பழங்குடியினர்
ஒஸ்ரேலியாவில் ஐரோப்பியரோ சீனரோ கால் வைக்க முன்னமிருந்தே கிட்டத்தட்ட 45000-60000 ஆண்டுகளுக்கும் மேலாக பழங்குடியினர் வசித்து வருகிறார்கள். தோற்றம் ஆப்பிரிக்கர்களைப் போலிருந்தாலும், இவர்கள் அவர்களிலும் பார்க்கக் குட்டையானவர்கள். சப்பை & விரிந்த மூக்கும் சுருண்ட முடியும் கொண்ட தோற்றம். கிழக்காபிரிக்க, தென்னிந்திய மக்களுக்கும் இவர்களுக்கும் குறிப்பிட்ட ஒரு மரபணு பொதுவாக இருக்கிறதால் இவர்கள் எப்படி இந்த நிலத்துக்கு வந்தார்கள் என்பதில் இந்தியா & தென்கிழக்காசிய நாடுகளூடாக வந்தார்கள் எனும் கருத்து முக்கியமானது. இந்தப் பழங்குடியினர் எல்லாருமே ஒரே மொழியைப் பேசுபவர்களல்லர். ஐரோப்பியக் குடியேற்றத்துக்கு (1788) முன்பு இவர்கள் 700 மொழிகளைப் பேசினார்களாம். அதில் சில: கூறி, முர்ரி, நுங்கர், யமாட்ஜி, வங்காய், அனங்கு, யாப்பா, யொல்ங்கு, பலவ. கிட்டத்தட்ட முக்கால் மில்லியன் மக்கள். (இப்போது 450,000+ பேர்) பல 'நேஷன்'கள் (தேசங்கள் / குறுநிலமோ?) உண்டு.
பழங்குடியினரை இரு வகையாகப் பிரிக்கலாம். அவுஸ்திரேலிய நிலப்பரப்பில் வாழ்வோர், ரொறஸ் நீரிணைத் தீவுக்காரர்(Torres Strait Islanders). ரொரஸ் நீரிணை தீவுகள் பப்புவா நியூகினிக்கும் அவுஸ்திரேலியப் பெருநிலப்பரப்பின் வடமுனைக்கும் இடைப்பட்ட தீவுகள்.
இவ்விரு வகையாருக்குமெனத் தனித்தனிக் கொடிகளுண்டு. அ. பழங்குடியினரின் கொடியிலுள்ள சிவப்பு பூமியையும் கறுப்பு மக்களையும் மஞ்சள் வட்டம் சூரியனையும் குறித்து நிற்கிறது. (2000ம் ஆண்டு சிட்னியில் ஒலிம்பிக் போட்டி நடந்த போது 400மீ ஓட்டப்போட்டியில் வென்ற கதி ப்ரீமன் (Cathy Freeman)இந்தக் கொடியைப் போர்த்திக் கொண்டு தன் வெற்றியைக் கொண்டாடினது ஞாபகமிருக்கலாம்.)
ரொ. தீவுக்காரரின் கொடியின் பச்சை நிலத்தையும், நீலம் கடலையும், கறுப்புக் கோடுகளும் நடுவே இருக்கும் வெள்ளை நிற உருவமும் (அவர்களது தலை அலங்காரம்) மக்களையும் வெண்ணிற நட்சத்திரம் சமாதானத்தையும் குறிக்கிறது.
