Ten Canoes
1936இல் டொனால்ட் தொம்சன் என்பவரால் எடுக்கப்பட்ட ஒளிப்படமே இப்படத்தின் கதைக் கருவிற்குக் காரணமாய் அமைந்தது. வழமையான திரைக்கதையொன்றைப் போலல்லாது கதை சொல்லி ஒருவருடன் நகர்கிறது. தனது முன்னோர்களில் இருவரைப் பற்றிக் கதை சொல்கிறார்.
முன்னோர்களின் கதை கறுப்பு-வெள்ளையில் விரிகிறது. எறும்பு வரிசை போல நடக்கும் 8-10 பழங்குடி ஆண்கள். எல்லாருக்கும் முன்னாலே வயதுக்கு மூத்த மியுங்குலுலு. அடுத்ததாக அவரது தம்பி தயிந்தி. நீர்ப்பறவை முட்டை வேட்டைக்குப் போவதற்கு ஆயத்தப்படுத்துகிறார்கள். மரப்பட்டையை முழுதாய் உரித்துப் பதப்படுத்தி தோணி செய்ய வேண்டி மரப்பட்டை உரிக்க காட்டுக்கு வருகிறார்கள். பேச்சு எப்போதும் போல தம் பெண்களை நோக்கித் திரும்புகிறது. தயிந்தி, தமையன் மியுங்குலுலுவின் இளைய மனைவியை விரும்புகிறான் என அனைவருக்கும் தெரிகிறது. அவனைக் கேலி பண்ணுகிறார்கள். மியுங்குலுலுவும் இதை அறிந்திருக்கிறார். பட்டை உரிக்கும் வேலை நடக்கையில் மியுங்குலுலு தயிந்தியிடம் நேரடியாகவே கேட்க, தயிந்தியும் அதை ஒத்துக் கொள்கிறான். மியுங்குலுலு தயிந்திக்கு தமது முன்னோர்களைப் பற்றியதொரு கதை சொல்ல ஆரம்பிக்கிறார்.
தோணி செய்யும் நேரத்திலும் முட்டை வேட்டையின் போதும் கதை சொல்லப்படுகிறது. எமது கதை சொல்லியின் முன்னோரின் கதை கறுப்பு வெள்ளையிலும், மியுங்குலுலு சொல்லும் கதை வண்ணத்திலும் காண்பிக்கப்படுகிறது. மியுங்குலுலு சொன்ன கதையை கதைக்குள் கதையாக கதை சொல்லி சொல்கிறார்.
மியுங்குலுலு & தயிந்தியின் முன்னோர்கள் - கதைக்குள் கதையின் கதாபாத்திரங்கள் - அறிமுகப்படுத்தப்படும் பணியே அலாதி. உதாரணமாய் பிரின்பிரின் என்பவரை அறிமுகப்படுத்தும் போது அவருக்குத் தேன் மிகப்பிடிக்குமென்றும், எப்போதும் உண்டு கொண்டிருப்பதால் பெரிய வயிறுடையவரென்றும் சொல்லப்படும். அப்போது பிரின் பிரின் ஓர் அசட்டுச் சிரிப்புடன் தலையைச் சொறிந்து கொள்வார். அன்றாட வாழ்வில் சந்திக்கும்/அறிமுகமாகும் சில மனிதர்கள் & அவர்களது செய்கை இருக்கக் கூடியது போல இயல்பாக இருக்கிறது.
* கதாநாயகர் இருவர். அண்ணா ரிஜிமிரரில். நல்லவன். இவனுக்கு 3 மனைவியர்.
[மியுங்குலுலு, தயிந்தி குழுவினர் உரித்த மரப்பட்டையை எடுத்துக் கொண்டு சதுப்பு நில நீர்நிலைக்குச் செல்கின்றனர். மரப்பட்டைகள் நீரில் ஊற வைக்கப்பட்டு பின்னர் நெருப்பில் வாட்டப்படுகின்றன. மீண்டும் நீரில் அமிழ்த்தி அவற்றைக் குளிர்வித்து தேவையான உருவைப் பெற மரப்பட்டைகள் வளைக்கப்பட்டு தோணிகள் செய்யப்படுகின்றன. ]
* ரிஜிமிரிலிலுக்கு 3 மனைவியர். மூத்தவள் பனலுஞ்சு. இரண்டாமவள் நொவாலிங்கு - எரிச்சற் குணமுள்ளவள். இளையவள் அமைதியான அழகான முனஞ்சாரா.
