Thursday 24 June 2010

Kevin Rudd இன் தலைவலி, அவுஸ்திரேலியாவின் முதல் தலைவியாக

அவுஸ்திரேலியாவின் அரசியல் இன்று தலைவிரி கோலமாக்கப்பட்டு அவசர அவசரமாக அள்ளி முடியப்பட்டிருக்கின்றது புதிய இரண்டு சரித்திரங்களோடு.

ஒன்று அவுஸ்திரேலியாவின் முதல் பெண் பிரதமராக Julia Gillard அம்மையார் வந்திருக்கிறார். இன்னொன்று அவுஸ்திரேலிய தொழிற்கட்சிச் சரித்திரத்திலேயே முதல் தடவையாக ஒரு தலைவர் தன் பதவிக்காலம் முடிவதற்கு முன்னரே தூக்கி வீசப்பட்டிருக்கிறார் அவர் இது நாள் வரை பிரதமராக இருந்த Kevin Rudd.

"வேண்டாத பெண்டாட்டி கை பட்டால் குற்றம் கால் பட்டால் குற்றம்" இது சரத் பொன்சேகாவுக்கு மட்டுமல்ல, நேற்று வரை எமது அவுஸ்திரேலிய தேசத்தை ஆண்டு அடங்கிப் போன கெவின் ரட்டிற்கும் பொருந்தும். கொஞ்சக்காலமாகவே மனுசருக்கு ஏழரைச் சனி எல்லாப் பக்கத்தாலும் நின்று குத்தாட்டம் போட்டது.

2007 ஆம் ஆண்டு பொதுத்தேர்தல் நடக்கும் சமயம் தான் Kevin Rudd என்ற ஒரு மனிதர் அவுஸ்திரேலியாவில் இருப்பது பலருக்குத் தெரியும் என்னும் அளவுக்குத் திடீர்த் தலைவராக்கப்பட்டவர் இவர். இவருக்கு முன்னால் இருந்த Kim Beazley மிகுந்த கல்விமானாகவும் அரசியலில் பழம் தின்றவர் என்றாலும் கொட்டை போடுவதற்கு முன்னர் யாராவது ஒருவரை அவசரமாக நியமித்து இவரின் பதவிக்கணக்கை முடித்து வீட்டுக்கு அனுப்பும் கண்ணாமூச்சி ஆட்டமும் அதுவரை நடந்து கொண்டிருந்தது. ஆக Kim Beazley என்பவர் அவ்வப்போது வந்து தொழிற்கட்சிக்கு ஒட்டு வேலைகள் செய்து விட்டுப் போகும் மனிதராக இருந்தார்.