இவர்களின் இயற்கை சார் அறிவு வியக்கத் தக்கது. நீரே இல்லாமல் காய்ந்து போயிருக்கும். ஆனால் எங்கே பாறைக்கு அருகில் தோண்டினால் நீர் வரும் என்று அறிந்திருந்தார்கள். கங்காரு, ஈமு, ஆமை, ஏனைய சிறு விலங்குகள், மீன், பறவைகளை வேட்டையாடி உணவுண்ட மக்கள் இப்போது இந்த திறமைகளை உல்லாசப்பயணிகளிடம் காட்டிப் பணஞ் சம்பாதிக்கிறார்கள். மிருகங்களை வேட்டையாடின பிறகு அதன் தோல் எலும்பு என்பன அலங்காரத்துக்கும், ஆயுதம் செய்யவும்,வீட்டுப் பாவனைக்குப் பொருள் செய்யவும் பயன்படுத்தப்பட்டது. கற்கள், (சரியாக) எறிந்தால் திரும்பி வரும் பூமராங், எறிகோல் இவை தான் வேட்டையாட உதவும் கருவிகள்.ஒரு இடத்திலே அதிக நாள் தங்கியிருப்பதில்லை. இடம் மாறிக்கொண்டிருப்பார்கள். fragile சூழலைப் பாதுகாக்க. முழுக்க எல்லாவற்றையுமே அறுவடை செய்தால் பிறகு அடுத்த பருவத்திற்கு உணவிருக்காதே. நன்றாக அறிந்திருந்திருக்கிறார்கள். இவர்களது குறுநாட்டு எல்லைகளாகக் கருதப்பட்டவை மலைகள் காடுகள் ஆறுகள்தான்.எதைப் பற்றியும் பெற்றிருந்த அறிவு மூத்தவரிடமிருந்து இளையோருக்கு செவி வழிக் கதைகள் & பாடல்கள், ஆடல், ஓவியம் மூலம் கொடுக்கப்பட்டது. இவர்களது டிஜிரிடூ வாத்தியம் பிரபலமானது. இவர்களது ஓவியங்கள் வித்தியாசமானவையாக இருக்கும்.
பட உதவி: http://www.aboriginaldidgeridoosaustralia.com.au
நிலம் நீர் வானம் தீ என்பவற்றுடனான தொடர்பை உணர்ந்து கொள்ளுதலே இவர்களுக்குச் சமயம். ஒவ்வொரு மதத்திலும் எப்படி பூமியில் உயிர் தோன்றியது என்பதைப் பற்றி இருப்பது போல இவர்களுக்கும் உண்டு. தெய்வசக்திகள் உலவி நிலமும் உயிரும் படைக்கப்பட்டதாக இவர்களால் நம்பப்படும் காலமான கனவுக்காலம்(dream time) பற்றிய கதைகளே இவர்களுக்கு வழிகாட்டி. (ரொ.நீ.தீவுக்காரருக்கு ரகாய் (tagai)எனும் தெய்வசக்தி. இதனை மையமாகக் கொண்ட கதைகள் உண்டு.) தெய்வசக்திகள் மண்ணில் உலவியதும் அவற்றிற்கு உருவாய் தாங்கள் கண்ட மிருகங்களின் உடலமைப்பை வழங்கியும் நல்வழி போதிப்பவையாயும் இயற்கை பற்றிச் சொல்பவையாயும் (எப்படி நட்சத்திரம் வந்தது, ஏன் இரு மிருகங்கள் பகை கொண்டவை என்பன) இந்தக் கதைகள் நிலவுகின்றன.
இவர்களது உடல்வாகு காரணமாக நீரிழிவு, சுவாச நோய்த் தாக்குதலுக்கு அதிகளவில் உட்படுகிறார்கள். ஐரோப்பியரால் பரவிய அம்மை, சின்னம்மை, காசநோய், கக்குவான் இருமல் போன்ற புதிய நோய்களால் அதிகளவில் இறந்தார்கள். வெள்ளையர்களாலும் அழிக்கப்பட்டார்கள். குறிப்பாக 'வேட்டையாடி'யதில் ரஸ்மேனியாவிலிருந்த ஒரு பழங்குடி இனமே அழிக்கப்பட்டது. பெற்றோரில் ஒருவர் வெள்ளையராயும் மற்றவர் பழங்குடியினராயும் இருந்து பிறக்கும் கலப்புப் பிள்ளைகளை பலவந்தமாக இதற்கென்றே ஏற்படுத்தப்பட்ட நிலையங்களில் அரசே சேர்த்துவிடும(1950கள் வரை). பழங்குடியினரில் இப்படிக் கொண்டு செல்லப்பட்ட குழந்தைகள் 'களவாடப்பட்ட தலைமுறை' (stolen generation) என அறியப்படுகின்றனர். இதனைப் பற்றிய அயர வைக்கும் உண்மைக்கதை சொல்லும் படம் Rabbit Proof Fence.