* இரல்பிரில் ரிஜிமிரிலிலின் தம்பி. மனைவியற்ற இவன், தனக்கும் மனைவி இருக்கவேண்டுமெனவும் அது முனஞ்சாராவாக இருக்க வேண்டுமெனவும் விரும்புகிறான். மனைவியற்ற இளம் ஆண்கள் முதன்மைக் குடிலிலிருந்து சற்றுத் தூரத்தில் குடிலமைத்து வாழ்கின்றனர்.
* அடுத்தது முன்னர் சொன்ன பிரின் பிரின்.
* இறுதி அறிமுகம் குழுவினரின் மந்திரவாதி/வைத்தியன்.
சிவப்பு நிறத்தில் தன்னை அலங்கரித்துக் கொண்ட ஒரு வேற்றாள் இவர்களது பகுதிக்குள் ஒரு நாள் அறிவிக்காமல் வருகிறான். மாந்திரீகத்துக்குப் பொருள் பரிமாற/தேட வந்திருப்பதாகச் சொல்பவனுக்கு நல்லெண்ணமாக உணவு மட்டும் கொடுத்தனுப்புகிறார்கள் ரிஜிமிரரில் குழுவினர். அவனும் சென்று விடுகிறான்.
[தோணி செய்து முடித்ததும், மியுங்குலுலு குழுவினர் அதைச் செலுத்திக் கொண்டு தம் வேட்டையை ஆரம்பிக்கின்றனர். கதைக்குள் கதை தொடர்கிறது.]
வேற்றாள் வந்து போன பிறகு கொஞ்சம் சலனமடைந்திருந்த வாழ்க்கை இயல்புநிலைக்குத் திரும்புகிறது. பெண்கள் உணவு சேகரிக்கச் செல்ல ரிஜிமிரரில் வேட்டைக்குப்ப் போகிறான். ஒரு குழுவினராக எப்படி நடந்து கொள்கிறார்கள்/வாழ்கிறார்கள் என்பதைப் பற்றிக் காட்ட இக்காட்சி பயன்படுகிறது.
[மியுங்குலுலு கூட்டத்தினர் மரத்தாலான ஈட்டிகளுடன் வேட்டைக்குக் காத்திருக்கிறார்கள். இதுவே தயிந்திக்கு இவ்வாறான வேட்டையில் முதல் அனுபவம். சதுப்பு நிலம், வேட்டை பற்றி அவன் நிறையக் கற்றுக் கொள்கின்றன்.]
திடீரென ஒருநாள் ரிஜிமிரிலிலின் இரண்டாம் மனைவியான நொவாலிங்கு காணமல் போய்விடுகிறாள். அவள் கடத்தப்பட்டு விட்டாள் என்பதிலிருந்து முதலைக்கு இரையாகிவிட்டாள் என்பது வரை பல காரண்ங்களை குழுவினர் கற்பித்துக் கொள்கின்றனர். அன்றைக்கு வந்த வேற்றாள்தான் அவளைக் கடத்தியிருக்க வேண்டுமென ரிஜிமிரரில் கருதுகிறான். அவ்வாறே குழுவினருக்கும் சொல்கிறான். நொவாலிங்கு இல்லாத வாழ்க்கை வழமையாகிறது. தூரத்திலிருந்து இவர்களிடம் வரும் உறவினரொருவர் தான் நொவாலிங்குவை, தனக்கு அறிமுகமற்றதொரு வேற்றாளுடன் கண்டதாகச் சொல்லவும் ரிஜிமிரரில் குழுவினர் என்ன செய்யலாம் என ஆலோசிக்கின்றன்ர். அவளை மீட்க இரல்பிரில் தவிர ஏனையோர் புறப்பட்டுச் செல்கின்றனர். இரல்பிரில் இவர்களுடன் போகாததற்கு இக்குழுவினரிடம் காணப்பட்ட 'அண்ணன் இறந்தால் அவனது மனைவியர் தம்பிக்கு உரியவர்கள்' என்கிற வழக்கம் காரணமாக அமைகிறது. அவர்கள் இல்லாத நேரத்தில் முனஞ்சாராவை நெருங்க இரல்பிரில் எடுக்கும் முயற்சிகள் முதல் மனைவியான பனலுஞ்சுவால் முறியடிக்கப்படுகின்றன. தேடிப்போன இடத்தில் நொவாலிங்கு இல்லாததால் எவ்வித உயிர்ச்சேதமுமின்றி ரிஜிமிரரில் குழுவினர் திரும்புகின்றனர்.
