்டில் யாரோ ஒரு அரைகுறை மந்திரியை மிஸ்டர் என ஊடகவியளாலர் அழைத்ததற்க்கு அந்த மந்தி ஊடகவியளாலரைத் அவமதித்த சம்பவம் நடந்துள்ளது. ஆனால் அவுஸ்திரேலியாவிலோ இல்லை அமெரிக்காவிலோ ஜனாதிபதி, பிரதமரைக் கூட மிஸ்டர் பிரெசிடெண்ட், பிரைம் மினிஸ்டர் என அழைக்கலாம்.

அதேபோல் யார் ஆட்சிக்கு வந்தாலும் அவர்களின் வெளீயுறவுக்கொள்கை மாறவே மாறது.

தமிழ்னாதத்தின் உதவியால் உங்களின் இந்தப் பக்கமும் தெரிந்தது.

கானா பிரபா said...

//Sabes said...
பிரபா! உங்களது இந்த தளத்தை இப்போது தான் பார்க்கிறேன். இது உங்களது இன்னோர் முகமா?//


வருகைக்கு நன்றிகள் சபேஸ்

சக கங்காருக்களுடன் இணைந்து ஆரம்பித்த தளம் இது, கங்காருக்கள் இரைதேடப் போய் விட்டதால் நானே தொடர்ந்து எழுத வேண்டியிருக்கு ;-)
முடிந்தளவு அவுஸ்திரேலிய நிலவரங்களைத் தருகின்றேன்.

Anonymous said...

Piraba! What a wonderfull page.I just come to know this with the help of Tamilnaatham.Keep it up.
'Sarvachitthan'

Anonymous said...

Piraba,

Your program in ATBC radio and this web site gives credit for you.

Devan

கானா பிரபா said...

//வந்தியத்தேவன் said...
பிரபா அருமையான கட்டுரை. நமது ஆனால் அவுஸ்திரேலியாவிலோ இல்லை அமெரிக்காவிலோ ஜனாதிபதி, பிரதமரைக் கூட மிஸ்டர் பிரெசிடெண்ட், பிரைம் மினிஸ்டர் என அழைக்கலாம்.//

வாங்கோ வந்தியத்தேவன்

இந்த வலைப்பதிவு தமிழ் நாதமூடாக உங்களைப் போன்றவர்களுக்குத் தெரிந்ததையிட்டு எனக்கும் மகிழ்ச்சியே.

இந்த நாட்டில் கேள்வி கேட்கும் சுதந்திரம் யாருக்கும் உண்டு. ஆனால் தேர்தல் பிரச்சாரங்கள் நம் இலங்கை, இந்திய அளவுக்கு முன்னேறுகின்றது ;-)

Kanags said...

மடத்துவாசலிலை இருந்து கொண்டு மலையாளத்தையும் ஒரு பிடி பிடித்து இப்ப அவுஸ்திரேலிய அரசியலிலையும் கை வைத்திருக்கிறீர்கள். நல்ல அலசல்.

புது இடத்தில அரசியல் விமர்சனமும் செய்ய ஆரம்பித்து விட்டீர்களோ:)

வசந்தன்(Vasanthan) said...

நாங்களும் தமிழ்நாதத்துக்குள்ளாலதான் வந்தோம்.
கவலைக்குரிய விசயம்தான்.

உந்த கிறீன்பாட்டி தேர்தலில் போட்டியிட்ட ஓர் அரசியற்கட்சியெண்டது இப்பதான் தெரிஞ்சுது.
உந்தப் பேரில எங்கட பள்ளிக்கூடத்தில கொஞ்சப் பெடியள் துண்டுப்பிரசுரம் வெளியிட்டுக்கொண்டும் பரப்புரை செய்துகொண்டும் திரிஞ்சாங்கள்.

நான் நினைச்சன் ரெண்டு பெரிய கட்சிகளுக்குமெதிரான ஓர் இடதுசாரி இயக்கமெண்டு.
இராமன் ஆண்டாலென்ன இராவணன் ஆண்டாலென்ன எண்ட நிலைதானே எங்களுக்கு?

கானா பிரபா said...

வாங்கோ வசந்தன் அண்ணை

வந்து பின்னூட்டமும் போட்டுட்டியள் இனிக் கவலைப்பட்டு வேலையில்லை. அல்லது லேபர் வந்தது தான் கவலையோ?

