Friday 9 March 2007

பிறிஸ்பேன் காகம் புட்டும் தின்னும்................

பிறிஸ்பேனில் உள்ள காகம் ரொறேசியன்காகம் torresian crow (Corvus orru) என்ற இனமாகும்.இது ஒரு அண்டங் காகத்தின் இனமாகும். இதன் வெள்ளைக் கண்களின் கண்மணியைச் சுற்றி ஒரு நீலநிற வளையம் இருக்கும். இதன் கறுப்புச் செட்டைகளில் நீலஉதா நிறப் பளபளப்பு இருக்கும்.(2) பிறிஸ்பேன் காகங்கள் நகரங்களில் மட்டுமே கூட்டமாக இருக்கின்றன எனவும், கிராமப் புறங்களில் அப்படி கூட்டமாகத் தங்குவதிலை எனவும் கிறீஃபித் பல்கலைக்கழக சூழலியலாளர் டர்ரில் ஜோன் ( Griffith University ecologist Darryl Jones ) குறிப்பிட்டுள்ளார். ரொறேசியன்காகத்தின் படத்தை இங்கே பார்க்கலாம்.யாழ்ப்பாணத்தில் இருக்கும் காகம் "வீட்டுக் காகம்" என்ற இனமாகும். இதன் கழுத்துப் பகுதி சாம்பல் நிறமாகவும், இறகுகள் கறுப்பு நிறமாகவும் அதில் பச்சை நிறம் பளபளப்பாக இருக்கும். வீட்டுக் காகத்தின் படம் இங்கு காணலாம். இந்தச் சிறகுகளில்த்தான் பாரதியார் கண்ணனைக் காண்கிறார். இதனை " காக்கைச் சிறகினிலே நந்தலாலா" என்ற பாடல் வரி குறிப்பிடுகிறது




ஈழத்தில் கிராமமானாலும் சரி, நகரமானாலும் சரி எங்கும் காகங்களைக் காணலாம். இது ஏனைய பறவைகளிலும் பார்க்க புத்திக்கூர்மை உடையதாகக் கருதப்படுகிறது. இது மனிதர்கள் வாழும் இடங்களில் அதிகமாக இருக்கும். கிராமங்களிலும் நகரங்களிலும் உள்ள குப்பைகளையும் எஞ்சிய உணவுப் பொருட்களையும் உண்டு வாழ்கிறது. இவ்வாறு சுற்றுபுறச் சூழலை இது துப்பரவு செய்வதால் (2) ஆகாயத்தோட்டி என்று காகத்தைக் குறிப்பிடுவர் என சிறுபராயத்தில் கற்ற நினைவிருக்கிறது.


பிறிஸ்பேனில் எங்கள் வீட்டுக்கு ஒரு காகம் வரும். வழக்கமாக இன்ன நாள்தான் வரும் என்றோ, இன்ன நேரத்திற்குத்தான் வரும் என்று குறிப்பிட்டுச் சொல்ல முடியாது. அது தனக்குப் பசிக்கும்போது வருகிறது என்றுதான் நான் நினைக்கிறேன். ஏனெனில் சில நாட்களில் காலையில், சில நாட்களில் மாலையில், இன்னும் சில நாட்களில் மதியத்திலும் வரும். வந்தவுடன் அது கரையும் விதத்தைக் கொண்டு பசியில்த்தான் கரைகிறது என்பதை நெடுநாள் அனுபத்தினால் அறிந்து கொண்டேன். சோறு, இடியப்பம், தோசை , புட்டு எதைப் போட்டாலும் சாப்பிடும். இது யாழ்ப்பாணக் காகம் மாதிரி கரைந்து மற்றக் காகங்களை கூப்பிடாது. தேவையானளவு சாப்பிட்டதும் ஒருமாதிரியாக கரைந்துவிட்டுப் பறந்துவிடும். யாரும் ஆள் நடமாட்டம் அருகில் இருந்தால் சாப்பிட வராது. சாப்பாட்டை வைத்துவிட்டு கதவைச் சாத்தும் சத்தம் கேட்டபின்தான் வந்து சாப்பிடும்.
இதோ எங்கள் வீட்டில் புட்டு தின்னும் காகத்தைப் பாருங்கள்.
இந்தப் புகைப் படம் கண்ணாடி யன்னலூடாக எடுக்கப்பட்டது. ஏனெனில் ஆள் நடமாட்டத்தின் சின்ன அசைவு தெரிந்தாலே அது பறந்துவிடும்.