அடுத்தடுத்த நாட்களில் ஒரு சிறுவன் வேற்றாளொருவன் இவர்கள் பகுதிக்குள் வந்திருப்பதாக பிரின் பிரினிடம் சொல்கிறான். இவ்வேற்றாள் செந்நிறத்தில் அலங்கரித்திருக்கிறான். பிரின் பிரினும் ரிஜிமிரிலிலும் சேர்ந்து இந்த வேற்றாளைத் தேடிச் செல்கின்றனர். தான் அவனுடன் பேச மட்டுமே செல்வதாக ரிஜிமிரரில் சொல்கிறான். ஆனால் ஈட்டி எய்து அவ்வேற்றாளைக் கொன்று விடுகிறான். அருகிற் சென்று பார்த்ததும், இவன் முதல் வந்த & நொவாலிங்குவைக் கடத்தியதாக ரிஜிமிரரில் கருதும் வேற்றாள் அல்ல எனத் தெரிகிறது. உடலை மறைத்து விட்டு ஒன்றும் நடவாதது போல பிரின் பிரினும் ரிஜிமிரரிலும் குடிலுக்குத் திரும்புகின்றனர். கொல்லப்பட்டவனின் இனத்தவர் வந்து , தங்களது ஆளைக் கொலை செய்தது யார் எனக் கேட்க ரிஜிமிரரில் தான்தான் என ஒத்துக் கொள்கிறான்.
[நீர்நிலையில் முதலை இருப்பதால் மியுங்குலுலு குழுவினர் மரங்களின் மேல் தளம் அமைக்க மரக்கட்டைகள் சேகரிக்கின்றனர். அதைக் கொண்டு தளம் அமைத்து இரவுகளில் அங்கு தங்குகின்றனர்.]
அவன் செய்த குற்றத்திற்காக அதனைச் சமப்படுத்தும் வழக்கமான மரியாட்டாவுக்கு ஒத்துக்கொள்கிறான் ரிஜிமிரரில். அவனது மரியாட்டா துணைவனாக இரல்பிரில் செல்கிறான். ஈட்டியெறிந்து கொன்றதால் ரிஜிமிரரில் & இரில்பிரில் நோக்கி அவர்களில் ஒருவர் காயப்படும் வரை ஈட்டிகள் எறியப்படுகின்றன. ரிஜிமிரரில் தாக்குறுகிறான். இருகுழுவினரும் தத்தம் வழியே செல்கின்றனர். ரிஜிமிரரில் அவனது குடிலுக்கு எடுத்ச் செல்லப்படுகிறான்.
[நீர்ப்பறவை, அதன் முட்டை வேட்டை நிறைவுறுறது. மியுங்குலுலு குழுவினர் திரும்பிச் செல்ல ஆயத்தம் செய்கின்றனர்.]
குழுவின் மந்திரவாதி/வைத்தியனுக்கு ரிஜிமிரிலிலைக் குணப்படுத்த முடியாதெனத் தெரிகிறது. இறக்கப்போவதை ரிஜிமிரிலிலுக்குத் தெரியப்படுத்துகிறான். பலமற்ற நிலையிலும் ரிஜிமிரரில் குடில்களின் மத்தியிலுள்ள வெளிக்கு வந்து தன் சாவு நடனத்தை ஆட ஆரம்பிக்கிறான். ஆடிக்களைத்து கீழே விழும் அவனது சைகையைப் புரிந்து கொண்டு குழுவினர் அவனது இறப்புப் பாடலைப் பாடுகின்றனர். ரிஜிமிரரில் இறந்து விடுகிறான். அப்போது காணாமல் போன நொவாலிங்கு அங்கு வருகிறாள். தான் கடத்தப்பட்டதாயும் ஒரு பருவம் முழுக்க நடந்தே இங்கு மீள வந்திருப்பதாயும் சொல்கிறாள்.