இரு பெரும் கட்சிக்கும் பெரும்பான்மை வராமல் இருக்க கிறீன் கட்சிக்காரரை வலுப்படுத்துவதில் தப்பில்லைத் தானே.

கானா பிரபா said...

//Sarvachitthan said...
Piraba! What a wonderfull page.I just come to know this with the help of Tamilnaatham.Keep it up.
'Sarvachitthan'//

வருகைக்கு மிக்க நன்றிகள் சர்வசித்தன்

//Piraba,

Your program in ATBC radio and this web site gives credit for you.

Devan//

வணக்கம் தேவன்

எங்கள் வானொலியில் தகுந்த பணி செய்யக்கிடைத்ததும், வலைப்பதிவில் மன உணர்வுகளைப் பகிரவும் கிடைத்த வாய்ப்புகள் உண்மையில் திருப்தியளிக்கும் விடயங்கள்.


//Kanags said...
புது இடத்தில அரசியல் விமர்சனமும் செய்ய ஆரம்பித்து விட்டீர்களோ:)//


வணக்கம் சிறீ அண்ணா

புது இடத்தில் பழைய வேலை தான் ;)

அவுஸ்திரேலிய அரசியலையும் எடுத்துக் கொடுக்கலாம் என்பதற்காகத் தான் இந்த முயற்சி.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

பிரபா!
நல்ல அலசல்.
11 வருடம் பதவியில் இருந்து, தன் தொகுதியைக் கூடக் காக்கும் அரசியல் வித்தையைக் கற்காத இவரை என்னென்பது...போட்டியிடாமல் விலகியிருந்திருக்கலாம்.

தமிழ்பித்தன் said...

அவுஸ்ரேலியர்கள் கோழைகள்
நம்ம ஊர் என்றால் நம்ம தலைவர் தோல்வியை சந்தித்தால் நாலு பஸ் கொழுத்தியிருக்க மாட்டமா, என்ன?
என்னையா அரசியல் நடத்துறாங்கள் அவுஸ்ரேலியாவில் மண்ணாங்கட்டி அரசியல் சுவார்ஸ்யமே கிடையாதா??

கானா பிரபா said...

//ன் பாரிஸ்(Johan-Paris) said...
பிரபா!
நல்ல அலசல்.
11 வருடம் பதவியில் இருந்து, தன் தொகுதியைக் கூடக் காக்கும் அரசியல் வித்தையைக் கற்காத இவரை என்னென்பது...போட்டியிடாமல் விலகியிருந்திருக்கலாம்.//

யோகன் அண்ணா

ஆசை யாரை விட்டது, பிரதமராக இருந்து தேற்ற இரண்டாவது அவுஸ்திரேலிய பிரதமர் என்ற பெருமையில் இதனால் இவருக்கு வந்து விட்டது. முதலில் Stanley Bruce என்பவருக்கு இந்த நிலை வந்தது.

கானா பிரபா said...

//தமிழ்பித்தன் said...
அவுஸ்ரேலியர்கள் கோழைகள்
நம்ம ஊர் என்றால் நம்ம தலைவர் தோல்வியை சந்தித்தால் நாலு பஸ் கொழுத்தியிருக்க மாட்டமா, என்ன?
என்னையா அரசியல் நடத்துறாங்கள் அவுஸ்ரேலியாவில் மண்ணாங்கட்டி அரசியல் சுவார்ஸ்யமே கிடையாதா??//

தம்பி தமிழ்பித்தன்

உணர்ச்சி வசப்பட்டு கனடாவிலை ஆரம்பிச்சு வைக்காதேங்கோ ;-)

Anonymous said...