என்னதான் சொல்லுங்கோ, கீழைத்தேய நாடுகள் என்றாலென்ன மேலைத்தேய நாடுகள் என்றாலென்ன அரசியல்வாதியாகப் பிறப்பெடுத்தாலே எப்போது எந்த நேரம் யார் கண்(னி) வெடி வைப்பான் என்று தெரியாத பிழைப்புத் தான். அதுவும் அவுஸ்திரேலிய அரசியலில் இந்தப் பகடைக்காய் ஆட்டம் தேசிய அளவில் மட்டுமல்ல மாநில அளவிலும் நடந்து கொண்டிருக்கும் சித்து விளையாட்டு.
அவுஸ்திரேலியாவின் அதிகப்படியான அரசியல் தலைவராக இருந்த பெருமை கொண்ட John Howard தன் திறைசேரி அமைச்சர் Peter Costello ஐ அடுக்களைக்குக் கூட அண்டாமல் கண்ணும் கருத்துமாக வைத்திருந்ததோடு தன்னுடைய கடைசி நாட்களிலும் Peter Costello வை அடுத்த தலைவராக முன்மொழியாமல் இருந்தவர். அந்த வருத்திலோ என்னவோ John Howard வீம்பு பிடித்துத் தானே 2007 தேர்தலில் நிற்பேன் என்று போட்டி போட்டு மண் கவ்விய நிலையிலும் Peter Costello காலியாக இருந்த எதிர்க்கட்சி ஆசனத்துக்குப் போட்டி போடாமல் இரண்டு வருசம் சிரிச்சுச் சிரிச்சே சமாளித்துக் காலத்தைத் தள்ளீ கடைசியில் அரசியலுக்கு குட்பை சொல்லி விட்டு அவரும் போய் விட்டார். அதுவரை தனிக்காட்டு ராசாவாக ஆண்டு களித்துக் களைத்த லிபரல் கட்சி எதிர்க்கட்சியாக மாறிப் போனது அவர்களுக்கு நிரம்பவே தடுமாற்றத்தைக் கொடுத்திருக்கும். இல்லையா பின்னே. கடந்த இரண்டு வருஷம் சொச்ச நாட்களுக்குள் முன்று பேர் எதிர்க்கட்சித் தலைவராக இருந்து அழகு பார்த்தார்கள். முதலில் வந்தவர் Brendan Nelson இவரின் கஷ்டகாலம் முன்னர் தொழில்கட்சியில் இருந்தது தான். முன்னர் இவர் தொழில்கட்சியில் இருந்த போது உடல் மண்ணுக்கு உயிர் தொழில்கட்சிக்கும் என்று முழங்கிய வீடியோக்களை ஜெயா டிவி ராம்தாஸ் கருணாநிதி பக்கம் போகும் சமயம் எடுத்து விடும் வீடியோக்கள் போலக் காட்டி நாறடித்தது ஒரு பக்கம் என்றால் இன்னொரு பக்கம் இந்த மனுசர் அநியாயத்துக்கு அப்பாவியாக இருந்தார். ஆட்சியில் இருக்கும் தொழிற்கட்சியின் நடவடிக்கைகளை ஆற அமர ஒப்புக்கு இரண்டு தொலைக்காட்சிகளின் ஒலிவாங்கிகளுக்குக் கொடுத்துக் கொண்டிருந்த இவரைக் கடாசி விட்டார்கள் கட்சிக்காரர்கள். இரண்டு சொட்டுக் கண்ணீருடன் இவர் போக "அண்ணன் எப்போ சாவான் திண்ணை எப்போ காலியாகும்" என்று அதுவரை காத்திருந்த Malcolm Turnbull சிக்கெனப் பிடித்தார் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை.இவரின் பலவீனமே அதிகமாக உணர்ச்சிவசப்படுவது. அது சினிமாக்காரன் என்றால் கைதட்டி ரசிக்கும் சனம். ஆனால் இந்த மனுசன் அவதி அவதியாகச் செஞ்ச வேலைகளால் கைகொட்டிச் சிரித்தார்கள் ஊரார் சிரித்தார்கள். மீண்டும் கட்சிக்குள் குழப்பம். இந்த முறை Malcolm Turnbull க்கு ஆப்பாக வந்தவர் Tony Abbott இன்றுவரை எதிர்க்கட்சித் தலைவராக இருப்பவரும் இவரே பதவியில் போட்டி இடுவதற்கு முன்னர் சத்தியமா எனக்கு அந்த ஆசை இல்லை என்று தலையில் அடிச்சு கற்பூரம் கொழுத்தாத குறையாகச் சொன்னவர் (அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா - நன்றி: கவுண்டமணி சுவாமிகள்). தேர்தல் நடைபெற இன்னும் நாலைந்து மாதங்கள் இருக்கும் நிலையில் Tony Abbott கூட பா(ர்)ட்டிக்கு அடங்கிய சமத்துப் பையனாக இருப்பாரா என்பது போகப் போகத் தெரியும். ஏனென்றால் சூழ்நிலை அப்படி. Malcolm Turnbull கூட இனிமேல் தன் தொகுதியான Malcolm Turnbull இல் இனிமேல் போட்டி போடமாட்டேன் போய்யா என்று சலித்துக் கொண்டே சொல்லி விட்டதால் அந்தப் பக்கமிருந்து கத்தி வராது என்று நம்பலாம். இப்படியாக கடந்த 2007 ஆம் ஆண்டிலிருந்து பிரதான எதிர்க்கட்சியான லிபரல் கட்சிக்குள் குத்து வெட்டு, ஊசலாட்டம் , கரகாட்டம் எல்லாம் ஆடிக்கொண்டிருக்கும் போது மறுமுனையில் ஆட்சியில் இருக்கும் தொழிகட்சி தன் சொந்தச் செலவில் சூனியம் வைத்துக் கொண்டிருந்ததைத் தான் விதியின் விளையாட்டு என்பதா?