ரிஜிமிரரில் இறந்ததால் வழக்கப்படி அவனது மனைவியர் இப்போது இரல்பிரிலின் மனைவியராகின்றனர். இரல்பிரில் குடிலுக்கு வருகிறான். முனஞ்சாராவையே அவன் விரும்புவதால் 3 மனைவியருமே தனக்குரியவர்கள் என மறந்து நேரே அவள் குடிலை நோக்கிச் செல்கிறவனை பனலுஞ்சு மறித்து தன் குடிலுக்கு அழைத்துச் செல்கிறாள். குறுக்கிடும் நவாலிங்கு இரல்பிரிலின் மற்றக் கையைப் பிடித்து தனது குடிலுக்கு வருமாறு இழுக்கிறாள். இவ்விருவரிடமும் சிக்கி இழுபறிப்படும் இரல்பிரில் செய்வதறியாமல் அலறுவதுடன் முன்னோர்களது முன்னோரின் கதை முடிகிறது.
தயிந்திக்கு, அவன் எதிர்பாராத விதமாக அமைந்த முடிவுள்ள கதையைச் சொல்லி அவனைத் திகைக்க வைத்து சரியான வழியைக் கற்பித்த மியுங்குலுலு தனது குழுவினரோடு சேர்ந்து குடிலுக்குத் திரும்புகிறார்.
இயக்கம்: ரொல்வ் டி ஹீயர்
கதை சொல்லி: டேவிட் கல்பிலில். (இவரைப் பற்றிய பதிவு தனியாக இடப்படும்)
ஆண்டு: 2006
மொழி: யொல்ங்கு மாத்தா (பழங்குடி மொழிகளில் ஒன்று) ஆங்கில உபதலைப்புகளுடன்.
உபரி: கான்ஸ் திரைப்பட விழாவில் நடுவர்களின் சிறப்புப் பரிசைப் பெற்ற படம்.
6 comments:
படம் பார்க்கவேண்டும் என்ற ஆவல் ஏற்படுகின்றது. தமிழமணம் இந்த வலைப்பதிவை ஏன் இன்னும் புறக்கணிக்குதோ தெரியேல்லை.
படத்தை இன்னும் பார்க்கவில்லை .
சுவாரசியமான கதை சொல்லும் முறை என்று கேள்விப்பட்டேன்.
இந்தப் படத்தில் நடித்தவர்கள் அனைவரும் அப்பகுதியில் வாழும் மக்களே, யாரும்
இதுவரை நடித்தது கிடையாது.
பூர்வகுடிகளின் கதை/கனவு/காலம் எல்லாம் பின்னிப்பினைந்தவை.
நாகரீகத்தின் இரும்புக்கரங்கள் நசுக்காத primitive spirit உடன் வாழும் மக்களின்
வாழ்க்கையிலிருக்கும் எதோ ஒன்று நம எல்லோருக்கும் appealing ஆக இருக்கிறது.
[இன்னும் சில புகைப்படங்கள் கொடுத்திருக்கலாம்.]
நல்ல பதிவு ...அபார உழைப்பு !
பொதுவா படம் பார்க்கிற பொறுமையில்ல..... அதுவும் இந்த அடிதடி தமிழ் படத்த நினைச்சாலே காத தூரம் ஓடி, சத்யஜித்ரேயையும், கே.பியையும் மானசீகமா மனசுல நினைச்சுக்குவேன்.
ஆனா இத படிக்கும்போது இனி திரைப்பட விழாவுக்கு போகும் படமெல்லாம் பார்க்கணும்னு தோணுது!!!
//தமிழமணம் இந்த வலைப்பதிவை ஏன் இன்னும் புறக்கணிக்குதோ தெரியேல்லை//
கையெழுத்து வேட்டை நடாத்தலாமா?
//primitive spirit உடன் வாழும் மக்களின் வாழ்க்கையிலிருக்கும் எதோ ஒன்று நம எல்லோருக்கும் appealing ஆக இருக்கிறது.//
அது வாழ்க்கையின் எளிமையாத்தான் இருக்கும்.
இந்த பதிவைப் பாத்த பிறகு, படத்தைப் பார்க்க வேணும் போல் இருக்கு.
நல்லா நேரம் எடுத்து எழுதியது தெரிகிறது. அருமை!
Post a Comment