ஆனால் தற்போது நான் இப்படி சாப்பாடு போடுவதை நிறுத்திவிட்டேன். இப்படிச் செய்வதை நிறுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுவிட்டது. ஏனெனில் மாநகர சபையின் வேண்டுகோட்கள் காரணம்.

காகங்களுக்கு உணவு கொடுக்க வேண்டாம் என மாநகரசபை நகர மக்களை வேண்டிக் கொள்கிறது. (1)ஏனெனில் அவை இயற்கையாகவே தமக்குரிய உணவை தேட வேண்டும் என்பதாகும். படத்தில் காகம் எதையோ மரங்களுக்கு இடையில் இருந்து எடுத்து தின்கிறதைக் காணலாம்.
மேலும், வீட்டுக் குப்பைத்தொட்டிகளை மூடி வைத்திருக்க வேண்டும்;
வீட்டுக்கு வெளியே செல்லப் பிராணிகளின் எஞ்சிய உணவுகளையோ,நீர் பருகக் கூடிய வசதிகளையோ வைக்க வேண்டாம்
எனவும் மாநகரசபை நகர மக்களை வேண்டிக் கொள்கிறது.இவ்வாறு செய்வதன்மூலம் காகங்களின் தொகையை கட்டுப் படுத்த முடியும் என மாநகரசபை நம்புகிறது.
அதேவேளை, ஆவணி-மாசி வரை இவற்றின் கரையும் சத்தம் இருக்கும்; , யாரும் காகங்களை துன்புறுத்தக் கூடாது ; அவற்றின் கூடுகளையோ , முட்டைகளையோ கலைக்கக் கூடாது; கூடுகளில் இருக்கும் குஞ்சுகளையும் கலைக்கக் கூடாது எனவும் மேலும் மாநகரசபை நகர மக்களை வேண்டிக் கொள்கிறது.(1)

ரொறேசியன்காகம் = torresian crow (Corvus orru) அவுஸ்ரேலியாவுக்குரிய பறவை இனத்தில் ஒன்று. அது இயற்கைப் பாதுகாப்புச் சட்டத்தின் (1992)கீழ் பாதுகாக்கப்படுகிறது. காகம் சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பில் முக்கிய பங்கு வகிப்பதால் காகத்தைத் துன்புறுத்துவோர் இச் சட்டத்தின் கீழ் தண்டிக்கப்படுவர்.
இந்தக் காகங்கள் இறந்த விலங்குகளை உண்டு சூழலை சுத்தப்படுத்துகிறது; அதன் எச்சத்தில் உள்ள பழங்களின் விதைகள் மீண்டும் தாவரங்கள் முளைக்க உதவுகின்றன என்பதால் இப் பறவை இனத்தின் நீண்டகாலப் பாத்காப்பு மிக அவசியம் எனப்படுகிறது.(1)

இப்படியாக மாநரசபையின் கொள்கைகள் இருக்கும்போது, நான் மட்டும் "புரட்டாதிச் சனிக்கு காகத்திற்கு சோறு போட்டே தீருவேன்" என அடம் பிடிக்க முடியுமா?

புட்டுத் தின்ற காகம் இப்போது வருவதில்லை.

உசாத் துணை வலைப் பக்கங்கள்:

2 http://en.wikipedia.org
____________________________________________________________________
படித்துப் பார்த்து குறையிருப்பின் சுட்டிக்காட்டவும். வருகைக்கு நன்றி. அன்புடன் செல்லி.










6 comments:

கானா பிரபா said...