பழங்குடியினரின் இப்போதைய சமூக நிலை பற்றித் தனியே சொல்லவேண்டும். இப்போதைக்கு மிகச் சுருக்கமாக:
அவுஸ்திரேலிய அரசினால் வழங்கப்படும் வாழ்க்கை உதவித் தொகை (dole)ஏனைய அவுஸ்திரேலியரை விட இவர்களுக்கு இருமடங்கு. பணத்தைக் கொடுத்து வாழ்க்கை முறை மேம்படுத்தலை பின் தள்ளுகிறது என்ற பரவலான குற்றச்சாட்டு அரசிற்கெதிராக உண்டு. இப்போதைய வாழ்வில் முற்று முழுதாக அவுஸ்திரேலியச் சமூகத்தோடு ஒன்றிணைந்து வாழ முடியாதவாறு நடைமுறை வாழ்க்கைப் பிரச்சனைகளும் குடி/போதைப் பொருள் பாவனையும் கல்விக் குறைவும் பழங்குடியினரைத் தடுக்கின்றன. பழங்குடியினரைச் சார்ந்த கல்விமான்கள், முக்கிய புள்ளிகள் சமூக மேம்பாட்டிற்கான அவசியத்தைப் பற்றியும் இன்னும் வைத்திய, வீட்டு, கல்வி, அடிப்படை வசதிகள் பெற்றுத்தரும் பொருட்டு விழிப்புணர்வை ஏற்படுத்தவும் முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள். மிகச் சமீபத்தில் இல்லாவிட்டாலும் விரைவில் அவர்கள் முயற்சி திருவினையாக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது. ஆனால் அதற்கு ஒத்துழைப்பும் எல்லாவற்றிற்கும் மேலாக அச்சமூகத்தினரின் ஆர்வம்/உத்வேகமும் தேவை.
21 comments:
சிட்னியில் இவர்களை நான் எடுத்த படம் ஒன்று இங்கு உள்ளது.
பகிர்ந்து கொண்டதுக்கு நன்றி சயந்தன்.
அருமையான பதிவு.
இந்த பூமராங் பற்றி சந்தேகமுண்டு.
எறிந்து இலக்கில் பட்டால்தான் திரும்பவும் கைக்கு வருமா?
இலக்கில் படாவிட்டால்தான் திரும்பவும் கைக்கு வருமா?
அல்லது பட்டாலும் படாவிட்டாலும் திரும்பவும் கைக்கு வருமா?
அண்மையில் Narana Creation என்ற பழங்குடியின் பற்றிய கலாச்சார நிலையமொன்றுக்கு நண்பர்களுடன் சென்றிருந்தேன்.
அவர்களின் வலைப்பக்கத்தில், தேர்ச்சி பெற்ற ஒருவரால் பூமராங் எறிந்து காண்பிக்கப்படும் என்று் போட்டிருந்ததுதான் எனது பயணத்திற்குரிய முக்கிய காரணமாய் இருந்தது.
ஆனால் அன்று அதைப்பார்க்க முடியவில்லை.
அங்கிருந்த விற்பனை நிலையத்தில் நிறையப் பொருட்கள் வைத்திருந்தார்கள். பூமராங் பார்த்தேன். சற்று வளைவான ஒரு மரக்கட்டை.
சந்தர்ப்பம் கிடைத்தால் பூமராங் எறிவதை ஒருமுறை நேரில்பார்த்துவிட வேண்டும்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~
நாங்கள் இருக்கும் நாட்டை தமிழில் எழுதுவது தொடர்பானது.
ஈழத்தவரில் இரு வழக்கங்கள் இருக்கின்றன.
நான் 'ஒஸ்ரேலியா' என்றுதான் எழுதி வந்தேன். பலர் 'அவுஸ்திரேலியா' என்று எழுதுவதைப்பார்த்து நானும் மாறத் தொடங்கினேன். இப்போது இரு வடிவங்களுமே என்னால் பயன்படுத்தப்படுகின்றன.
உங்களது இப்பதிவில் இரு வடிவங்களும் பயன்படுத்தப்பட்டுள்ளன.