முன்னர் சொன்ன அரசியல் பின்புலன்களைப் பார்க்கும் போதே ஒன்று தெளிவாகத் தெரியும். கட்சிக்குள் தனி நபரின் செல்வாக்கு என்பது ஒரு எல்லைக்குள் தான். கூட்டமாக சேர்ந்தால் கும்மி விடுவார்கள் என்பது ஆட்சியில் இருப்பவருக்கும் பொருந்தும் எதிர்க்கட்சி ஆசனத்தில் இருந்து ஆட்சியைப் பார்த்துக் கொட்டாவி விடுபவருக்கும் தெரியும். கட்சியில் இருந்து ஆட்களைக் கழற்றிக் கொண்டு போய் சேவல் சின்னத்திலோ, புறாச் சின்னத்திலோ போட்டி போடுமளவுக்கும் கூட இங்கே யாருக்கும் தில் இல்லையப்பா.

மீண்டும் முதற்பந்திக்கு வருகின்றேன். 2007 ஆம் ஆண்டு தேர்தலில் John Howard என்ற பழுத்த அரசியல் சாணக்கியருக்கு ஈடு கொடுக்க எல்லா வித சித்து வேலைகளையும் பார்த்து ஓய்ந்த நிலையில் ஒரு சாந்த சொரூபியைக் களமிறக்கி மக்களின் அனுதாப அலைகளை அள்ளிக்குவிக்கலாம் என்ற தொழிற்கட்சியின் நினைப்புக்கு அளவெடுத்த சட்டையாக வந்து பொருந்தினார் Kevin Rudd. அந்த நேரம் பார்த்து தொழில் ரீதியான சட்டத்தீர்திருத்தங்களும் ( Australian industrial relations legislation) அதன் விளைவாக தொழிற் சங்கங்கள் கூட்டாக அரசினைத் தாக்கி மேற்கொண்டிருந்த பிரச்சாரங்களும் தொழிற்கட்சிக்குப் பலமான ஒரு வாக்கு வங்கியைக் கொண்டு வந்து தங்கத் தாம்பாளத்தில் கொடுக்க முனைந்தது. கூடவே மத்திய அரசியின் தொடர்ச்சியான வட்டி அதிகரிப்பு என்பதும் குடும்பஸ்தர்களை ஈட்டியாகக் குத்திய போது ஆபத்பாந்தவனாகத் தெரிந்தார் Kevin Rudd பெருவாரியான ஆதரவோடு ஆட்சியைப் பிடித்தார் இந்தப் புதுமுகம்.
"இப்போது Kevin Rudd இன் அரசாங்கத்தை Hitchcock இன் மர்மப் படத்தைப் பார்க்குமாற்போல நகம் கடித்துக் கொண்டே மூன்றாவது நாளாகக் கவனித்துக் கொண்டிருக்கின்றோம்." என்று முன்னர் இவர் ஆட்சிப் பீடம் ஏறிய போது சொல்லியிருந்தேன். அதுதான் இது நாள் வரை நடந்திருக்கிறது இவருக்கு.