ஆட்டாமா புட்டு போல கிடக்கு கலரப் பார்த்தால்.
மனிசருக்கே இங்க புட்டுத்தின்ன வழியில்லை, நானெண்டால் காகத்தோட போட்டி போடுவன். இது முன்னரும் வாசித்த பதிவு, சுவாரஸ்யமாக இருக்கிறது.

வைசா said...

// இது ஏனைய பறவைகளிலும் பார்க்க புத்திக்கூர்மை உடையதாகக் கருதப்படுகிறது. //

உண்மை. ஒரு குச்சியை தனது அலகில் எடுத்து புழு நுழைந்திருக்கும் குறுக்கிய மரப் பொந்துக்குள் விட்டு மீண்டும் மீண்டும் குத்துவதன் மூலம் அப்புழுவை வெளியே வரவழைத்துச் சாப்பிடுவதிலாகட்டும், உடைக்க முடியாத ஓடுடைய கொட்டைகளை வீதியின் நடுவே போட்டுவிட்டு உயரத்தில் இருந்து பார்த்து கார் அந்தக் கொட்டையின் மீது ஏறி உடைத்தபின் பறந்து சென்று அதை எடுத்துச் சாப்பிடுவதிலாகட்டும் காகங்கள் புத்திசாலிகள் தான்.

லண்டனில் சில இடங்களில் அண்டங்காகங்களின் வகையைச் சேர்ந்த காகங்கள் இருக்கின்றன. பெருமளவில் இருந்து தொல்லை இல்லை.

நல்ல பதிவு, செல்லி.

வைசா

செல்லி said...

வணக்கம் பிரபா
//ஆட்டாமா புட்டு போல கிடக்கு கலரப் பார்த்தால். //
உண்மையிலேயே இது ஆட்டாமாப் புட்டுத்தான். அதிக மாச்சத்து உடம்புக்குக் கூடாது, காகத்துக்கும் அப்படியே!
//இது முன்னரும் வாசித்த பதிவு, சுவாரஸ்யமாக இருக்கிறது.//
கனநாட்களாக கங்கருவும் கொவாலாவும் தனிய இருக்கினம் எண்டிடுத் தான் இதை இங்கையும் போட்டேன். முந்தி ஆரோ "இந்தப் பதிவிலும் போடாம்" எண்டு சொன்னவை. அந்த உற்சாகமும் தான்!
நன்றி

செல்லி said...

வணக்கம் வைசா
பெரிய பிரித்தனியாவில் இருக்கும் காகங்கள் இவைதான்
# Jackdaw C. monedula
# Rook C. frugilegus
# Hooded Crow C. cornix(Northern Britain இல் மட்டும்)
இந்த வலைப் பக்கத்தில் காகத்தைப் பற்றிப் பொதுவான தகவல்கள் நிறைய இருக்கு.
காகத்தின் புத்திசாலித்தனத்தைப் பற்றிப் பல பறவை ஆராய்ச்சியாளர்கள் நிறைய ஆராய்ச்சி செய்திருக்கிறார்கள்.

உங்கள் வருகைக்கும், பாராட்டுக்கும் மிக நன்றி.

`மழை` ஷ்ரேயா(Shreya) said...

காகத்தின்ட புத்திசாலித்தனத்தைப் பற்றி எங்களுக்கு பாலர் பாடசலையிலேயே சொல்லித் தந்திட்டாங்க.. கூழாங்கற்கள் போட்டு தண்ணி மட்டத்தைக் கூட்டித் தண்ணி குடிச்ச காகத்தின்ட கதை ஞாபகம் வருகுதா? :O)

செல்லி said...

ஷ்ரேயா

காகத்தைப் பற்றி நிறைய கதைகள் உண்டு. அதேபோல் காகத்தை ஆராய்ச்சி செய்து பெற்ற தகவல்களும் நிறைய உண்டு
கீழுள்ள வலைப் பக்கத்தில் நிறையத்தகவல்கள் உண்டு.
http://www.zeebyrd.com/corvi29/

Adelaide AFL team இன் பெயர் Crows
ஐஸ்லாந்து முத்திரை ஒன்றில் அண்டங்காத்தின் படம் இருக்கு