அச்சுப்பதிப்புக்களில் 'அவுஸ்திரேலியா' என்பதே பதிவாகிவிட்டது. பெரும்பான்மையும் அந்தப்பக்கம் தான்.
நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?
எதைப்பாவிக்கலாம்?
Narana Creation
தலைவர்.. வாங்கோ வாங்கோ!!
பூமராங் சரியா எறிஞ்சாத் திரும்பி வரும் என்டுதான் தெரியும். இலக்கில பட்டால் அதின்ட வேகம் உந்துவிசை பயணிக்கிற திசை இதெல்லாம் மாறிப்போகுமென்டு தோணுது. இலக்கில பட்டாத் திரும்பி வருமா என்டு தெரியேல்ல. வலையில தேடினா ஒருவேளை என்னவும் தகவல் கிடைக்கும். இல்லாட்டி நேரடியாப் போய் அபொரிஜினியிட்டக் கேட்க வேண்டியதுதான். :O)
அவுஸ்திரேலியா, ஒஸ்ரேலியா - இரண்டையுமே பாவிக்கலாம் என்டுறது என்ட கருத்து. ஊரி்ல இருந்த வரைக்கும் அவுஸ்திரேலியாதான். இப்ப கொஞ்ச நாளாய்த்தான் ஒஸ்ரேலியா என்டிறன்.
நல்ல ஆழமாக ஆராய்ந்து எழுதுயிருக்கிறீர்கள்.வாழ்த்துக்கள்!
அருமையான பதிவு, பரவலாக எல்லோராலும் பார்க்கப்படவேண்டியது, என்னசெய்வது தமிழ்மணமும் புறக்கணிக்குது :-(
வசந்தன், இதுகளைப் பார்த்தாவது உமது முடிவை மறுபரிசீலனை செய்யலாம்
நன்றி செல்லி, நன்றி பிரபா.
// என்னசெய்வது தமிழ்மணமும் புறக்கணிக்குது :-(//
வசந்தனுக்கு இவ்வளவு செல்வாக்கெண்டு எனக்கு இவ்வளவு நாளுந் தெரியாமப் போச்சுது!! :O))
வணக்கம்,
Australia, என்பது ஒரு பெயர்... ஆகவே அதனைத் தமிழில் எழுதும் பொழுது, ஆங்கில உச்சரிப்பிற்கு கிட்டத் தட்டச் சரியாக இருப்பது நல்லது என்பது எனது தாழ்மையான கருத்து...
ஆயினும், இலங்கையில் இருக்கும் வரை நாம் அவுஸ்திரேலியா (இலங்கைத் தமிழர்) என்றே தமிழில் எழுதி வந்தோம், இந்தியத் தமிழர் ஆஸ்திரேலியா என்று எழுதுவதனை நான் அவதானித்திருந்தேன்... எது எப்படியோ... ஒரு பெயர் என்னும் பொழுது, அதன் பெயரை குறைந்த பட்சம் கிட்டத் தட்ட இருக்கக் கூடிய வகையில் சொல்வதோ அல்லது எழுதுவதோ முக்கியம் என்பது என் கருத்து.
இன்னும் ஒரு விடயம்... இங்கு அவுஸ்ரேலியாவில் ABC, TV இல் ஒரு நிகழ்ச்சி போட்டார்கள், அது அவுஸ்ரேலியப் பழங்குடியினர் எங்கிருந்து வந்தார்கள் என்பது சம்மந்தப் பட்டது... அவர்கள்... கூறுகின்றார்கள், அவுஸ்ரேலிய பழங் குடியினரது DNA உம்... மதுரைத் தமிழர் DNA உம் மிகவும் ஒத்ததாக இருப்பதாகக் கூறுகின்றார்கள்...
Dr. Sathiya Nathan ஒரு முறை கூறிய ஞாபகம்... நிறைய பழங்குடியினரின் பெயர்ச் சொற்கள் கிட்டத் தட்ட தமிழ்ப் பெயர்கள் சாயல் கொண்டவை என்று (போற போக்கைப் பார்த்தால்... அவுஸ்ரேலியாவிலேயே தானி நாடு கேட்கலாம் போல் இருக்கு) :P
விரிவான தகவல்கள் நல்ல பதிவு.