அடிப்படைக் கல்வி வசதிகள் , சுற்றுச் சூழல் மாற்றத்தில் பாதுகாப்பு போன்றவற்றில் அதிக முனைப்புக் காட்டியிருந்த Kevin Rudd இவற்றைச் சாதித்துக் காட்ட முனைந்த போது உள்ளூரிலும் வெளியூரிலும் பல சவால்கள். மக்களுக்கும் "அரைத்த மாவை அரைப்போமா" பாட்டு மெல்ல போரடிக்க ஆரம்பித்தது. தொழிற்சங்கங்களின் ஆசியோடு வந்த தொழிற்கட்சி அரசுக்கு அடிக்கடி கறுப்புத் தபால்கள் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். கூடவே அகழ்வாய்வு (mining) பணிகளுக்கு வரிவிதிப்பில் புதிய சீர்திருத்தங்கள் என்று மெல்ல மெல்ல கெட்ட பிள்ளை ஆகிக் கொண்டிருந்தார் Kevin Rudd. இதை உறுதிப்படுத்துமாற்போல கடந்த சில வாரங்களாக வரும் கருத்துக் கணிப்புக்களிலும் தொழிற்கட்சியின் வாக்கு விகிதம் பெருமளவு சரிந்து இரட்டை கட்சிகளுக்கான விருப்பு வாக்குகள் எதிர்க்கட்சிப் பக்கம் தாவ ஆரம்பித்தன. பதவிக்கு வந்த போது சூப்பர் ஸ்டார் ரேஞ்சில் Kevin Rudd வாக்கு விகிதம் இருக்க எதிர் அணியில் இருந்தவர் பரிதாபமான விகித்தில் இருந்த நிலை மெல்ல மெல்ல மாறிக் கொண்டு வருகிறது. இந்த நிலையில் Kevin Rudd இற்குச் சவாலாக மாறினார் இது நாள் வரை துணைப்பிரதமராக இருந்த Julia Gillard, இவர் Education, Employment and Workplace Relations ஆகிய இலாகாக்களுக்கும் கூட அமைச்சுப் பதவியேற்றவர். தன்னுடைய அமைச்சுப் பொறுப்பேற்றதும் John Howard கொண்டு வந்த தொழில் சீர்திருத்தம் தொடர்பான விளக்கக் கையேடுகளை ஆவேசமாகக் கிழித்துக் குப்பையில் போட்டாரே அம்மணி அங்கேயே பார்க்க வேண்டும் இவர் வேகத்தை.

Julia Gillard அடிப்படையில் ஒரு சட்டக் கல்வி மற்றும் கலைப்பட்டதாரி. 29 செப்டெம்பர் 1961 இல் இங்கிலாந்தின் வேல்ஸ் இல் பிறந்த இவரின் தந்தை நிலக்கரிச்சுரங்கத்தில் வேலை பார்த்தவர். 1983 ஆம் ஆண்டில் அவுஸ்திரேலிய மாணவர் சங்கத்தினை நிர்வகிக்கும் தலைமைப் பொறுப்பேற்றதுடன் மெல்ல மெல்ல அரசியலுக்கும் விழுந்தார். 1996 ஆம் ஆண்டிலிருந்து விக்டோரிய மாநிலத்தின் தொழிற்கட்சிப் பணியில் ஈடுபட்டுச் செயற்பட்டவர். இவரின் Partner, Tim Mathieson ஒரு சிகை அலங்கார நிபுணர். பிள்ளைகள் இல்லை. மாநில அரசியலில் இருந்து மெல்ல மெல்லத் தன் அரசியல் காயை மத்திய அரசியலில் போட்டார். துடிப்பான நிழல் அமைச்சராக இவர் செயற்பட்ட பாங்கு 2007 பொதுத் தேர்தலில் இவரே துணைப் பிரதமராக ஆகும் அளவுக்கு விட்டிருக்கின்றது. போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

நாட்டில் ஒவ்வொரு மூலைகளில் இருந்தும் அடிவாங்கத் தயாரானது தொழிற்கட்சி. அவுஸ்திரேலியாவின் மிகப்பெரிய மாநிலமான நியூசவுத்வேல்ஸ் மாநிலத்திலும் ஒரு அதிகாரப் போட்டி வந்து Kristina Keneally என்ற பெண் பிரதமரை பொம்மையாக நிறுத்திக் காரியம் பண்ணுகிறார்கள் முன்னர் மாநிலப்பிரதமராக இருந்த Nathan Rees ஐ வேண்டாது வெறுத்து ஒதுக்கிய கட்சிக்காரர்கள். Nathan Rees இன் சாபமோ என்னமோ சமீபத்தில் Penrith என்ற இடத்தில் நடந்த இடைத்தேர்தலில் 37 வருச சரித்திரத்தில் தொழிற்கட்சி தன் கதிரையை லிபரலுக்குத் தாரை வார்த்தது ஒரு பானை சோத்துக்கு ஒரு சோறு பதம்.