Anbulla Thamby Piraba

Miha arumaiyana katurai. Kuripaha :-

"நம் தமிழர்கள் வழக்கம் போல் சந்திரிகா வந்தால் நல்லது ரணில் வந்தால் நல்லது என்ற அதே குருதிச் சுற்றோட்டத்தில் இனி லேபர் வந்திட்டுத்து இனி தமிழர்கள் வாழ்வில் சொர்க்கம் மலரும், மாதம் மும்மாரி பெய்யும் , ஈழத்தின் தமிழர் பிரதேசங்களில் மார்ஸ் சொக்ளேட்டும், கொக்கோ கோலாவும் வானத்தில் இருந்து விமானத்தில் தூவும் என்ற கணக்கில் பேசவும் அல்லது நினைக்கவும் ஆரம்பித்து விட்டார்கள். தொழில் கட்சி பிரதிநிதிகள் முன்னர் "வன்க்கம்" என்று மழலைத் தமிழ் பேசி தமிழர் ஒன்று கூடல்களை இது நாள் வரை ஆரம்பித்து வைத்த அந்த நினைப்பிலேயே தமிழினம் இருக்கின்றார்கள். ஆனால் இவற்றையெல்லாம் ஞாபகத்தில் வைத்து ஏதாவது செய்ய அரசுக் கட்டில் ஏறியிருப்பவர்களுக்கும் எத்தனை சோலியோ யார் கண்டது.

ஒன்று மட்டும் நிச்சயம், அவுஸ்திரேலியா போன்ற அமெரிக்க ஒட்டுண்ணி அரசாங்கங்களுக்கான வெளியுறவுக் கொள்கை என்பது யார் வந்தாலும் மாறப்போவதில்லை. ஆட்சிக்கு வரும் வரை தான் ஆயிரம் உத்தரவாதங்கள், வந்து விட்டால் "அந்த வழியால் போக மாட்டார்கள்". இந்த நாட்டுக்கு எது தேவை என்பதை தாம் சார்ந்திருக்கும் நாடுகளால் தான் தீர்மானிப்பார்கள், தம்மை சார்ந்திருப்பவர்களால் அல்ல"

Enra karuthuthuku en paaratukal. Thodarnthu eluthungal.Ungal thiramaiku en Vaalthukal

Mikka Anbudan

Sabesan Annai

கானா பிரபா said...

வணக்கம் சபேசன் அண்ணா

தங்களைப் போன்ற ஆய்வுத்திறன் மிக்கவர்களின் கருத்துக்கள் எனக்கு உற்சாகத்தை அளிக்கின்றது, இது போன்ற பதிவுகளைத் தொடர்ந்து எழுதி மென்மேலும் என் எழுத்தைச் சிறப்பகத் தரமுயல்கின்றேன்.

Anonymous said...

Hello Kaana Praba. you are doing a great job! I enjoy your writings verymuch, please keep up your work!
all the best.. Rohan & Pooranee

கானா பிரபா said...

வணக்கம் நண்பர் றொஹான்

தங்களைப் போன்ற அன்பர்கள் என் பதிவுகளை வாசித்துக் கருத்தளிப்பது எனக்கு உற்சாகமளிக்கின்றது. மிக்க நன்றிகள்.

முபாரக் said...

அட அட அரசியல் விமர்சனம் கூட நல்லா வருது. தொடர்ந்து எழுதுங்கோ

//இனி தமிழர்கள் வாழ்வில் சொர்க்கம் மலரும், மாதம் மும்மாரி பெய்யும் , ஈழத்தின் தமிழர் பிரதேசங்களில் மார்ஸ் சொக்ளேட்டும், கொக்கோ கோலாவும் வானத்தில் இருந்து விமானத்தில் தூவும் என்ற கணக்கில் பேசவும் அல்லது நினைக்கவும் ஆரம்பித்து விட்டார்கள்.//


ரொம்ப லிபரலா இருக்கு விமர்சனம் ;-)

//தண்டப்பணச் செலவில் நாலு மலையாளப் பட டிவிடி வாங்கி விடலாம்.//

அரசியல் பத்தியில கூட உங்க ..... ஈர்ப்பைக் காட்டிட்டீங்களே ;-)

வருங்கால ஆஸ்திரேலியப் பிரதமர் கானாபிரபா!!! வாழ்க! வாழ்க!!

கானா பிரபா said...

வாங்க நண்பா

அரசியலைக் கேட்பதோ/காண்பதோ மட்டும் வழக்கமா இருந்தது. மனதில் பட்டதை எழுதிப் பார்த்தேன். இதுக்கெல்லாம் பிரதமர் பதவியா? ஆள விடுங்க சாமி ;-)

இறக்குவானை நிர்ஷன் said...

பிரபா,
ரசிக்கக்கூடிய மாதிரி அழகா எழுதியிருக்கீங்க. வாழ்த்துக்கள். முடியுமானால் மின்னஞ்சலினூடாக தொடர்புகொள்வீர்களா?

ramnirshan@gmail.com

கானா பிரபா said...

Mikka nanri nirshan, will contact you