[பழங்குடிகள் என்பதை விட பூர்வகுடிகள்
என்று அழைப்பது சரியாக இருக்குமோ?]
ஹரன்: Australia - ஒஸ்ரேலியா/ஆஸ்ரேலியா/அவுஸ்திரேலியா - ஒவ்வொருத்தர் உச்சரிப்பிற்கேற்ப மாறும் என்று நினைக்கிறேன்.
//ABC, TV இல் ஒரு நிகழ்ச்சி போட்டார்கள்//
பார்க்கக் கிடைக்கவில்லை. இப்படிப் பட்ட ஆவணப் படங்களினாற்தான் ABCயையும் SBSஐயும் பிடிக்கிறது.
பூம்புகார் பற்றிப் போடுவதாக ABC TV சொன்னார்கள்.. ஒளிபரப்பப் பட்டதா தெரியவில்லை.
//நிறைய பழங்குடியினரின் பெயர்ச் சொற்கள் கிட்டத் தட்ட தமிழ்ப் பெயர்கள் சாயல் கொண்டவை//
உதாரணமாய் அவர் சுட்டிய சில பெயர்களைச் சொல்லுங்களேன்..
நன்றி கார்திக்.
//பழங்குடிகள் என்பதை விட பூர்வகுடிகள் //
இருக்கலாம். இப்படிச் சொல்லி/எழுதிப் பழகி விட்டது. :O)
பூர்வ குடியினரை பற்றி நல்லாவே எழுதியிருக்கீங்க.
//இவர்களின் இயற்கை சார் அறிவு வியக்கத் தக்கது. நீரே இல்லாமல் காய்ந்து போயிருக்கும். ஆனால் எங்கே பாறைக்கு அருகில் தோண்டினால் நீர் வரும் என்று அறிந்திருந்தார்கள்.// எங்க கிராமங்கள்ல இன்னமும் இப்படி பார்த்து சொல்றவங்க பேச்சை கேட்டு, கிணறு தோண்டுவாங்க.
//பூமராங் சரியா எறிஞ்சாத் திரும்பி வரும் என்டுதான் தெரியும். இலக்கில பட்டால் அதின்ட வேகம் உந்துவிசை பயணிக்கிற திசை இதெல்லாம் மாறிப்போகுமென்டு தோணுது. இலக்கில பட்டாத் திரும்பி வருமா என்டு தெரியேல்ல. வலையில தேடினா ஒருவேளை என்னவும் தகவல் கிடைக்கும்.//
www.boomerang.org.au இங்கேயிருந்து மேலும் விவரங்கள் கிடைக்கும்
//எங்க கிராமங்கள்ல இன்னமும் இப்படி பார்த்து சொல்றவங்க பேச்சை கேட்டு, கிணறு தோண்டுவாங்க//
கேள்விப்பட்டிருக்கேன்.. ஆனா பாத்ததில்ல. சில பேர் குச்சியை வைச்சும் கண்டு தரைக்கடியில எங்க நீரிருக்கு என்று பிடிப்பாங்களாமே..
பூமராங் சுட்டிக்கு நன்றி. போய்ப் பார்க்கிறேன்.
பூமராங் பற்றிய பல தகவல்களைத் தந்தீருக்கிறீர்கள். நன்றி. இந்தப் பூமராங்கை ஒத்த ஒரு ஆயுதம் நமது தமிழர்களாலும் பாவிக்கப்பட்டுள்ளது. இதற்கு வளரி என்று பேர். இது திரும்பிக் கைக்கு வராது (ஆட்களைத் தாக்குவதற்கே இது பயன்பட்டது. குறி பார்த்து எறிந்தால் எப்படித் திரும்பி வரும்:))
இது பற்றிய ஒரு கட்டுரை விக்கியில் எழுதியுள்ளேன். பார்க்க.
வணக்கம் 'மழை' ஷ்ரேயா.