இப்படியாக மெல்ல மெல்ல தொழிற்கட்சியின் தேனிலவுக்காலம் அஸ்தமிக்குமோ என எண்ணும் வேளை நியூசவுத்வேல்ஸ் இற்கு Kristina Keneally வாய்த்தது போல மத்திய அரசியலில் Julia Gillard அகப்பட்டார். Julia Gillard இற்கும் Kevin Rudd க்கும் அரசல்புரசலாக இருந்த ஊடல் பகிரங்கமாக வெடித்தது. இந்த வேளை ஒரு ஆசிய நாடாக இருந்தால் Julia Gillard ஐ ஐ.நா சபை சிறப்புத் தூதுவர் தான் தேடவேண்டிய நிலை இருந்திருக்கும். ஆனால் இங்கோ நெஞ்சுரம் மிக்க அந்தப் பெண்மணி தலைமைப் போட்டிக்கு வருவீரா என்று சவால் விட்டார் Kevin Rudd ஐப் பார்த்து இது நடந்தது நேற்று இரவு. இரகசியம் பரகசியமாகி பகிரங்கமாக நேற்று இரவு 10.20 க்கு Kevin Rudd தலைமைப் போட்டியில் தான் போட்டியிடப்போவதாகச் சொன்னார். ஆனால் ஓரிரவுக்குள் அவர் மனதில் என்ன போராட்டம் நடந்ததோ தெரியவில்லை.
இரு சொட்டுக் கண்ணீருடன் " நான் அவுஸ்திரேலிய மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டேன், என்னால் முடிந்த அளவுக்கு என் பணியைச் சிறப்பாகச் செய்திருக்கின்றேன்" என்றவாறே போட்டியிடாமல் மெல்ல விலகிக் கொண்டார் இவர். திறைசேரி அமைச்சராக இருந்த Wayne Swan துணைப்பிரதமராகியிருக்கின்றார்.

இந்தக்கூத்துக்குப் பின்னால் அகழ்வாய்வுத்துறை மீது கொண்டு வரப்பட இருக்கும் super profits tax என்ற புதிய வரிக்கொள்கையும், emissions trading scheme எனப்படும் சூழல் மாசடைதலைக்கட்டுப்படுத்தல் தொடர்பாக எடுக்க முனையும் நடவடிக்கைகளும் கட்சிக்குள்ளேயே அதிருப்தியைச் சம்பாதித்தை முக்கிய காரணியாகச் சொல்லிக் கொள்கிறார்கள்.


இன்னும் ஒரு மூன்று, நான்கு மாதங்கள் பொதுத்தேர்தலுக்கு இருக்கும் நிலையில் Julia Gillard முன்னே சவால்கள் எல்லாப் பக்கமும் இருந்து வரவிருக்கின்றன. ஏற்கனவே கடந்த தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளில் கொடுக்கப்படாதவை, கொடுக்கப்பட்டுச் சொதப்பியவை என்று ஒருபக்கம் மக்களோடு மல்லுக் கட்ட வேண்டிய நிலை. இன்னொரு பக்கம் கட்சிக்குள் இருக்கும் மறைமுகமாக ஆளுமைகளோடு போட்டி போட வேண்டிய நிர்ப்பந்தம். மாநில அளவில் இதுவரை அதிகப்படியான மாநிலங்களில் செல்வாக்குச் செலுத்தி ஆட்சி அதிகாரத்தோடு இருக்கும் தொழிற்கட்சியின் செல்வாக்குச் சரிவு. இவையெல்லாம் எதிர்க்கட்சிக்காரனுக்குத் திருநெல்வேலி இருட்டுக் கடை அல்வா போல. முந்திய தேர்தலில் கடந்த ஆட்சிக்காரனைக் குற்றம் சொல்லியே வந்த நினைப்பு இந்த முறை பலிக்காதே.

அவுஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழகத்தின் அரசியல் விஞ்ஞானப்பீடப் பேராசிரியர் Norman Abjorensen இந்தக் கூத்துக்களைப் பார்த்து இப்படிச் சொல்லியிருக்கின்றார். " Labor's dumping of Rudd was a calculated gamble". அதுதான் உண்மை இன்று Kevin Rudd பலிகடா நாளை Julia Gillard. வரலாறு முக்கியம் அமைச்சரே ;-)

தொடர்பு பட்ட முந்திய இடுகை: இந்த வழியால் போகாதே...!

14 comments:

Pragash said...

கவுண்டமணி சாமிகள். பேர் நல்லாத்தான் இருக்கு. அவுஸ்திரேலிய அரசியல்?... இருந்தாலும் சிறிலங்காக் காரன், இந்தியாக்காரன் இவங்களை ஓவர்டேக் பண்ண முடியாது.

கானா பிரபா said...

வாங்கோ பிரகாஷ், எங்கட நாடுகளில் இருப்பவர்கள் பி.எச்.டி முடித்தவை எல்லோ

துளசி கோபால் said...

பிரபா,

இதுலேகூட 'நாங்கதான்' முன்னோடிகள்:-))))

நியூஸியின் முதல் பெண் பிரதமரும் அதிரடியா பதவிக்கு வந்தவர்தான்:-)

http://thulasidhalam.blogspot.com/2007/05/63.html

நேரம் இருந்தால் பாருங்க!

கானா பிரபா said...

வாங்க துளசிம்மா,

அயல்நாட்டுக்காரங்களா இருக்கோமே என்ற உரிமையில் தான் அரசியலும் அதே மாதிரி இருக்கோ ;)

http://rkguru.blogspot.com/ said...

kangaru yenna ippadi thavuthu....

உங்களுக்கு ஓட்டு போட்டாச்சு..
http://rkguru.blogspot.com/2010/06/blog-post_24.html

jagadeesh said...

tony abbott is a dangerous man, here i mention about his medicare policy. he wants to remove the medicare and estabilish private insurance, like england.

Anonymous said...

This is just change in leadership. No change in Policy.
When it comes to liberal party, there is no policy.

கானா பிரபா said...

வருகைக்கு மிக்க நன்றி குரு

கானா பிரபா said...

jagadeesh said...
tony abbott is a dangerous man, here i mention about his medicare policy.
//

லிபரல் கட்சியின் கொள்கை மக்களோடு நெருக்கமாகும் வரை யார் தலைமைக்கு வந்தாலும் அதிக செல்வாக்கைப் பெற முடியாது என்பதையே இப்போது கில்லார்ட் வந்தபோதும் tony abbott இற்கு செல்வாக்குச் சரிவு ஏற்பட்டதன் மூலம் காணமுடிகிறது.

கானா பிரபா said...

சின்ன அம்மிணி said...

This is just change in leadership. No change in Policy.
When it comes to liberal party, there is no policy.//

சரியாத்தான் சொல்லியிருக்கீங்க, மக்கள் அவ்வளவு சுலபமா ஏமாறி விடுவார்களா

Pragash said...

புதிய பெருமாட்டி அவுசியில வந்து நடுத்தெருவில நிக்கிற எங்கடை அகதிச்சனங்களுக்கு ஏதும் கருணை காட்டுவாவோ?

கானா பிரபா said...

பிரகாஷ்,

புதிய பெருமாட்டியால் ஒன்றுமே செய்துவிட முடியாது, இன்று அவுஸ்திரேலியர்களால் இரண்டாவது பெரும் பிரச்சனையாக படகு மூலம் வரும் அகதிகள் பிரச்சனையே பார்க்கப்படுகின்றது. இதை மனிதாபிமான அடிப்படையில் அன்றி நாட்டின் பாதுகாப்புப் பிரச்சனையாகவே பெரும்பான்மையால் பார்க்கப்படுகின்றது. எனவே இருக்கும் அரசும் இனி வரப்போகும் அரசும் இந்த விடயத்தில் பெரும் இறுக்கங்களைக் கொண்டுவரும் என்பதை ஊகிக்கலாம். மற்றப்படி நமது இணையமொன்றில் ஜீலியாவின் வருகை அகதிகளுக்கு சாதகமாக அமையும் என்பது வடி கட்டின கற்பனை

செல்லி said...

பிரபா
நல்லாயிருக்கு உங்க ஆய்வு, //ஜீலியாவின் வருகை அகதிகளுக்கு சாதகமாக அமையும் என்பது வடி கட்டின கற்பனை//
மறுக்கப்பட முடியா உண்மை

கானா பிரபா said...

வாங்கோ செல்லி கன காலத்துக்குப் பிறகு