ஏன்னே தெரியல இந்த மக்கள் மீது எனக்கு ஒரு வித அதீத ஈடுபாடு. இவங்களுடைய சரித்திரத்தை தெரிஞ்சுக்கனம் என ரொம்பவும் விருப்பம். இவர்களுடைய பூர்வீகம் ஆசியாவாம். இந்த என் பதிவை கொஞ்சம் போய் பாருங்க. http://naalainamathae.blogspot.com/2007/01/blog-post_25.html
இவர்களுடை வரைபட கலைத்திறனை பற்றியும் கொஞ்சம் எழுதுங்க. இவர்களுடை சித்திரங்கள் மிக அருமையாக நூதன முறையில் அமைந்து இருக்கும். சில டாக்குமெண்ட்ரி படங்களில் பார்த்திருக்கிறேன்.
பகிர்ந்தமைக்கு நன்றி.
பழங்குடியினர் பதிவு நன்றாக உள்ளது.
கங்காரு, கொவாலாவும் காஞ்ச புல்லும்
இப்படி இழுதியதை
கங்காரு, கொவாலா, காஞ்ச புல்லு
அல்லது
கங்காரும், கொவாலாவும், காஞ்ச புல்லும்
என்று எழுதினால் சரியாக இருக்கும் போல் தெரிகிறது.
kanags - வளரி கேள்விப்பட்டிருக்கிறான். ஆனா பூமராங்கை ஒத்தது என்டு தெரியாது. விக்கியில் பார்க்கிறேன்.
மாசிலா - எனக்கும் இவர்களது வரலாறும் கலையும் பிடிக்கும். தொடர்ந்த பதிவுகளில் இவை பற்றி எழுதலாம் என்றிருக்கிறேன்.
கருத்துக்கு நன்றி அனானி.
பொதுவாகவே ஆஸ்திரேலிய பழங்குடிகள் குறித்து பேசப்படுகையில் அவர்களின் வாழ்க்கையின் ஆன்மிகத்தன்மைகள் பேசப்படுவதில்லை. அவை ஏதோ 'பண்பாடு அடையாத' ஒரு மூடநம்பிக்கை தொகுப்பு என்பதாகவே அவர்களை ஆதிக்கம் கொண்டோ ரின் பார்வை இருக்கிறது. ஆனால் சமீப காலங்களில் இம்மக்களின் பண்பாட்டின் ஆன்மிக பரிமாணங்களை ஆராய்ந்த மனிதவியலாளர்கள் வாஸ்தவத்தில் இம்மக்களின் ஆன்மிகப் பார்வை ஆழமானது என்பதனை கண்டுள்ளார்கள். கனவு-காலம் எனும் ஒரு அற்புதமான கோட்பாடு இவர்களுடையது. பிரபஞ்ச சிருஷ்டி, புராண நிகழ்வுகள் மட்டுமின்றி தனிமனித வாழ்க்கையின் வழிகாட்டுதல் ஆகியவை இந்த கனவு-காலத்தில் நம் நனவு-காலத்திற்கு இணையாக நிகழ்வதாக இவர்களின் அக-பயிற்சிகள் உணர்த்துகின்றன. சமயங்களில் என்றென்றும் நிகழும் இக்கனவு-காலம் இம்மக்களுக்கு நாம் உலவும் யதார்த்த காலத்தைக்காட்டிலும் உண்மையானதாக இருக்கும். மக்கள் குழுக்களுக்காக புனித-ஆவேசிகள் இந்த புனித காலத்துக்குள் புரவேசித்து ஆழ்ந்த உண்மைகளை வெளிப்படுத்துவர். இவை சித்திரங்களாகவும் தீட்டப்படுவதுண்டு. அண்மையில் ஒரு புகழ்பெற்ற இயற்பியலாளர் தமது கனவுகள் குறித்த நூலின் கருத்தியலை பெருமளவில் ஆஸ்திரேலிய பழங்குடிகளின் கனவு-கால கருத்தியலை சார்ந்தே அமைத்துள்ளார். இம்மக்களின் கலாச்சாரம் குறித்து தமிழரை ஈர்த்துள்ள தங்கள் பதிவுக்கு நன்றி.
test from satha
பதிவுக்கு நன்றி
Post a Comment